போறபோக்க பாத்தா மாருதி, டாடா எல்லாம் நம்ம ஆளு பின்னாடிதான் நிக்கணும் போலிருக்கே! தொடர் வெற்றியில் மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் சென்ற 2023 ஜனவரியில் ஒட்டுமொத்தமாக 64,335 யூனிட் புதிய வாகனங்களை விற்பனை செய்து இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. யுடிலிட்டி (எஸ்யூவி), கார்கள் மற்றும் வேன்கள் ஆகிய வாகன பிரிவில் 33,040 யூனிட்டுகள் வரை நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகி இருக்கின்றன.

மஹிந்திரா நிறுவனம் மிகக் கடுமையான உதிரிபாக விநியோக சிக்கலில் கடந்த சில மாதங்களாகவே சிக்கி வருகின்றது. இந்த நிலை கடந்த ஜனவரியிலும் நீடித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், இந்த அளவு அதிக எண்ணிக்கையில் நிறுவனத்தால் வாகனங்களை விற்பனைச் செய்ய முடிந்திருக்கின்றது. கிராஷ் சென்சார்கள் மற்றும் ஏர் போக் இசியூ போன்றவற்றின் விநியோகத்திலேயே நிறுவனம் பெருத்த சிக்கலைச் சந்தித்திருக்கின்றது.

மஹிந்திரா

வெற்றி கொடிகட்டிட்டு இருக்கு

இதுதவிர செமி-கன்டக்டர் சிப் பற்றாக்குறையும் நிறுவனத்தை லேசாக பதம் பார்த்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழல் நிலவிய போதிலும் மஹிந்திரா மிக சிறப்பாக 2023 ஜனவரியில் ஒட்டுமொத்தமாக 64,335 வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. வெளிநாடுகளுக்கு 3,009 யூனிட் வாகனங்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருக்கின்றது. இதேபோல் வர்த்தக வாகன பிரிவில் 27,742 யூனிட் மஹிந்திரா வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இதுதவிர மூன்றுசக்கர வாகன பிரிவிலும் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகளவிலேயே விற்பனையாகி இருக்கின்றன. இந்த அனைத்து பிரிவிலும் முந்தைய காலகட்டத்தைக் காட்டிலும் அதிகளவு விற்பனையே சென்ற ஜனவரியில் ஆகியிருக்கின்றது. அதாவது முந்தைய மாதங்களை அதிக யூனிட் வாகன விற்பனையால் 2023 ஜனவரி மாதம் வீழ்த்தி இருக்கின்றது. உதாரணமாக 2022 ஜனவரியில் 19,964 யூனிட்டுகளாக மட்டுமே இருந்த மஹிந்திராவின் யுடிலிட்டி, கார் மற்றும் வேன் ஆகிய வாகனங்களின் விற்பனை 2023 ஜனவரியில் 33,040 யூனிட்டுகளாக வளர்ச்சி அடைந்து உள்ளது.

மஹிந்திரா

வளர்ச்சி பாதையில் வணிக வாகன விற்பனை

இது 65 சதவீதம் அதிகம் விற்பனையாகும். இதேபோல், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பிரிவில் 5 சதவீதம் வளர்ச்சியையும், வணிக பயன்பாட்டு வாகன விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியையும் மஹிந்திரா நிறுவனம் பெற்றிருக்கின்றது. 2022 ஜனவரியில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,865 யூனிட்டுகள் மட்டுமே ஆகும். இதேபோல், வர்த்தக பயன்பாட்டு வாகனங்களும் 26,536 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த ரெண்டு தயாரிப்பே முக்கியமான காரணம்

நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சிக்கு மஹிந்திராவின் தயாரிப்புகள் மீது இந்தியர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருப்பதே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பானதாகவும், தரமிக்கதாகவும் உள்ளன. இதுவே இந்தியர்கள் மத்தியில் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, நிறுவனத்தின் தார் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் டிமாண்ட் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

மஹிந்திரா

காத்திருப்பு காலம் மிக மிக அதிகம்

இவற்றிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பு அந்த கார் மாடல்களுக்கு காத்திருப்பு காலத்தை பலமடங்கு அதிகரிக்கச் செய்திருக்கின்றது. மாதங்கள் தொடங்கி வருடங்கள் வரை காத்திருப்பு காலம் நீடித்து காணப்படுகின்றது. வேரியண்ட் மற்றும் நகரங்களைப் பொருத்து காத்திருப்பு காலம் மாறுபட்டுக் காணப்படும். மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய தார் கார் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக அண்மையில் மலிவு விலை தார் வேரியண்டை விற்பனைக்குக் களமிறக்கியது.

ரியர் வீல் டிரைவ் தேர்வுக் கொண்ட வெர்ஷனையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் அறிமுக விலை ரூ. 9.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இதன் ஹையர் எண்ட் வேரிண்ட் ரூ. 16.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படுகின்றது. ஆஃப்-ரோடு மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக புதிய தார் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

முதல் எலெக்ட்ரிக் கார்

இதுவே அந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்கள் குவிய முக்கிய காரணமாக இருக்கின்றது. மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய ஆதிக்கத்தை மின்சார வாகன பிரிவிலும் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தனது எக்ஸ்யூவி 300 காரை மின்சார வெர்ஷனில் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது எக்ஸ்யூவி 400 இவி எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். எலெக்ட்ரிக் காருக்கு அறிமுக விலையாக ரூ. 15.99 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உயர்நிலை தேர்வு ரூ. 18.99 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைக்கும். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra sells 32915 suv s in 2023 january
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X