இந்தியாவில் கவாஸாகியின் புதிய இசட்250 பைக் ரூ.3.09 லட்சம் விலையில் அறிமுகம்..!

Written By:

ஜப்பானைச் சேர்ந்த கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் அதன் ஆரம்ப விலை கொண்ட சிறிய ரக மாடலான இசட்250 பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

250சிசி பைக்கான இது இந்தியாவில் விற்பனையில் உள்ள கவாஸாகி இசட் சீரீஸ் பைக்குகளில் ஆரம்ப விலை கொண்ட மாடலாக இருக்கும்.

முந்தைய மாடலை விட சிறந்த டிசைன் லாங்குவேஜில் இந்த பைக் கவர்ச்சிகரமாக வெளிவந்துள்ளது.

புதிய கவாஸாகி இசட்250 பைக் பாரத் ஸ்டேஜ்-4 தர இஞ்சினுடனும், புதிய பெயிண்டிங்கிலும் வெளிவந்துள்ளது.

அப்-ரைட் பொஸிசனில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நகரம் மற்றும் அட்வெஞ்சர் என இரண்டு வகையான பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

இந்த புதிய பைக்கில் 37 மிமீ டெலஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளும், கேஸ் சார்ஜூடு மோனோஷாக் பின்புற ஷாக் அப்சார்ப்பரும் கொண்டுள்ளது.

முன்புறமும் பின்புறமும் டூயல் பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 290 மிமீ மற்றும் 220 மிமீ அளவு கொண்ட பெடல் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

17 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்ட இந்த பைக்கின் மொத்த எடை 168 கிலோவாக உள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 145 மிமீ ஆகும்.

புதிய கவாஸாகி இசட்250 பைக்கில் பியூல் இஞ்செக்‌ஷன் வசதி கொண்ட 249சிசி பேரலல் டிவின் இஞ்சின் உள்ளது.

இந்த இஞ்சின் அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்-மில் 32 பிஹச்பி ஆற்றலையும், 10,000 ஆரிபிஎம்-மில் 21 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர் பாக்ஸ் உள்ளது.

பைக் ஆர்வலர்கள் அதிகம் எதிர்பார்த்த ஆண்டி லாக் பிரேக்கிங் (ஏபிஎஸ்) சிஸ்டம் ஆப்ஃஷனலாக கூட தரப்படாதது ஏமாற்றம் தருவதாக உள்ளது.

இந்த செக்மெண்டில் உள்ள கேடிஎம் 250 ட்யூக், ஹோண்டா சிபிஆர்250ஆர் மற்றும் பெனெல்லி டிஎண்டி25 ஆகிய மாடல்களில் ஸ்டேண்டர்ட் அம்சமாகவே ஏபிஎஸ் தரப்படுவது குறிப்பிடத்தக்கது.

இசட்250 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங்கை கவாஸாகி நிறுவனம் புறக்கணித்திருப்பதையும் மீறி இந்த பைக்குக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டி உள்ளது.

புதிய கவாஸாகி இசட்250 பைக் ரூ.3.09 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையில்) என்ற விலையில் கிடைக்கிறது.

கவாஸாகியின் ஆஸ்தான பச்சை மற்றும் கருப்பு நிற கலவையுடன் சேர்த்து இந்தோனேசியாவில் கிடைத்து வரும் ஆரஞ்சு மற்றும் கிரே கலந்த புதிய வண்ணத்திலும் இந்த பைக் கிடைக்கிறது.

பஜாஜ் நிறுவனத்துடன் 8 ஆண்டுகளாக நீடித்து வந்த கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தை கவாஸாகி நிறுவனம் முறித்துக்கொண்டது நினைவிருக்கலாம்.

ஆதலால், பஜாஜ் ப்ரோ பைக்கிங் ஷோரூம்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது, கவாஸாகியின் பிரத்யேக அவுட்லெட்களில் மட்டுமே கவாஸாகி பைக்குகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about kawasaki's new z250 bike launch in india. price, mileage, colors, specs and more
Please Wait while comments are loading...

Latest Photos