உங்களை மெய்மறக்கச் செய்யும் உலகின் அழகிய ரயில் வழித்தடங்கள்!

By Saravana

கார், பஸ், விமானம், கப்பல் என எந்தவொரு மோட்டார் வாகனங்களின் பயணத்திலும் இல்லாத சவுகரியத்தையும், அச்சம் குறைவான பயண சுகத்தையும் ரயில்கள் வழங்குகின்றன.

இந்த பயண சுகத்தை அதிகரிப்பதில், அந்த ரயில்கள் செல்லும் வழித்தடங்களும் முக்கிய காரணமாக அமைகின்றன. அதில், சில ரயில் பயணங்களை வாழ்வில் மறக்க முடியாத உன்னத அனுபவத்தை பெற்றுத் தருகின்றன.


அனைவரையும் ஈர்க்கும் தடங்கள்

அனைவரையும் ஈர்க்கும் தடங்கள்

இயற்கை காட்சிகளை சுவைத்தபடி செல்லும் ரயில் வழித்தடங்கள் இருந்தாலும், டேஸ்ட் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் சிலாகித்து கூறும் ரயில் வழித்தடங்கள், சிலருக்கு பிடிக்காது. ஆனால், அனைவரின் பயணத்தையும் மறக்க முடியாத அளவிற்கு மாற்றும் சக்தி கொண்ட உலகின் இயற்கை எழில் கொஞ்சும் ரயில் வழித்தடங்களை தொகுத்துள்ளோம். அதனை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கண்டு களிக்கலாம்.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

உலக சுற்றுலாப் பயணிகளின் பூலோக சொர்க்கமாக கருதப்படும் சுவிட்சர்லாந்தில் பல இயற்கை எழில் கொஞ்சும் ரயில் வழித்தடங்கள் அமைந்துள்ளன. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகை கண்டு ரசித்தவாறே செல்வதற்கான முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாக அந்நாட்டின் ஸெர்மாட்டிலிருந்து செயிண்ட் மோர்டிஸ் செல்லும் வழித்தடத்தை கூறலாம். இதில் இயக்கப்படும் கிளேசியர் எக்ஸ்பிரஸ் ரயில் 91 சுரங்கப்பாதைகள், 291 பாலங்களை கடந்து 7 மணி நேரம் பயணிக்கிறது. சுவிட்சர்லாந்து சுற்றுலா செல்வபர்கள் இந்த வழித்தடத்தை தவறவிடாதீர்.

Picture credit: Wiki Commons

Champer

 கொலராடோ, அமெரிக்கா

கொலராடோ, அமெரிக்கா

தெற்கு கொலராடோ பகுதியில் துராங்கோ மற்றும் சில்வர்டன் இடையிலான மலை ரயில் பாதையும் சுற்றுலா செல்பவர்களுக்கான சிறந்த ரயில் வழித்தடம். நூற்றாண்டு பெருமைமிக்க இந்த வழித்தடத்தில் 1920 ஆண்டு தயாரிக்கப்பட்ட நீராவி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 6 டன் நிலக்கரி, 10,000 கேலன் தண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த ரயில், மணிக்கு 18 மைல் வேகத்தில் செல்லும். பிரபல ஹாலிவுட் சினிமாக்களில் இந்த ரயில் இடம்பெற்றிருக்கிறது.

Picture credit: Facebook

Durango and Silverton

பெரு, தென் அமெரிக்கா

பெரு, தென் அமெரிக்கா

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் மச்சு பிச்சு மலையில் மர்மங்கள் நிறைந்த இன்கா பேரரசின் காலச்சுவடுகளை சுமந்து நிற்கும் பகுதியை காண்பதற்காக விசேஷ வசதிகளுடன் ஹிராம் பின்காம் சொகுசு ரயில் சேவை நடக்கிறது. 1911ல் இன்கா பேரரசின் இந்த வரலாற்று சின்னத்தை ஹிராம் பின்காம் கண்டுபிடித்தார். எந்திரன் படத்தில் இடம்பெறும் கிளிமஞ்சாரோ பாடல் இந்த மலையில்தான் படமாக்கப்பட்டது. மச்சு பிச்சு மலை மட்டுமின்றி, இந்த ரயில் செல்லும் வழித்தடம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திவிடும் அழகு நிறைந்தது.

Picture credit: Hiram Bingham

நியூசிலாந்து

நியூசிலாந்து

நியூசிலாந்தின் தோட்ட நகரமாக குறிப்பிடப்படும் கிறிஸ்ட்சர்ச்சிலிருந்து கிரேமவுத் பகுதி வரை இயக்கப்படும் இந்த ரயில் உலக அளவில் பிரபலமானது. சமவெளி, அச்சமூட்டும் பள்ளத்தாக்குகள், மனதிற்கு குளிர்ச்சியூட்டும் பனி மலைகள் என ஒரு பல்சுவை விருந்தை இந்த ரயில் வழித்தடம் வழங்கும். இந்த வழித்தடத்தில் 5.3 மைல்கள் தூரத்திற்கு மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதை சுற்றுலா பயணிகளுக்கு த்ரில்லை வழங்கும். வாழ்வில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய ரயில் பயணமாக குறிப்பிடுகின்றனர்.

