மிட்-சைஸ் செடான் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா சிட்டி!! மாருதி சியாஸ் & வெர்னாவின் விற்பனை சரிவு

கடந்த 2021 செப்டம்பரில் விற்பனை செய்யப்பட்ட நடுத்தர-அளவு செடான் கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2021 செப்டம்பரில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களின் பங்கு மிக முக்கியமானது என்றே கூற வேண்டும். ஏனெனில் கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுக்கு கிடைத்துவரும் வரவேற்பை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஆனால் ஒரு காலத்தில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் சாலைகளை செடான் கார்களே ஆட்சி செய்துவந்தன. ஆனால் கடந்த மாதத்தில் காம்பெக்ட் மற்றும் நடுத்தர-அளவு செடான் என இரு விதமான செடான் கார்களின் விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் சப்-4 மீட்டர் செடான் கார்கள் பிரிவில் மொத்தம் 8,370 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை 2020 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் சுமார் 67 சதவீதம் குறைவாகும். ஏனென்றால் அந்த மாதத்தில் 25,231 நடுத்தர-அளவு செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அப்படியே நிர்வாக செடான் கார்கள் விற்பனைக்கு வந்தோமேயானால், இந்த பிரிவில் தற்சமயம் ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ராபிட், ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை ஐந்தும் சேர்த்து மொத்தமாக 5,842 நிர்வாக செடான் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு செப்டம்பரில் 7,963 நடுத்தர-அளவு செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இத்தகைய செடான் கார்களின் விற்பனை நம் நாட்டு சந்தையில் 27% குறைந்துள்ளது. அதிகம் விற்பனை செய்யப்பட்ட நிர்வாக செடான் காராக வழக்கம்போல் ஹோண்டா சிட்டி மாடலே தொடர்ந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் 2020 செப்டம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் சிட்டி செடான் காரின் விற்பனை மட்டுமே கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த மாதத்தில் 3,348 ஹோண்டா சிட்டி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2020 செப்டம்பரில் சற்று குறைவாக 2,709 சிட்டி கார்களே விற்கப்பட்டு இருந்தன.

இந்தியாவில் ஐந்தாம்-தலைமுறை ஹோண்டா சிட்டி கார் கடந்த 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம் நாட்டு சந்தையில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு கிடைத்துவரும் ஜப்பானிய ஹோண்டா நிறுவனத்தின் மாடல்களுள் சிட்டியும் ஒன்றாகும். விற்பனையில் உள்ள ஹோண்டா சிட்டி மாடலின் விலை ரூ.11.19 லட்சத்தில் இருந்து ரூ.15.14 லட்சம் வரையில் உள்ளன.

இரண்டாவது இடத்தில் மாருதி சுஸுகியின் சியாஸ் செடான் மாடல் 981 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் கடந்த மாதத்தில் 1,534 சியாஸ் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்த மாருதி சுஸுகி செடான் காரின் விற்பனை 36 சதவீதம் குறைந்துள்ளது.

சியாஸின் விற்பனையாவது பரவாயில்லை, மூன்றாவது இடத்தில் உள்ள ஹூண்டாய் வெர்னாவின் கடந்த மாத விற்பனை சுமார் 61 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த மாதத்தில் 879 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள வெர்னா, 2020 செப்டம்பரில் 2,228 யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஸ்கோடா ராபிட்டின் விற்பனையும் 48 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ராபிட் செடான் கார்களின் எண்ணிக்கை 473 ஆகும். ஆனால் 2020 செப்டம்பரில் 907 யூனிட்களாகும். ஸ்கோடா ராபிட்டின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டே ராபிட்டிற்கு மாற்று செடானின் தயாரிப்பு பணிகளில் தற்சமயம் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது.

ராபிட்டை காட்டிலும் அளவில் பெரியதாக கொண்டுவரப்படும் இந்த புதிய ஸ்கோடா செடான் மாடல் சமீப காலமாக அவ்வப்போது சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய வருகைக்கு பிறகாவது ஸ்கோடாவின் மிட்-சைஸ் செடான் கார்களின் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐந்தாவது மற்றும் கடைசி இடங்களில் ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ செடான் மாடல் உள்ளது. கடந்த மாதத்தில் வெறும் 161 வெண்டோ கார்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 செப்டம்பரில் 208 வெண்டோ கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் வெண்டோ கார்களின் விற்பனை 23 சதவீதம் குறைந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Midsize Executive sedan registered cumulative domestic tally of 5,842 units.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X