சாலை தடுப்பில் மோதி நொறுங்கிய டுகாட்டி சூப்பர் பைக்... மும்பை மாணவர் பரிதாப பலி!

Written By:

நித்தம் ஒரு சூப்பர் பைக் விபத்து பற்றிய செய்திகளை காணும் அளவுக்கு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் கவாஸாகி ஸ்போர்ட்ஸ் பைக் இரண்டு துண்டுகளான செய்தியை பிரசுரித்து முடிவதற்குள் அடுத்து மும்பையில் டுகாட்டி சூப்பர் பைக் ஒன்று கோர விபத்தில் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்தநாள் பரிசாக அந்த பைக் கல்லூரி மாணவரின் உயிலுக்கு உலை வைத்துவிட்டது. இந்த பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.

மும்பை, பந்த்ரா பகுதியை சேர்ந்தவர் சுபன் பாக்வாலா, வயது 18. அங்குள்ள எம்எம்கே கல்லூயில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். சூப்பர் பைக்குகள் என்றால் சுபனுக்கு கொள்ளை பிரியமாம். இந்த நிலையில், கடந்த 15ந் தேதி சுபனின் பிறந்தநாள். எனவே, அவர் நீண்ட நாட்களாக ஆசையாய் கேட்டு வந்த டுகாட்டி டயாவெல் பைக்கை அவரது பெற்றோர் பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சுபன் தனது புத்தம் டுகாட்டி சூப்பர் பைக்கில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு தனது புதிய பைக் பற்றி நண்பர்களிடம் காட்டியதுடன், எனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசுகளிலேயே மிகவும் சிறந்தது இதுதான் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், தினசரி தனது டுகாட்டி சூப்பர் பைக்கில் கல்லூரி சென்று வந்துள்ளார் சுபன். அவருடன் அவரது நெருங்கிய கல்லூரி தோழரான சுல்தான் பட்டேலும் சென்றிருக்கிறார். பைக்கை சுபன் ஓட்டியிருக்கிறார். அந்த சூப்பர் பைக்கை சுபன் அதிவேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த சூப்பர் பைக் சாலை தடுப்பில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுபன் தலையிலும், உடலிலும் படுகாயமடைந்து உயிரிழந்தார். அவரது நண்பர் தற்போது கோமா நிலையில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட 4 தினங்களில் அந்த சூப்பர் பைக் விபத்தில் சிக்கியதுடன் சுபனின் உயிரையும் பறித்துவிட்டது. இந்த பயங்கர விபத்திற்கு காரணம், சுபன் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்றதே என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சுபன் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சுல்தான் பட்டேல் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலையில் உள்ளார். இந்த கோர விபத்துக்கு அதிவேகமாக சென்றதே காரணம்.

உலகின் அதிசக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளில் ஒன்று டுகாட்டி டயாவெல். இந்த பைக்கில் இருக்கும் எஞ்சின் 162 எச்பி பவரை அளிக்கும் திறனும், மணிக்கு 272 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை வாய்ந்தது. இதுபோன்ற சக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளை சாதாரண சாலைகளில் இயக்கும்போது அதிக கவனமும், நிதானமும் அவசியமாகிறது.

எனவே, இதுபோன்ற சூப்பர் பைக்குகளை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, சாலையில் வரும் இதர வாகன ஓட்டிகளுக்கும் அது நன்மை பயப்பதாக அமையும்.

ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னர் வதோதரா நகரில், இதேபோன்ற ஒரு பைக் விபத்தில் மிலன் பாட்டீல் என்ற 21 பொறியியல் படித்து வந்த மாணவர் உயிரிழந்தார். பரிசாக பெற்ற தனது ஹார்லி டேவிட்சன் ஸ்டீர்ட் 750 மோட்டார்சைக்கிளை தனது நண்பர்களிடம் காட்டிவிட்டு வீட்டுக்கு சென்று திரும்பியபோது அதிவேகத்தில் வந்துள்ளார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார்சைக்கிள் அடையாளம் தெரியாத மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்தில் சிக்கியது. இதில், மிலன் பாட்டீல் படுகாயமடைந்து உயிரிழந்தார். பரிசாக பெற்ற சில மணிநேரத்தில் அந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் சிக்கியது. எனவே, இந்த சம்பவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பது குறித்து முடிவு எடுக்கவும்.

Via- Mid-day

டுகாட்டி 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக்கின் படங்கள்!

டுகாட்டி 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக்கின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Monday, January 23, 2017, 9:58 [IST]
English summary
Student crashes to death on joyride in Mumbai.
Please Wait while comments are loading...

Latest Photos