பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரின் ஸ்போர்ட் வேரியண்ட் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் பிஎஸ்6 மாடல் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் நடுத்தர வகை சொகுசு செடான் கார் மாடலாக 5 சீரிஸ் கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. இதில், 5 சீரிஸ் காரின் 530ஐ ஸ்போர்ட் வேரியண்ட் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் வேரியண்ட்டிற்கு ரூ.55.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஎம்டபிள்யூ ஷோரூம்களிலும் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் வேரியண்ட்டானது மினரல் ஒயிட், பிளாக் சபையர், மெடிட்டரானியன் புளூ மற்றும் புளூஸ்டோன் மெட்டாலிக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். அதேபோன்று, சென்சாடெக் என்ற ஸ்டான்டர்டு அப்ஹோல்ட்ரியும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக, கன்பெரா பீஜ் மற்றும் கருப்பு வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி தேர்வுகளிலும் இந்த கார் கிடைக்கும்.

புதிய பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் வேரியண்ட்டில் பாரம்பரிய சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு, க்ரோம் மற்றும் பளபளப்பான கருப்பு வண்ண பாகங்களுடன் மிகவும் பிரிமீயமாக காட்சி தருகிறது. இந்த காரில் 17 அங்குல அலாய் வீல்கள், தனித்துவமான சைலென்சர் குழாய்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் வேரியண்ட்டில் உட்புறத்திற்கு விசேஷமான பேக்கேஜை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. இதில், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், விசேஷ பிஎம்டபிள்யூ லோகோவுடன் டோர் சில்கள், லெதர் உறையுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 12.3 அங்குல முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல தொடுதி்ரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. முப்பரிமாண வரைபடத்துடன் கூடிய வழிகாட்டும் வசதியும் இந்த சாதனம் வழங்கும். 12 ஸ்பீக்கர்களுடன் 105 வாட்ஸ் ஹைஃபை லவுட் ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி, புளூடூத் மற்றும் யுஎஸ்பி இணைப்பு வசதிகளும் உள்ளன.

இந்த காரில் ஸ்மார்ட் கீ மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு வசதிகளை உரிமையாளர் பெற முடியும். கை அசைவு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது. இந்த காரில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பார்க்கிங் செய்வதற்கான சிறப்பு தொழில்நுட்பங்களும், கேமராவும் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் வேரியண்ட்டின் மிக முக்கிய சிறப்பம்சமாக, இதன் செயல்திறன் மிக்க எஞ்சினை கூறலாம். இதன் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக வந்துள்ளது. அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் தொட்டுவிடும்.

மேலும், 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்ட் வசதி மூலமாக கியர்களை மாற்றும் வசதியும் உள்ளது. இந்த காரில் லான்ச் கன்ட்ரோல் என்ற மிக முக்கிய பாதுகாப்பு வசதி உள்ளது. அத்துடன், கம்போர்ட், ஸ்போர்ட், ஈக்கோ புரோ மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதன் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு செயல்திறன் மிக்க இதன் எஞ்சினுக்கும், மோசமான சாலைகளை எதிர்கொள்வதற்கும் சிறப்பானதாக இருக்கும். வளைவுகளில் திரும்பும்போது அதிக நிலைத்தன்மையை வழங்கும் விசேஷ தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

இநத் காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ரன் ப்ளாட் டயர்கள், க்ராஷ் சென்சார், எலெக்ட்ரானிக் எஞ்சின் இம்மொலைசர், அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 530ஐ ஸ்போர்ட் வேரியண்ட் சென்னையிலுள்ள ஆலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கு முதல் 3 ஆண்டுகள் மற்றும் 40,000 கிமீ தூரத்திற்கான சிறப்பு பராமரிப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு ரூ.17,300 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
BMW has launched of its 530i Sport BS6 variant in India today. It will available at the ex-showroom price of INR 55,40,000. The new BMW 530i is assembled at BMW Group Plant Chennai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X