2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட உலகின் டாப் - 10 மோட்டார்சைக்கிள்கள்!

2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட உலகின் டாப் 10 மோட்டார்சைக்கிள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.

By Saravana Rajan

ஆட்டோமொபைல் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் வருவதற்கு உலகப் போர்கள் மிக முக்கியமான பங்கு வகித்துள்ளன. அப்போதைய காலக்கட்டத்தில்தான் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் பரிசார்த்த முறையிலும், பயன்பாட்டிற்கும் வேகமாக அறிமுகம் செய்யப்பட்டன.

அந்த வகையில், இப்போது போன்று சிறப்பான சாலை கட்டமைப்பு இல்லாத அந்த காலத்தில், கரடுமுரடான சாலைகளில் ராணுவ வாகனங்களை செலுத்துவதற்கு ஏதுவாக ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தனர்.

ராணுவ தொழில்நுட்பம்

இரண்டாம் உலகப்போருக்கு பின் எஸ்யூவி வகை ராணுவ வாகனங்களுக்கு வேலை இல்லாது போனதால், அதனை ஏல முறையில் விற்பனை செய்தனர். இதனால், அந்த ராணுவ வாகனங்கள் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. அதனை விவசாயிகளும், மலைப் பாங்கான பகுதிகளில் வசிப்போரும் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்த துவங்கினர்.

லேண்ட்ரோவர் ஆர்வம்

வாடிக்கையாளர்களிடம் எழுந்த வரவேற்பை கண்டு லேண்ட்ரோவர், சுபரூ உள்ளிட்ட நிறுவனங்கள் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களை சந்தைக்கு கொண்டு வந்தன. அதிலிருந்து, ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட கார்களின் தொழில்நுட்பம் இன்று பல்வேறு நிலைகளை எட்டியிருக்கிறது.

சிக்கலான தொழில்நுட்பம்

அதேவேளையில், இருசக்கர வாகன மார்க்கெட்டில் இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது. எஞ்சின் பவரை முன்புற சக்கரத்திற்கு வழங்குவதில், தொழில்நுட்ப ரீதியில் சிக்கலானதாகவே இருந்து வருகிறது.

தொடர் முயற்சி

இருந்தாலும் சில நிறுவனங்கள் 2 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி பரிசோதனைகள் நடத்தி உள்ளன. அவை வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதில் சந்தேகம் இருந்ததால், அவை சோதனை முயற்சியாகவே நின்றுவிட்டன. சில மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தியிலும் இருக்கின்றன.

டாப் 10 மாடல்கள்

அந்த வகையில், இருசக்கரங்களுக்கும் எஞ்சின் பவரை செலுத்தக்கூடிய 2 வீல் டிரைவ் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டாப் - 10 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

10. சுஸுகி எக்ஸ்-XF5

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1980-90க்கு இடையிலான காலக்கட்டத்தில் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மோட்டார்சைக்கிள்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வர முனைந்தது. 1991ம் ஆண்டு 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட எக்ஸ்எஃப்-4, எக்ஸ்எஃப்425 அக்லி டக் ஸ்கூட்டர் மற்றும் எக்ஸ்எஃப்-5 என்டியூரோ ஆகிய பல மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மாடல்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தது. அதில், எக்ஸ்எஃப்-5 என்டியூரோ மோட்டார்சைக்கிள் நடைமுறை பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தது.

அசத்திய சுஸுகி

எஞ்சின் பவரை பின்புற சக்கரத்திற்கு செலுத்துவதோடு, முன்புற சக்கரத்திற்கும் செலுத்தும் அமைப்புடன் அது கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக, முன்புற சக்கரத்தின் இடதுபக்கத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன் இணைந்த டிரைவ் சாஃப்ட் கொடுக்கப்பட்டிருந்தது. எஞ்சினிலிருந்து பவர் ஃபோர்க்கின் தலைப்பாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து டிரைவ்சாஃப்ட் மூலமாக முன் சக்கரத்திற்கு பவரை செலுத்த வேண்டியிருந்தது. இது மிகவும் சிக்கலான தொழில்நுட்பம். அதேநேரத்தில், பைக்கின் எடை 7.8 கிலோ மட்டுமே கூடுதலாக இருந்தது.