Picture credit: Wiki Commons

John Vogel

வேல்ஸ்

வேல்ஸ்

வேல்ஸ் நாட்டில் 14.5 மைல் தூரத்தை சுற்றி வரும் சுற்றுலா ரயில் சுற்றுலா பயணிகளுக்கு சிலிர்த்திடும் இன்பத்தை அளிக்கும் ரயில் வழித்தடங்களில் ஒன்று. பாரம்பரியம் மிக்க இந்த நீராவி ரயில் முதலில் இந்த பகுதியில் அமைந்துள்ள சுரங்கங்களிலிருந்து பிற பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டது.

Picture credit: Flickr

Zabdiel

 கனடா

கனடா

கனடாவின், அல்பெர்டாவிலிருந்து, வான்கூவரை இணைக்கும் இந்த ரயில் வழித்தடம் சுற்றுலாப் பயணிகளின் மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் முதன்மையாக விளங்குகிறது. 2 நாட்கள் பயண நேரத்தை இனிமையாக கழிக்க உதவும் இந்த ரயில் வழித்தடத்தில் இயக்கப்படும் ராக்கி மவுன்டெய்னர் ரயிலிலும் ஏராளமான சொகுசு வசதிகளையும், உணவு பதார்த்தங்களையும் சுவைத்தபடி செல்ல முடியும்.

Picture credit: Flickr

Sebastien Launay

அரிஸோனா, அமெரிக்கா

அரிஸோனா, அமெரிக்கா

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் 130 மைல் தொலைவுக்கு இயக்கப்படும் சுற்றுலா ரயில் செல்லும் வழித்தடமும் பார்க்க வேண்டிய ஒன்றாக கூறுகின்றனர். இயற்கையின் எழில் கொட்டிக்கிடக்கும் இந்த ரயில் வழித்தடத்தை தவறவிட வேண்டாம் என்கின்றனர் சுற்றுலாத் துறை ஆலோசகர்கள். இரண்டேகால் மணி நேர ரயில் பயணம் உங்களை சோர்வடைய செய்யாது.

Picture credit: Flickr

Drewj1946

 ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து

எடின்பர்க்கிலிருந்து ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் பகுதியை இணைக்கும் இந்த ரயில் வழித்தடமும் பாரம்பரியம் மிக்கதாக குறிப்பிடுகின்றனர். இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களிலும் சொகுசு வசதிகள் கொண்டதாக இருப்பதால், பயண சுகத்தை அள்ளித்தரம். இந்த ரயில் பயணத்தின்போது கில்ட் என்ற பாரம்பரிய உடையை வாடகைக்கு எடுத்து அணிந்து செல்லலாம்.

Picture credit: Flickr

Train Chartering and Private Rail Cars

மஹாராஜா எக்ஸ்பிரஸ், இந்தியா

மஹாராஜா எக்ஸ்பிரஸ், இந்தியா

2010ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஹாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஒன்று. பெயருக்கு தகுந்தாற்போல் ராஜ மரியாதையும், வசதிகளையும் பயணிகளுக்கு வழங்குகிறது. பாரம்பரியம் மிக்க பகுதிகளை இணைக்கும் வகையில் செல்கிறது. ஒவ்வொரு பெட்டிக்கும் மஹாராஜாக்கள் அணியும் விலையுயர்ந்த வைரம், வைடூரியம் போன்ற ஆபரண கற்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. மொத்தம் 88 பேர் பயணம் செய்யலாம். ஓர் இரவுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Picture credit: Flickr

Train Chartering and Private Rails Cars

டவுரோ லைன், போர்ச்சுகல்

டவுரோ லைன், போர்ச்சுகல்

போர்ச்சுகல் நாட்டின் போர்ட்டோவிலிருந்து போசினோவை இணைக்கும் டவுரோ லைன் ரயில் சேவையும் சுற்றுலா விரும்பிகளுக்கு உகந்த ரயில் வழித்தடம். ஆற்றுப் படுகையை ஒட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்த வழித்தடத்தில் 30 பாலங்களும், 26 சுரங்கப் பாதைகளும் அமைந்துள்ளன. டவுரோ ஆற்றையும், பள்ளத்தாக்கு பகுதிகளையும் கண்டு ரசித்தவாறே பயணத்தை நிறைவு செய்யலாம்.

