டுகாட்டி நிறுவனத்தை கைப்பற்றும் போட்டியில் முன்னணி வகிக்கும் ஹார்லி டேவிட்சன்..!!

Written By:

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஓர் அங்கமான டுகாட்டி நிறுவனத்தை, விலைக்கு வாங்கும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தற்போது முன்னிலை வகிக்கிறது.

ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு புகழ் பெற்ற உலகின் பிரபலனான டுகாட்டி நிறுவனம் 1926ஆம் ஆண்டு இத்தாலியில் துவங்கப்பட்டது. டுகாட்டி நிறுவனத்தை கடந்த 2012ம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் ஆடி நிறுவனம் கையகப்படுத்தியது.

தற்போது ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் டுகாட்டி நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகன் குழுமம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

ஐரோப்பாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் ஃபோக்ஸ்வேகன், சமீபத்தில் டீசல் கேட் மோசடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.

டீசல் கேட் மோசடியில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை இழப்பீடாக செலுத்த உத்தவிட்டுள்ள நிலையில், இதற்கு ஆகும் தொகையை செலுத்தவே தற்போது டுகாட்டி நிறுவனத்தை விற்பனை செய்யும் முடிவிற்கு அந்நிறுவனம் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டுகாட்டி நிறுவனத்திற்கு பிரதான போட்டியாளராக விளங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் டுகாட்டியை விலைக்கு வாங்க தீவிரம் காட்டி வருகிறது.

டுகாட்டி நிறுவனத்தை விற்பனை செய்வதில் நேரடியாக களத்தில் இறங்காமல் எவர்கோர் என்ற நிறுவனத்தை நியமித்துள்ளது ஃவோக்ஸ்வேகன் நிறுவனம்.

டுகாட்டி நிறுவனத்தின் விலை சுமார் 10,000 கோடி ரூபாய் அளவில் இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்க கோல்மேன் சாச்ஸ் என்ற ஃபைனான்ஸ் நிறுவனத்தை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அனுகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக துவங்கும் என கூறப்படுகிறது. எனினும் டுகாட்டி நிறுவன விற்பனை இந்த ஆண்டின் இறுதியில் நடக்க இருக்கும் மிலன் ஆட்டோ கண்காட்சியையொட்டி நிகழும் என இத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹார்லி டேவிட்சனை பொருத்த வரையில் அமெரிக்காவின் பாதியளவு சந்தையை ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும் ஹோண்டா மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் மூலம் அது கடும் போட்டியை சந்தித்து வருகிறது.

டுகாட்டி நிறுவனத்தை கைப்பற்றுவதன் மூலம் இத்தாலி இருசக்கர வாகன சந்தையில் முக்கிய இடத்தை கைப்பற்றலாம் என கருதுகிறது. மேலும் அது லாபகரமான டீல் ஆகவும் இருக்கும் என அந்நிறுவனம் கணித்துள்ளது.

இது தொடர்பாக ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், டுகாட்டி நிறுவனத்தை விற்கும் முடிவிற்கு அந்நிறுவன தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் தொழில்நுட்ப அளவில் ஹார்லி டேவிட்சனை விட டுகாட்டி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக டுகாட்டி நிறுவனத்தை வாங்க இந்தியாவின் ஹீரோ மோட்டார்கார்ப் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனங்களும் ஆர்வம் காட்டின, பின்னர் டுகாட்டி நிறுவனத்திற்கு நிர்னயிக்கப்பட்ட விலையை கேட்டு இரண்டும் போட்டியிலிருந்து பின்வாங்கிவிட்டன. இருப்பினும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதே போல அதிக விலை காரணமாக டுகாட்டி நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து பிஎம்டபிள்யூ, ஹோண்டா மற்றும் சுசுகி நிறுவனங்களும் பின்வாங்கியுள்ளன.

உலகலாவிய வகையில் ஹார்லி டேவிட்சனும், டுகாட்டி நிறுவனமும் நேரடி போட்டியளர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் டுகாட்டியை வாங்க வேறு சில நிறுவனங்களும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Harley davidson tops race to buy ducati
Story first published: Friday, June 23, 2017, 16:23 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos