ரூ.30,000 முன்பணத்தில் பெனெல்லி டார்னாடோ302 பைக் புக்கிங் துவக்கம்..!

Written By:

இத்தாலிய சூப்பர் பைக் நிறுவனமான பெனெல்லி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அதன் பிரீமியம் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் அதன் மாடல் எண்ணிக்கையை 10ஆக உயர்த்தும் முனைப்பில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் வரும் மே மாத இறுதிவாக்கில் புதிய பெனெல்லி டார்னாடோ302 ரக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக் அனைவரையும் கவர்ந்ததோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

விரைவில் அறிமுகமாக உள்ள இந்த நேக்கட் பைக்குகளுக்கான புக்கிங்குகளை தற்போது பெனெல்லி நிறுவனம் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பிரத்யேக பெனெல்லி ஷோரூம்களில் 30,000 ரூபாய் முன்பணமாக வாங்கிக்கொண்டு இந்த பைக்குகளுக்கான புக்கிங் நடந்து வருகிறது.

டிஎண்டி300 ஸ்ட்ரீட் ஃபைட்டர் பைக்கின் மேம்பட்ட மாடலாக இது இருக்கும், எனினும் அதனை விட கூடுதல் சிறப்புகளையும் அம்சங்களையும் இந்த பைக் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய பைக்கில் ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற தோற்றத்தை தரும் இரட்டை ஹெட்லைட்டுகள், முரட்டுத்தனமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், உயர்த்தப்பட்ட பின்புற அமைப்பு மற்றும் இரட்டை குழல் எக்ஸாஸ்ட் பைப்புகள் ஆகியவை உள்ளன.

புதிய பெனெல்லி டார்னாடோ302 பைக்கில் இரட்டை இன்-லைன் சிலிண்டர்கள் கொண்ட 300சிசி டிஓஹச்சி இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 38 பிஎஸ் ஆற்றலையும், 27.4 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

190 கிலோ எடை கொண்ட இந்த பைக் இந்தியாவின் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு தரத்துக்கு நிகரான யூரோ-4 தர இஞ்சின் கொண்டதாகும்.

பைக்கின் முன்பக்கத்தில் 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறம் அட்ஜசிபிள் மோனோஷக் சஸ்பென்ஷன் அமைப்பும் தரப்பட்டுள்ளது.

இதேபோல இந்த பைக்கின் முன்பக்கத்தில் 4 பிஸ்டன் கேலிபர் கொண்ட 260மிமீ டூயல் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் ஒற்றை பிஸ்டன் கேலிபர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஏபிஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இந்த செக்மெண்டிலேயே முன்பக்க டூயல் டிஸ்க் பிரேக் கொண்ட மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பைக்காக இது விளங்குகிறது.

புதிய பெனெல்லி டார்னாடோ302 பைக் ரூ.3.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் என்ற விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெனெல்லி டார்னாடோ302 இரட்டை வண்ண கலவை பெயிண்டிங்கில் வருகிறது. இந்த பைக் வெள்ளை/சிவப்பு, கருப்பு/சிவப்பு மற்றும் பச்சை/சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் போது கவாஸாகி நிஞ்சா300 மற்றும் யமஹாஆர்3 மற்றும் ஹயோசங் ஜிடி300ஆர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பெனெல்லி நிறுவனத்தின் ஆரம்ப விலை கொண்ட பைக்காகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஆரம்ப விலை கொண்ட பைக்காக டிஎஸ்கே பெனெல்லி டிஎண்டி 300 இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Benelli Tornado 302 bike booking opens in india.
Please Wait while comments are loading...

Latest Photos