 09. கேடிஎம் 2WD புரோட்டோடைப்

கடந்த 2004ம் ஆண்டு கேடிஎம் நிறுவனம் ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட பைக் மாடல் ஒன்றை உருவாக்கியது. அதாவது, இது ஹைபிரிட் வகை மாடல். முன்சக்கரத்தின் ஹப்பில் மின் மோட்டார் ஒன்றை இணைத்து 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட பைக் மாடலாக தயாரித்தது. இதற்கு காப்புரிமையும் பதிவு செய்தது.

ஹைபிரிட் நுட்பம்

இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக எஞ்சினிலிருந்து நேரடியாக முன்சக்கரத்திற்கு சக்தியை செலுத்துவதற்கான கியர்பாக்ஸ் அமைப்பு மற்றும் டிரைவ் சாஃப்ட் தேவைப்படவில்லை. அத்துடன், சாதாரண சஸ்பென்ஷன் அமைப்பையே பயன்படுத்த முடிந்தது.

 08. உரல் சைடுகார் அவுட்ஃபிட்

இது சைடுகார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம். ஆனால், இரண்டு சக்கரங்களுக்கு மட்டுமே பவர் அளிக்கப்படுகிறது. அதாவது, மோட்டார்சைக்கிளின் பின்சக்கரம் மற்றும் சைடுகாரின் பின்சக்கரத்திற்கு பவர் செலுத்தப்படுகிறது.

ஆஃப்ரோடு சாகசங்கள்...

ஆஃப்ரோடு சாகச பிரியர்கள் இந்த மோட்டார்சைக்கிளை வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்போதும் உற்பத்தியில் இருக்கும் இந்த மோட்டார்சைக்கிள்தான் வணிக ரீதியில் வெற்றிகரமான மாடலாக குறிப்பிடலாம்.

 07. ரோகோன்

இதனை இருசக்கர லேண்ட்ரோவர்வாகனமாக சிலாகித்து கூறுகின்றனர். 1960களில் இருந்து உற்பத்தியில் இருக்கிறது. ஆஃப்ரோடு செய்வதற்கு ஏற்ற பைக் மாடலாக குறிப்பிடப்படுகிறது.

மிலிட்டரி ஸ்டைல்

ஆனால், 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ரோகன் மாடல்களின் சஸ்பென்ஷனில் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவது குறித்த தொடர் புகார்கள் உள்ளன. சமீபத்தில் இதன் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

06. டிரைஸ்டேல் பைக்

ஆஸ்திரேலிய பொறியாளரான ஐயன் டிரைஸ்டேல் உருவாக்கி எப்போனிமஸ் வி8 மோட்டார்சைக்கிள்கள் அந்நாட்டு பைக் பிரியர்கள் மத்தியில் பிரபலமானவை. அவர் உருவாக்கிய இந்த 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட பைக் கான்செப்ட்டும் உலக அளவில் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஹைட்ராலிக் நுட்பம்

ஐயன் டிரைஸ்டேல் சொந்தமாக உருவாக்கிய 2 ஸ்ட்ரோக் எஞ்சின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இருசக்கரங்களுக்கும் எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது. ஆனால், இதனை ஓட்டுவது மிகுந்த சிரமத்தை தருவதாக இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.

 05. வன்டர்லிச் ஹைபிரிட் பிஎம்டபிள்யூ ஆர்1200ஜிஎஸ்

கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை ட்யூன் செய்து தருவதில் பிரபலமான வன்டர்லிச் என்ற பொறியாளர் பிஎம்டபிள்யூ ஆர்1200ஜிஎஸ் பைக்கை 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மாற்றினார். ஏற்கனவே நாம் பார்த்த கேடிஎம் 2 வீல் டிரைவ் பைக் போன்றே, இதனை ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலாக உருவாக்கினார்.

இதுவும் ஹைபிரிட் மாடல்தான்...

