பிரம்மோஸ் ஏவுகணையை கண்டு சீனாவுக்கு உதறல் எடுத்ததற்கான காரணங்கள்!

இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி நுழைந்து வருவதுடன், தங்களது ராணுவ நிலைகளை அமைக்கவும் முயன்று வருகிறது. குறிப்பாக, அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்களுடைய பகுதி என்று கூறி வருவதுடன், அதனை கைப்பற்றுவதற்கான முயற்சிகளிலும் ரகசியமாக செய்து வருகிறது.

இந்த முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் விதத்தில், பிரம்மோஸ் ஏவுகணையை அருணாச்சலப் பிரதேசத்தில் நிலை நிறுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு காட்டி வருகிறது. பிரம்மோஸ் ஏவுகணையை கண்டு சீனா அஞ்சுவதற்கு, பிரம்மோஸ் ஏவுகணையின் சிறப்பம்சங்களே முக்கிய காரணம். அவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.

ராணுவ பலத்தில் உலகின் பெரிய நாடு என்று காட்டிக் கொள்வதற்காக இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுவதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. இப்படித்தான், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல், தென்சீனக் கடலை சொந்தம் கொண்டாடி வருகிறது.

இதேபோன்று அருணாச்சலப் பிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடி வரும் சீனா எதிர்காலத்தில் ராணுவ நடவடிக்கை மூலமாக கைப்பற்ற முயற்சிக்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதையடுத்தே, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சீன எல்லையோரத்தை பிரம்மோஸ் ஏவுகணைகளை நிலைநிறுத்தி பாதுகாக்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.

அருணாச்சலப் பிரதேச எல்லையை காக்கும் விதமாக புதிய படைப்பிரிவும் அமைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்த படைப்பிரிவில் பிரம்மோஸ் ஏவுகணைகள், அதனை செலுத்துவதற்கான லாஞ்சர் வாகனங்கள், வீரர்களுக்கான விசேஷ கவச உடைகள், படைக்கலன்கள் வாங்குவதற்காக ரூ.4,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பிரம்மோஸ் ஏவுகணையின் பிளாக்- 3 என்ற ரகம்தான் தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சீன எல்லையோரம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. இதன் ஆளுமை திறன்கள்தான் தற்போது சீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிநவீன ஏவுகணைகளை சீனாவும் வைத்திருக்கிறது. அதில், சிலவற்றை இந்தியா நோக்கி நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனாலும், எல்லையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா நிறுவுவதை கண்டு சீனா அஞ்சுவதற்கு காரணம் இருக்கிறது.

இந்திய- சீனா இடையிலான 4,057 கிமீ தூரமுடைய எல்லையின் பல இடங்கள் மலைகள் சூழ்ந்த பகுதிகளின் ஊடாக செல்கிறது. குறிப்பாக, மலைகள் அதிகம் சூழ்ந்த அருணாச்சலப் பிரதேசத்தில் எதிரிகள் மலையின் பின்புறத்தில் ராணுவ நிலைகளை வைத்து எளிதாக தாக்கும் வாய்ப்புள்ளது.

இதுபோன்று மலைப்பகுதிகளின் பின்புறம் இருந்து தாக்குதல் தொடுக்க முனையும் எதிரிகளை பிரம்மோஸ் உண்டு இல்லை என்று செய்து விடும். எப்படி தெரியுமா? பிரம்மோஸ் ஏவுகணையின் முக்கிய சிறப்புகளில் ஒன்று மலைப்பகுதிகளின் பின்னால் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

ஆம், பிரம்மோஸ் ஏவுகணை 75 டிகிரி கோணத்தில் எதிரிகளின் இலக்குகளை நோக்கி சீறிச் சென்று தாக்கி அழிக்கும். ஸ்டீப் டைவ் என்று சொல்லக்கூடிய இந்த சிறப்பம்சம் கொண்ட ஏவுகணைகளை அவ்வளவு எளிதாக வழிமறிக்க முடியாது.

Advertisement
Advertisement

இதுதான் சீனாவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், உலகின் சிறந்த க்ரூஸ் ரக ஏவுகணையாகவும், மலைப்பகுதி தாக்குதல்களுக்கு ஏற்ற ஸ்டீப் டைவ் திறன் கொண்ட ஒரே க்ரூஸ் ரக ஏவுகணையாகவும் இது வர்ணிக்கப்படுகிறது.

உலகிலேயே பயன்பாட்டில் உள்ள அதிக வேகம் கொண்ட ஒரே ஏவுகணையும் பிரம்மோஸ்தான். ஆம், சூப்பர்சானிக் ரகத்தை சேர்ந்த பிரம்மோஸ் மேக் 2.8 முதல் மேக் 3.0 வேகத்தில் பயணிக்கும். எனவே, ரேடார்கள் கண்ணில் மண்மை தூவி காரியத்தை முடித்துவிடும். உதாரணத்திற்கு, ஏவிய சில நிமிடங்களில் இலக்கை தாக்கி அழித்திருக்கும்.

பிரம்மோஸ் ஏவுகணையின் பெரிய குறைபாடு என்று பலராலும் சொல்லப்படுவது குறைந்த தூர இலக்குகளை குறிவைத்து மட்டுமே செலுத்த முடியும். அதாவது, ரஷ்யாவின் கூட்டணியில் தயாரிக்கப்பட்டிருப்பதால், அந்நாட்டு விதிகளின்படி இதனை அதிகபட்சமாக 290 கிமீ தூரம் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்படியானால், சீனா சட்டை செய்யாமல் விட வேண்டியதுதானே, ஏன் கவலை கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகிறதுதானே...?

பொதுவாக தரைப்படைகள் எல்லையிலிருந்து 40 கிமீ முதல் 45 கிமீ தூரம் வரையில் எதிரி நாட்டு இலக்குகளை தாக்க முடியும். ஆனால், சர்வதேச அளவிலான இந்த எழுதப்படாத விதிமுறையை பிரம்மோஸ் மாற்றி எழுத உள்ளது. ஆம், எல்லையிலிருந்து சீனாவின் 290 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை விமானப்படை உதவி இல்லாமலே, ராணுவமே ஒரு கை பார்த்துவிடும். இதுவும் சீனாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

எல்லையில் இனி வாலாட்டில் உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு இந்த புதிய படைப்பிரிவும், பிரம்மோஸ் ஏவுகணையும் இந்தியாவுக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Most Read Articles

Have a great day!
Read more...