புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!!

கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் சில மாற்றங்களுடன் க்ராஸ்ஓவர் ஸ்டைலுக்கு மாற்றப்பட்ட புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் விரிவாகக் காணலாம்.

ஹேட்ச்பேக் கார்களை எஸ்யூவி போன்ற அம்சங்களுடன் மாற்றம் செய்வது சில ஆண்டுகளுக்கு முன் முளைத்த புதிய டிரென்ட். அந்த அடிப்படையில், ஏராளமான கார் மாடல்கள் தொடர்ந்து வரிசை கட்டின. அண்மையில் ஃபோர்டு ஃபிகோ அடிப்படையிலான ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மற்றும் மாருதி செலிரியோ அடிப்படையிலான செலிரியோ எக்ஸ் கார்கள் மார்க்கெட்டுக்கு வந்தன. இந்த வரிசையில் இப்போது டாடா டியாகோ காரின் க்ராஸ்ஓவர் மாடலும் இணைந்துள்ளது.

டாடா டியாகோ NRG (Energy என்பதை குறிக்கும் விதமாக NRG என்று பெயரிடப்பட்டுள்ளதாம்) என்ற பெயரில் இன்று விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் வடிவைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு கவர்ச்சியாக இருக்கிறது. முக்கிய மாற்றமாக, டாடா டியாகோ காரைவிட கிரவுண்ட் கிளியரன்ஸ் 10 மிமீ அதிகரிக்கப்பட்டு 180 மிமீ ஆக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

அதேபோன்று, எஸ்யூவி கார்களை போல, இந்த காரின் பாடியை சுற்றிலும் கருப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு ஒத்தாற்போல, கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள், கூரையில் கருப்பு வண்ண ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில் அமைப்பும் கருப்பு வண்ணத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த காரில் 4 ஸ்போக்குகள் கொண்ட 14 அங்குல விட்டமுடைய அலாய் சக்கரங்கள் கவர்ச்சியை கூட்டுகின்றன. கூரையில் ரூஃப் ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புற பம்பரில், ஸ்கிட் பிளேட் கொடுக்கப்பட்டு இருப்பதும் எஸ்யூவி தோற்றத்தை பெற உதவுகிறது. மொத்தத்தில் சாதாரண டியாகோவைவிட வெளிப்புறம் மிடுக்காகவும், மிரட்டலாகவும் இருக்கிறது.

சாதாரண டியாகோ மாடலைவிட நீள, அகல, உயரத்தில் சற்றே கூடுலாக இருக்கிறது.

உட்புற டிசைனில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், இதனை வேறுபடுத்தும் விதத்தில், ஆரஞ்ச் வண்ண அலங்கார பட்டைகள் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு இருப்பது பிரிமியமான கார் போல தோற்றமளிக்கிறது. இந்த கார் டாப் வேரியண்ட்டில் கிடைப்பதால், 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், ஸ்மார்ட் ரியர் வைப்பர் மற்றும் ஃபாலோ மீ ஹெட்லைட் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கார் மலபார் சில்வர், கேன்யோன் ஆரஞ்ச் மற்றும் ஃப்யூஜி ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரில் இருக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.05 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு மாடல்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.32 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அர்பன் டஃப்ரோடர் என்ற ரகத்தில் இதனை டாடா மோட்டார்ஸ் குறிப்பிடுகிறது. பட்ஜெட் அடிப்படையில் இது மாருதி செலிரியோ எக்ஸ் காருடன் நேரடியாக மோதும்.

Popular In the Community
Load more...