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புற ஹப்பில் மின்மோட்டாரை பொருத்தியதுடன், நவீன பேட்டரிகள், மின் ஆற்றல் கருவிகளுடன் இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்கினார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எந்தவொரு பைக்கிலும் 2 வீல் டிரைவ் சிஸ்டத்தை வழங்க முடியும் என்பதை காட்டும் வகையில் அமைந்தது.

 04. யமஹா பிஇஎஸ்2

கடந்த 2014ம் ஆண்டு யமஹா நிறுவனம் பிஇஎஸ்2 என்ற எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் மாடலை ஆண்டு அறிக்கையில் வெளியிட்டது. இந்த நிலையில், அந்த பைக்கின் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட புதிய மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நவீன மாடல்

அதாவது, முன் மற்றும் பின்சக்கரங்கள் எலக்ட்ரிக் மோட்டார்கள் துணையுடன் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாமாக மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பமும் இருப்பதால், இது நவீன கால 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட பைக் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

 03. சுஸுகி நுடா

இதுவரை பார்த்த 2 வீல் டிரைவ் மாடல்களில் இருந்து சற்று வித்தியாசமான தொழில்நுட்பம் கொண்டது இந்த மோட்டார்சைக்கிள். அதாவது, பின்சக்கரத்தில் மட்டும் ஸ்விங் ஆர்ம் எனப்படும் தாங்கு சட்டங்கள் சக்கரத்தின் இருபுறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த பைக்கில் முன்புற சக்கமும், ஸ்விங் ஆர்ம் மூலமாக பிணைக்கப்பட்டு இருக்கிறது.

அசத்தல் நுட்பம்

இதன் வழியாக முன்புற, பின்புற சக்கரங்களுக்கு எஞ்சினிலிருந்து கியர்பாக்ஸ் மூலமாக நேரடியாக நேர் எதிர் திசைகளில் இருக்கும் டிரைவ் சாஃப்ட்டுகள் மூலமாக பவரை செலுத்தும் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யமஹா நிறுவனம் ஜிடிஎஸ்1000 மோட்டார்சைக்கிளை உருவாக்கி, காப்புரிமை பெறுவதற்கும் விண்ணப்பித்தது.

 02. யமஹா 2 டிராக்

யமஹா ஜிடிஎஸ்1000 மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆனால், 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண் மோட்டார்சைக்கிள் தயாரிப்புக்கு யமஹா அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறது. அந்த வகையில், உருவாக்கப்பட்ட மாடல்தான் இந்த யமஹா டபிள்யூஆர்450எஃப்2- டிராக் மோட்டார்சைக்கிள். மிக குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது.

ரேஸ் வீரர்கள் சந்தேகம்

கேடிஎம் 2 வீல் டிரைவ் கான்செப்ட் தொழில்நுட்பம் அடிப்படையில்தான் இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டது. இந்த பைக்கின் 2 வீல் டிரைவ் சிஸ்டத்திற்கு தேவைப்பட்ட ஹைட்ராலிக் கருவிகளை ஒலின்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. இதே தொழில்நுட்பத்தை ஆர்1 பைக்கிலும் யமஹா பரிசோத்து பார்த்தது. ஆனால், இந்த 2 வீல் டிரைவ் சிஸ்டம் குறித்து யமஹா நிறுவனத்தின் ரேஸ் வீரர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.

 01. க்றிஸ்ட்டினி 2WD சிஸ்டம்

2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்கள் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு பெறுமா என்பதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி, 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை விரும்புவோருக்கு அமெரிக்காவை சேர்ந்த க்றிஸ்ட்டினி நிறுவனம் ஆசையை தீர்த்து வருகிறது.

2 WD கிட் விற்பனை

ஆம், 2 வீல் டிரைவ் சிஸ்டத்தை விரும்புவோருக்கு பொருத்தி தருகிறது க்றிஸ்ட்டினி நிறுவனம். இதற்காக, 2 வீல் டிரைவ் சிஸ்டம் கிட்டையும் அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, ஆஃப்ரோடு மோட்டார்சைக்கிள்களுக்கு இது சிறப்பானதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
Top 10 Two Wheel Drive Motorcycles In History.
Story first published: Thursday, November 24, 2016, 14:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X