எரிவாயுவில் இயங்கும் ஸ்கூட்டர்கள் மும்பையில் அறிமுகம்!

Written By:

அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில்[CNG] இயங்கும் இருசக்கர வாகனங்கள் மும்பையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மும்பையை சேர்ந்த மகாநகர் எரிவாயு நிறுவனம் இந்த இருசக்கர வாகனங்களை மும்பை மாநகரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜுபிடர், யமஹா ஃபேஸினோ ஆகிய ஸ்கூட்டர் மாடல்கள் உள்பட 18 ஸ்கூட்டர் மாடல்கள் இப்போது சிஎன்ஜி கிட்டுடன் அங்கு விற்பனைக்கு கிடைக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இத்தாலியை சேர்ந்த லவட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஈக்கோ ஃப்யூவல் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து மகாநகர் எரிவாயு நிறுவனம் இருசக்கர வாகனங்களில் பொருத்துவதற்கான சிஎன்ஜி கிட்டை அறிமுகம் செய்துள்ளது. அனைத்து பிராண்டு ஸ்கூட்டர் மாடல்களிலும் இந்த சிஎன்ஜி கிட்டை பொருத்தி பெற்றுக் கொள்ளலாம்.

சிஎன்ஜியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிர மாநில அமைச்சர் வினோத் தவ்தேவும் கலந்து கொண்டனர். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் மூலமாக வாகன புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

சிஎன்ஜி., எரிபொருளுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான இ-வாலட் அப்ளிகேஷனையும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்தார். இது பணம் செலுத்தும் நடைமுறையை மிக எளிதாகவும், வசதியாகவும் மாற்றும்.

சிஎன்ஜியில் இயங்கும் ஸ்கூட்டர்களில் 1.2 கிலோ எடை கொண்ட இரண்டு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும். ஒருமுறை சிஎன்ஜி சிலிண்டர்களை முழுமையாக நிரப்பினால் 120 முதல் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

அதாவது, ஒரு கிலோமீட்டருக்கு 60 பைசா என்ற அளவில் எரிபொருள் செலவு இருக்கும். பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களைவிட சிஎன்ஜி.,யில் இயங்கும் வாகனங்கள் மிக குறைவான எரிபொருள் செலவீனம் கொண்டதாக இருக்கும்.

சிஎன்ஜி கிட்டுகளை ஐடியுகே மற்றும் லவட்டோ ஆகிய நிறுவனங்கள் தயாரித்து கொடுக்கின்றன. இந்த சிஎன்ஜி கிட்டுகளுக்கு அராய் அமைப்பும், ஐசிஏடி குர்கான் நிறுவனமும் அனுமதி சான்று வழங்கி உள்ளன. அரசு நிறுவனங்களின் அனுமதியுடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் இனி இந்த சிஎன்ஜி மாடலுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாநகர் எரிவாயு நிறுவனம் மட்டுமின்றி சிஎன்ஜி கிட் தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் பல நிறுவனங்கள் அரசு அனுமதியுடன் இதுபோன்ற இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய களமிறங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஹோண்டா ஆக்டிவா 125, ஹீரோ டூயட், ஹீரோ மேஸ்ட்ரோ, ஹீரோ ப்ளஷர், ஹோண்டா டியோ, மஹிந்திரா கஸ்ட்டோ, சுஸுகி ஆக்செஸ், சுஸுகி லெட்ஸ் டிவிஎஸ் வீகோ, வெஸ்பா, யமஹா ஆல்ஃபா, யமஹா ஃபேஸினோ மற்றும் யமஹா ரே ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை சிஎன்ஜி கிட் பொருத்தி விற்பனைக்கு தருகிறது மகாநகர் எரிவாயு நிறுவனம்.

மும்பையை தொடர்ந்து பிற மாநகரங்களிலும் இந்த சிஎன்ஜி ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன்மூலமாக, இருசக்கர வாகனங்கள் மூலமாக வெளியேறும் புகையின் அளவை கட்டுப்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Mahanagar Gas Limited Launches CNG Powered Two-Wheelers In Mumbai.
Please Wait while comments are loading...

Latest Photos