Picture credit: Flickr

Francisco Oliveira

 ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

இது கொஞ்சம் நீளமான வழித்தடம். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து டார்வின் வரை செல்லும் 1,845 மைல் தொலை கொண்ட இந்த ரயில் வழித்தடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு உன்னதமான வழித்தடமாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் செல்லும் தி கான் எக்ஸ்பிரஸ் ரயில் அலிஸ் ஸ்பிரிங்ஸ் மற்றும் கேத்தரின் ஆகிய ரயில் நிலையங்களில் 4 மணிநேரம் இந்த ரயில் நிற்கிறது. அப்போது, பயணிகள் இறங்கி அந்த நகரங்களின் அழகை கண்டு ரசித்து வரலாம். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் இருக்கின்றன.

Picture credit: Flickr

Train Chartering and Private Rail Cars

அலாஸ்கா, அமெரிக்கா

அலாஸ்கா, அமெரிக்கா

வனப் பகுதி வழியாக செல்லும் இந்த வழித்தடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் புதுமையான அனுபவத்தை வழங்கும். டெனாலி ஸ்டார் ரயிலில் அன்கரேஜ் முதல் ஃபேர்பேங்க்ஸ் வரை செல்லும் இந்த ரயில் வழித்தடத்தில் டபுள் டெக்கர் ரயிலில் பல காணற்கரிய காட்சிகளை கண்டு ரசித்திடலாம்.

Picture credit: Flickr

Thor Mark

 கலிஃபோர்னியா, அமெரிக்கா

கலிஃபோர்னியா, அமெரிக்கா

1860ல் அமைக்கப்பட்ட இந்த வழித்தடம் ஒயின் விரும்பிகளுக்கும், ஓய்வு விரும்பிகளுக்குமானது. திராட்சை தோட்டங்களை தழுவிச் செல்லும் இந்த 36 மைல் நீள ரயில் வழித்தடமும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஒன்று.

Picture credit: Flickr

Arturo Yee

ஜெர்மனி

ஜெர்மனி

ஜெர்மனியின் மெயின்ஸ் மற்றும் கோப்லென்ஸ் பகுதிகளை இணைக்கும் ரைன் வேலி லைன் வழித்தடமும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்திற்கு புதிய அர்த்தத்தை வழங்கும்.

 ஹங்கேரி - துருக்கி

ஹங்கேரி - துருக்கி

புதாபெஸ்ட் மற்றும் இஸ்தான்புல் நகரங்களை இணைக்கும் ரயில் வழித்தடத்தில் ஏராளமான பாரம்பரிய சின்னங்கள் அமைந்திருக்கும் பகுதிகள் உள்ளன. 4 நாட்கள் பயணிக்கும் தானூப் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால் வழியில் இருக்கும் பகுதிகளை இறங்கிச் சென்று பார்த்து வரும் வசதியும் இருக்கிறது.

தென்ஆப்ரிக்கா

தென்ஆப்ரிக்கா

கேப்டவுன் நகரையும், ஜோகன்னஸ்பர்க் நகரையும் இணைக்கும் ரயில் வழித்தடத்தில் இயற்கையின் எழிலை பருகிக் கொண்டே செல்லும் வாய்ப்பை பயணிகள் பெறலாம்.

Picture credit: Flickr

Train Chartering and Private Rail Cars

டிரான்ஸ் - சைபீரியன் எக்ஸ்பிரஸ்

டிரான்ஸ் - சைபீரியன் எக்ஸ்பிரஸ்

மாஸ்கோ மற்றும் விளாடிவோஸ்டாக் நகங்களை இணைக்கும் கிழக்கு கடற்கரை ரயில் வழித்தடம் இயற்கை எழிலை ஆடையாக உடுத்தி பயணிகளுக்கு உற்சாகமளிக்கிறது. பல்வேறு நில அமைப்புகள், கலாச்சாரங்களை கடந்து செல்லும் 9,000 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் வழித்தடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாக இருக்கிறது.

Picture credit: Flickr

Viewminder

ராயல் கனடியன் பசிஃபிக்

ராயல் கனடியன் பசிஃபிக்

வட அமெரிக்காவின் சிறந்த சுற்றுலா ரயில்களில் ஒன்றாக அறியப்படும் ராயல் கனடியன் பசிஃபிக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழித்தடமும் பயணிகளுக்கு வித்தியாசமான பயண அனுபவத்தை தரும். 6 நாட்களில் 1,015 கிமீ தூரத்தை இந்த ரயில் சுற்றி வருகிறது. எமரால்டு ஏரி, யோகோ தேசிய பூங்கா மற்றும் பாரம்பரிய பகுதிகளில் இந்த ரயில் நின்று செல்கிறது.

