ஃபோர்சே, மெர்சிடிஸ், ஃபெராரி கார் விலைக்கு ஈடாக கிடைக்கும் ஜெட் விமானம்..!!

Written By:

தனியார் ஜெட் விமானங்கள் என்றாலே அது பெரும் கோடீஸ்வரர்களும், பணம் படைத்தவர்கள் மட்டுமே வைத்துக்கொண்டிருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.. சாதாரண கோடீஸ்வரர்களால் கூட வாங்க முடியாத விலை கொண்டவை ஜெட் விமானங்கள்.

ஜெட் விமானங்களின் தொடக்க விலையே 25 கோடி ரூபாயிலிருந்து தான் துவங்குகிறது. அப்படி இருக்க ஒரு சொகுசுக் கார் வாங்கக்கூடிய விலையில் தனியார் ஜெட் விமானம் கிடைக்கிறது என்றால் நம்புவது கடினம் தான். இருந்தாலும் இது உண்மையே.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த சிர்ரஸ் ஏர்கிராஃப்ட் என்ற தனியார் நிறுவனம் ஒன்று உலகின் மிகவும் மலிவான ஜெட் விமானத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சிர்ரஸ் ஏர்கிராஃப் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக பலகட்ட சோதனைகளும், முயற்சிகளும் மேற்கொண்டு ‘சிர்ரஸ் - தி விஷன் ஜெட்' என்ற மலிவு விலை கொண்ட ஜெட் விமானத்தை உருவாக்கி வந்தது.

இந்நிறுவனம் 1984ல் துவக்கப்பட்டது, 16 ஆண்டுகாலமாக விமானத் தயாரிப்பில் ஈடுபட்டு இதுவரையிலும் 6000ற்கும் மேற்பட்ட விமானங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தி விஷன் ஜெட் விமானத்திற்கு விமான நிர்வாகத்தின் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தொழில்முறையில் அதிகளவிலான ஜெட் விமானங்களை இந்த நிறுவனத்தால் தயாரித்து வழங்க முடியும்.

தி விஷன் ஜெட்: ஒற்றை இஞ்சின் கொண்ட 7 சீட்கள் கொண்ட விமானம் ஆகும். விலை மலிவானது என்றாலும் இது மற்ற ஜெட் விமானங்களுக்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல, சமீபத்திய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகவும் இது உள்ளது. இந்த ஜெட் விமானமானது இதர நிறுவனங்களின் ஜெட் விமானங்களை விட பாதியளவே விலை கொண்டதாகும்.

இந்த தனியார் ஜெட் விமானத்தை ஒரு பைலட் இயக்கலாம், பைலட் உட்பட 7 பயணிகளுக்கான இருக்கை இதில் உள்ளது. இதனை இயக்க கமர்சியல் பைலட் உரிமம் தேவைப்படும் என்பதனை நினைவில் கொள்ளவும்.

இந்த விமானத்தில் வில்லியம்ஸ் எஃப் ஜே33-5ஏ டர்போஃபேன் என்ற இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 1800 பவுண்டுகள் திரஸ்ட்டை வழங்க வல்லது. இந்த ஜெட் விமானம் மேலே எழும்ப 2,036 அடி தூரம் கொண்ட ரன்வே போதுமானது.

இந்த விமானத்தின் மொத்த நீளம் 30.11 அடி (9.42 மீட்டர்), உயரம் 10.11 அடி (3.32மீட்டர்), மொத்த எடை 1,620 கிலோ, இதன் எரிபொருள் கொள்ளளவு 907 கிலோ ஆக உள்ளது.

இந்த விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 556 கிலோமீட்டர்கள் ஆகும். இதே வேகத்தில் இயக்கினால் முழு எரிபொருள் அளவில் 1850 கிலோமீட்டர் தூரம் இதில் பயணிக்கலாம். எனினும் 444 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் 2220 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தின் உட்புறம் நல்ல இடவசதியுடன் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு சீட்டிலும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஃபிளைட் எண்டெர்டெயிண்மெண்ட் சிஸ்டமும் உள்ளது. மேலும் எண்ணத்திற்கு ஏற்ப உட்புறத்தில் மூட் லைட்டிங்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விமானத்தின் முக்கிய அம்சமாக இருப்பது சிர்ரஸ் ஏர்ஃபிரேம் பாராசூட் சிஸ்டம் (CAPS) ஆகும். இந்த பாராசூட் தொழில்நுட்பம் விமானத்தின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாகும் போது கார்களில் உள்ள ஏர் பேக்குகள் போன்று விரிந்து மொத்த விமானத்தையும் பாதுகாப்பாக இது தரை இறக்கிவிடும். இந்த சிஸ்டம் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இது வரையிலும் 120 உயிர்களை இந்த தொழில்நுட்பம் பாதுகாத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொழில்நுட்பம் அடங்கிய ஜெட் விமானமானது விபத்துக்களில் சிக்கியதில் இதுவரையில் ஒரு உயிர் இழப்பு கூட ஏற்பட்டது இல்லை என்பது இதன் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

தி விஷன் ஜெட் விமானத்தால் அதிகபட்சமாக 28,000 அடி உயர பறக்க முடியும். இந்த ஜெட் விமானத்திற்கு ஏற்கெனவே ஆர்டர்கள் குவிந்து வருகின்றது. இதுவரையிலும் 600 ஜெட் விமானங்களுக்கான ஆர்டர்கள் வந்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் விலை 1.96 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய் ஆகும். மெர்சிடிஸ், ஃபெராரி, ரோல்ஸ் ராய்ஸ், ஃபோர்சே போன்ற சொகுசுக் கார் நிறுவனங்களில் சில மாடல்கள் இந்த விலையை விட கூடுதல் என்பது கவனிக்கத்தக்கது.

மலிவு விலை கொண்ட இந்த ஜெட் விமானம், ஆகாய மார்க்க போக்குவரத்திலும், வாணூர்தி சந்தையிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

English summary
Read in Tamil about world's cheapest private jet comes for sale for general people. cost and details.
Please Wait while comments are loading...

Latest Photos