2023 ஆட்டோ எக்ஸ்போவில் எல்லாரது கண்ணும் இந்த 5 கார்கள் மீதுதான்!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில்...

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023 ஆட்டோ எக்ஸ்போ கடந்த ஜனவரி 11ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி நிறைவுற்றது. தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கண்காட்சியில் மொத்தம் 6.36 லட்சம் பேர் கலந்து கொண்டனர். முதல் 2 நாட்களுக்கு சமூக ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு பொதுமக்களும் அனுமதிப்பட்டனர்.

இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு புதியதாக வெளியீடு செய்யப்பட்ட பல்வேறு வாகனங்களை கண்டுகளிப்பதற்காக குறிப்பிட்ட தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. 2023 ஆட்டோ எக்ஸ்போவை சில ஆட்டோமொபைல் பிராண்ட்கள் புறக்கணித்து இருந்தாலும், கலந்த கொண்ட மற்ற நிறுவனங்களின் புதிய தயாரிப்பு வாகனங்களும், கான்செப்ட் வாகனங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்தன.

ஆட்டோ எக்ஸ்போவில் எல்லாரது கண்ணும் இந்த 5 கார்கள் மீதுதான்!!

குறிப்பாக, மாருதி சுஸுகி மற்றும் எம்ஜி மோட்டாரின் வாகனங்கள் கண்காட்சியின் ஹைலைட்டாக அமைந்தன. இதில் ஒன்றாக, இந்தியாவின் முன்னணி கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகி தனது முதல் எலக்ட்ரிக் காருக்கான கான்செப்ட் வாகனத்தை வெளியீடு செய்தது. அத்துடன் ஹூண்டாய், கியா போன்ற நிறுவனங்களும் தங்களது புதிய வாகனங்களை வெளியிட்டன. இவற்றுள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த 5 கார்களை பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

1. மாருதி சுஸுகி ஜிம்னி

மாருதி சுஸுகி ஜிம்னி, பல ஆண்டுகளாக இந்திய கார் பிரியர்கள் ஆவலாக காத்திருந்த வாகனம். எதிர்பார்த்தப்படி 2023 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறக்கப்பட்ட ஜிம்னி ஆனது மாருதி சுஸுகியின் புதிய எஸ்யூவி வாகனம் ஆகும். மஹிந்திரா தாருக்கு போட்டியாக கொண்டுவரப்பட்ட இந்த வாகனம் ஆட்டோ எக்ஸ்போவின் 2வது நாளில், அதாவது ஜனவரி 12ஆம் தேதி வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன், ஜிம்னிக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டுள்ளன.

2. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்

ஜிம்னி உடன் ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்யப்பட்ட மற்றொரு மாருதி சுஸுகி தயாரிப்பு. மேலும், ஜிம்னி உடன் ஃப்ரான்ஸ் காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டன. பலேனோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த க்ராஸ்ஓவர் காரை மாருதி சுஸுகியின் பிரீமியம் தர டீலர்ஷிப் ஷோரூமான நெக்ஸா விற்பனை செய்ய தயாராகி வருகிறது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை போன்று தோற்றத்தில் உள்ளது என எதிர்மறையான கருத்துகள் வெளிவந்தாலும், ஃப்ரான்க்ஸ் காரை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 1,500-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது.

3. ஹூண்டாய் அயோனிக் 5

2023 ஆட்டோ எக்ஸ்போவின் 2வது நாளில் மாருதி சுஸுகி தனது இரு வாகனங்களை காட்சிப்படுத்திய பின்னர் ஹூண்டாய் வெளியீடு செய்த எலக்ட்ரிக் கார் தான் அயோனிக் 5 ஆகும். கியா இவி6 எலக்ட்ரிக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஹூண்டாய் காரை நடிகர் ஷாரூக்கான் வெளியீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.44.95 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. கியா கே.ஏ4

கார்னிவல், கேரன்ஸ் என இந்தியாவில் ஏற்கனவே இரு எம்பிவி கார்கள் விற்பனையில் இருப்பினும், மேலும் ஒரு எம்பிவி காராக கியா அறிமுகப்படுத்திய மாடல் கே.ஏ4 ஆகும். ஏனெனில் இந்தியர்களை பெரியதாக கவராததால் கார்னிவலின் இடத்தை நிரப்பும் பொருட்டு கே.ஏ4 கார் கொண்டுவரப்படுகிறது. கியாவின் லேட்டஸ்ட் டிசைன் தத்துவத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எம்பிவி காரில் முற்றிலும் புதிய வடிவமைப்பில் கேபின் வழங்கப்பட்டிருப்பதுடன், அதற்கேற்ப புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

5. ஹூண்டாய் அயோனிக் 6

நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் அயோனிக் பெயரில் ஹூண்டாய் களமிறக்கிய மற்றொரு எலக்ட்ரிக் கார் தான் அயோனிக் 6 ஆகும். அயோனிக் 5 எஸ்யூவி ரக காராக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், அயோனிக் 6 ஆனது எலக்ட்ரிக் செடான் காராகும். அயோனிக் 6 காரின் ஸ்பெஷல் அதன் ஏரோடைனோமிக் தோற்றமே. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், அல்ட்ரா-லோ ட்ராக் கோ-எஃபிசியண்ட்டை 0.21டி -இல் கொண்டுள்ள உலகின் மிகவும் சில கார்களுள் அயோனிக் 6 ஒன்றாகும்.

Most Read Articles
English summary
5 eye catching cars at auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X