இரண்டு ஆஃப்ரோடு ரக கவாஸாகி பைக்குகள் அறிமுகம்... ஷாக்கடிக்கும் விலையில்...!!

Written By:

இந்தியாவில் ஆஃப்ரோடு பைக்குகளுக்கான மவுசு மெல்ல கூடி வருகிறது. அதற்கு ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்ட மாடல்கள் குறைவாகவே விற்பனைக்கு கிடைக்கின்றன.

இந்த குறையை போக்கும் விதத்தில், இரண்டு புதிய ஆஃப்ரோடு பைக் மாடல்களை கவாஸாகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அந்த மாடல்களின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கேஎக்ஸ்100 மற்றும் கேஎக்ஸ்250எஃப் என்ற பெயரில் அந்த இரண்டு மாடல்களும் இந்திய மண்ணில் களம் புகுந்துள்ளன. இவை இரண்டுமே சாதாரண சாலைகளில் ஓட்ட முடியாது. கேஎக்ஸ்100 பைக்கில் 99சிசி திறன் கொண்ட 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. கவாஸாகி பவர் வால்வ் சிஸ்டம் கொண்ட மாடல் என்பதால், செயல்திறன் மிக சிறப்பாக இருக்கும்.

இந்த பைக்கின் முன்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதிகொண்ட 36மிமீ ஃபோர்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை 275மிமீ வரை மேலும், கீழும் நகரும் வசதி கொண்டதால், கரடுமுரடான சாலைகளில் எந்த பிரச்னையும் ஏற்படாது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும், 275மிமீ வரை நகரும் வசதி கொண்டது. இந்த மோட்டார்சைக்கிள் வெறும் 77 கிலோ எடை கொண்டிருப்பதால், இளம் பைக் பந்தய வீரர்களுக்கு சிறந்த சாய்ஸாக அமையும்.

அடுத்து, கேஎக்ஸ்250எஃப் பைக் இந்த ரகத்தில் மிகவும் வெற்றிகரமான, பிரபலமான மாடல். இந்த பைக்கில் 249சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் ட்யூவல் இன்ஜெக்டர்கள் கொண்டிருப்பதால், மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

இந்த பைக்கில் லான்ச் கன்ட்ரோல் சிஸ்டம் இருப்பதால், பந்தய களத்தில் வண்டியை கிளப்பும்போது அதிவிரைவான பிக்கப்பை வழங்கும். இது பந்தய கார்கள் மற்றும் பைக்குகளில் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக, டிராக் வகை பந்தயங்களில் இந்த வசதி அவசியமாக இருக்கிறது.

கேஎக்ஸ்250எஃப் பைக் அலுமினியம் பெரிமீட்டர் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கில் இருக்கும் ஷோவா எஸ்எஃப்எஃப் ஃபோர்க் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் அமைப்பு உள்ளது.

கேஎக்ஸ்100 பைக் ரூ.4.68 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், கேஎக்ஸ்250எஃப் பைக் ரூ.7.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. அதாவது, அமெரிக்காவில் விற்பனையாகும் கேஎக்ஸ்100 மாடலைவிட இந்தியாவில் 50 சதவீதம் கூடுதல் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் கேஎக்ஸ்250எஃப் மாடல் 26.5 சதவீதம் கூடுதல் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இவை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுவதுதான் விலை அதிகமாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. சாதாரண சாலைகளில் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களையும் ஓட்ட முடியாது என்பதால், சாலை வரி கிடையாது. அதேநேரத்தில், பதிவுக் கட்டணம் மற்றும் இதர வரிகள் இருக்கும்.

English summary
The KX100 and KX250F will be sold through Kawasaki's dealership network throughout the country.
Please Wait while comments are loading...

Latest Photos