Picture credit: Flickr

Train Chartering and Private Rail Cars

 சிம்ப்ளான் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்

சிம்ப்ளான் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ்

சொகுசையும், இனிமையையும் அனுபவிக்கும் வகையில் இயக்கப்படும் இந்த ரயிலும், ரயில் செல்லும் வழித்தடமும் உலக சுற்றுலாப் பயணிகளால் கொண்டாடப்படும் ஒன்று. பாரிஸ் மற்றும் இஸ்தான்புல் இடையில் செல்லும் இந்த ரயில் வழித்தடத்திலும் எண்ணிடலடங்கா இயற்கை காட்சிகள் நிறைந்து கிடக்கின்றன.

Picture credit: Flickr

Cricri Haze

 ஸ்பெயின்

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் அல் அன்டலஸ் எக்ஸ்பிரஸ் ரயிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. 7 நாட்கள் சுற்றுலாவாக செல்லும் இந்த ரயிலில் ஏராளமான சொகுசு வசதிகள் நிறைந்தது. முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. சுத்தத்திற்கும், சுகாதாரமான உணவிற்கும் இந்த ரயில் பெயர்பெற்றது. தொடர்ந்து உலக அளவிலான பிரபல ரயில் வழித்தடங்களை பார்த்து விட்டோம். அடுத்து இந்தியாவில் இருக்கும் அழகிய வழித்தடங்களையும் பார்த்துவிடலாம்.

 ஜம்மு-காஸிகுண்ட்

ஜம்மு-காஸிகுண்ட்

ஜம்மு-காஸிகுண்ட் இடையில் அமைக்கப்பட்டு வரும் இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இயக்கப்படும் போது அது நிச்சயம் சுற்றுலாப் பயணிகளை புதிய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. குளிர்காலங்களில் முழுவதும் எங்கு காணினும் வெண் போர்வையாக பரந்து கிடக்கும் பனிப் படலங்களை கண்டு ரசித்துக் கொண்டே செல்லலாம்.

ரத்னகிரி - மங்களூர்

ரத்னகிரி - மங்களூர்

வியக்க வைக்கும் இயற்கை அழகை கண்டு ரசித்துக் கொண்டே செல்வதற்கான மற்றொரு வழித்தடம் ரத்னகிரி-மங்களூர் இடையிலான ரயில் வழித்தடம். கொங்கன் ரயில் மண்டலத்தில் இருக்கும் இந்த ரயில் வழித்தடம் ஏராளமான ஆறுகள் மற்றும் நீர்ப்பகுதிகளை கடந்து சென்று நம் கண்களையும், மனதையும் ஈரப்படுத்தும்.

ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில்

110 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை அளித்து வரும் ஊட்டி மலை ரயில் தனது பயணத்தின் மூலம் லட்சோபலட்சம் மக்களின் கண்களுக்கு நித்தமும் விருந்தளித்து வருகிறது. தென் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதில் இந்த ரயிலுக்கு முக்கிய பங்கு உண்டு. ஊட்டி செல்லும்போது இந்த ரயிலில் பயணிக்க மறவாதீர்.

ஜெய்ப்பூர்-ஜெய்சால்மர்

ஜெய்ப்பூர்-ஜெய்சால்மர்

ராஜஸ்தான் பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஜெய்சால்மர் நகர் ஒட்டக சவாரிக்கு பெயர் போனது. ஜெய்சால்மருக்கும், ஜெய்ப்பூருக்கும் இடையில் இருக்கும் ரயில் வழித்தடம் தார் பாலை வனத்தை கடந்து வருகிறது.

பாம்பன் ரயில் பாலம்

பாம்பன் ரயில் பாலம்

பொறியியல் துறையின் வலிமைக்கு சான்றாக திகழும் தமிழகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாம்பன் ரயில் பாலமும் பயணத்தின்போது புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். ராமேஸ்வரம் தீவை இணைக்கும் இந்த பாலம்தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய கடல் வழி ரயில் பாதை. உலகம் முழுவதும் இருக்கும் ரயில் பாதைகளை படித்தும், பார்த்தும் பரவசமைடைந்தாலும், நம் தமிழகத்தில் இருக்கும் இந்த பாம்பன் பாலத்தில் செல்லும் ரயிலில் ஒரு முறையாவது சென்றுவிடுங்கள்.

மெய்மறக்கச் செய்யும் ரயில் வழித்தடங்கள்

ரயில் பயணங்கள் ஒவ்வொன்றுமே மறக்க முடியாத அனுபவத்தை வழங்குபவைத்தான். அந்த வகையில், உங்களது மனதை வருடிய ரயில் வழித்தடத்தை கருத்துப் பெட்டியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
If you thought ships or planes were the best way to travel... why not checkout these train rides, which are considered to be the world's most scenic train routes. After reading this do let us know if you have changed your mind or not?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X