ஏமாற்றிய கவாஸாகி டீலரிடம் டெமோ பைக்கை அதிரடியாக டெலிவிரி பெற்ற சென்னை இளைஞர்!

Written By:

முழு பணத்தை செலுத்தியும் சூப்பர் பைக்கை டெலிவிரி செய்யாத மும்பை கவாஸாகி டீலரிடம் அதிரடியாக பைக்கை பெற்று திரும்பியிருக்கிறார் சென்னையை சேர்ந்த வாடிக்கையாளரான முகம்மது முபாரக்.

மும்பை பால்ம் பீச் பகுதியில் எஸ்என்கே மோட்டார்ஸ் என்ற பெயரில் கவாஸாகி சூப்பர் பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ஷோரூம் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஷோரூம்தான் மும்பையில் திறக்கப்பட்ட கவாஸாகி சூப்பர் பைக் நிறுவனத்தின் முதல் ஷோரூம்.

இந்தநிலையில், வாடிக்கையாளர்களிடத்தில் பல லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு பைக்குகளை டெலிவிரி செய்யாமல் இழுத்தடிப்பதாக எஸ்என்கே மோட்டார்ஸ் மீது வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த கவாஸாகி நிறுவனம், எஸ்என்கே மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த டீலர் உரிமத்தை அதிரடியாக ரத்து செய்தது.

இந்த நிலையில், சென்னையில் சூப்பர் பைக்குகளுக்கான ஸ்பேர்பார்ட்ஸ் கடை நடத்தி வரும் முகம்மது முபாரக் [25] என்ற இளைஞர் கவாஸாகி ZX14R சூப்பர் பைக்கின் ஓலின்ஸ் எடிசன் என்ற விசேஷ சூப்பர் பைக் மாடலை கடந்த மே மாதம் மும்பையிலுள்ள எஸ்என்கே மோட்டார்ஸ் ஷோரூமில் முன்பதிவு செய்துள்ளார்.

இந்த ஓலின்ஸ் எடிசன் மாடல் மும்பை எஸ்என்கே மோட்டார்ஸ் நிறுவனத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், அங்கு சென்று முன்பதிவு செய்துள்ளார். மேலும், பைக்கிற்கு உண்டான முழு பணத்தையும் செலுத்திவிட்டார்.

அடுத்த 20 நாட்களில் பைக் டெலிவிரி தரப்படும் என டீலரில் இருந்த விற்பனை பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஆனால், சொன்னபடி, முபராக்கிற்கு பைக் டெலிவிரி தரப்படவில்லை. பைக் இன்னும் கவாஸாகி நிறுவனத்திலிருந்து அனுப்பப்படவில்லை என சொல்லி தொடர்ந்து இழுத்தடித்ததால், நேராக மும்பை பறந்துள்ளார்.

ஷோரூமில் சென்று விசாரித்தபோது, அவர்கள் தொடர்ந்து மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளனர். இதனால், ஷாக் ஆகி நின்ற முபராக், அந்த ஷோரூமில் அவர் முன்பதிவு செய்திருந்த அதே கவாஸாகி இசட்எக்ஸ்14ஆர் ஓலின்ஸ் எடிசன் மாடலின் டெமோ ஒன்று பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தது. அந்த டெமோ பைக்கை உடனடியாக டெலிவிரி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், ஷோரூமில் இருந்தவர்கள் மசியவில்லை.

இதையடுத்து, அங்கு இருந்தவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்து அந்த பைக்கை டெலிவிரி தருமாறு சொல்லியிருக்கிறார். கடைசியில் போலீசில் புகார் அளிக்கப்போவதாக கூறியதையடுத்து, அந்த டெமோ பைக்கை டெலிவிரி தர சம்மதித்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து புனே நகருக்கு சென்று அங்குள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அந்த பைக்கை பதிவு செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து சென்னைக்கு பெங்களூர் வழியாக பைக்கிலையே ஊர் திரும்ப முடிவு செய்தார். ஆனால், புனேயிலிருந்து பெங்களூர் வரும் வழியிலேயே பைக்கில் கிளட்ச்சிற்கான சிறிய ஸ்கூரூ ஒன்று கழன்று  பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து எஸ்என்கே மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு போன் செய்துள்ளார். அவர்கள் பெங்களூரிலிக்கும் கவாஸாகி ஷோரூமில் சரிசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அதன்பின் பெங்களூரில் உள்ள ஷோரூமில் உள்ள சர்வீஸ் மையத்தில் சரி செய்துள்ளார். ஆனாலும், கிளட்ச் பிரச்னை தொடர்கிறதாம்.

இந்தநிலையில், கடந்த வாரம் எஸ்என்கே மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த ஷோரூமிருந்து கடைசியாக பைக்கை டெலிவிரி பெற்ற வாடிக்கையாளர் முபாரக்தான் என்று கூறப்படுகிறது. முபராக்கின் நண்பரான சென்னையை இர்பான் என்பவரும் அதே ஷோரூமில் இதே மாடலுக்கு பணத்தை கட்டி காத்திருக்கிறாராம்.

இதுதவிர, 11 வாடிக்கையாளர்களுக்கு எஸ்என்கே மோட்டார்ஸ் பைக்கை டெலிவிரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, மும்பையை சேர்ந்த பத்திரிக்கை நிறுவனம் எஸ்என்கே மோட்டார்ஸ் உரிமையாளரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது.

 

 

ஆனால், அவர் சிக்காமல் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், அந்த ஷோரூமை சேர்ந்த அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை பகுதி பகுதியாக திருப்பி தர இருப்பதாக கூறியிருக்கிறார்.

இதனிடையே, பெங்களூரில் உள்ள கவாஸாகி ஷோரூமின் சர்வீஸ் தரமும் சரியில்லை, கவாஸாகி போன்ற பெரிய நிறுவனங்களின் சர்வீஸ் தரம் இவ்வாறு இருக்கக்கூடாது என்று முபராக் தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கமளித்துள்ள பெங்களூர் கவாஸாகி ஷோரூம் நிர்வாகி, முபராக் வந்த அன்று பல அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் விடுமுறையில் இருந்தனர்.

 

 

எனவே, புதிதாக சேர்ந்த மெக்கானிக்கை வைத்து சரிசெய்யும் நிலை ஏற்பட்டது. சர்வீஸ் தரத்தில் எப்போது சிறப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Fed up with delay in delivery, customer rides off with demo bike. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos