இது இந்திய தயாரிப்புக்கு மேலும் பெருமையாச்சே!! அமெரிக்க சாலைகளில் இயங்கவுள்ள மற்றொரு இந்திய மாருதி கார்...

மாருதி சுஸுகி நிறுவனம் உள்நாட்டில் தயாரிக்கும் குறிப்பிட்ட மாடல் கார் சமீபத்தில் இருந்து லத்தீன் அமெரிக்க நாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் சென்னைக்கு அருகே உள்ள எண்ணூர் துறைமுகத்தில் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்கப்பட உள்ள அந்த மாருதி சுஸுகி கார் எது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான மாருதி சுஸுகி விளங்குவது உங்களில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடந்த பல வருடங்களாக நம் நாட்டு மக்களின் நம்பிக்கை மிகுந்த கார் பிராண்டாக விளங்கும் இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 3 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 2 ஹரியானா மாநிலத்தில் உள்ளன. 1 தொழிற்சாலை முழுவதும் சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமாக குஜராத்தில் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க சாலைகளில் ’பறக்கவுள்ள’ மற்றொரு இந்திய மாருதி கார்!!

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மாருதி சுஸுகி கார்கள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அருகாமையில் இருப்பதால் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் பெரும்பாலும் மாருதி சுஸுகி கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் நமது சென்னையில் உள்ள துறைமுகங்களில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு. அவ்வாறு தான் தற்போது, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி கார் ஒன்று சென்னைக்கு அருகே எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மாருதி சுஸுகி கார் வேறு எதுவுமில்லை, கிராண்ட் விட்டாரா தான். காம்பெக்ட் எஸ்யூவி ரக காராக களமிறக்கப்பட்டுள்ள கிராண்ட் விட்டாரா கார்களை லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி, ஆப்பிரிக்க & மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பணிகளை துவங்கியுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உண்மையில் இந்திய தயாரிப்புகளுக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு பெருமை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான ஹிசாஷி டகேயூசி கூறுகையில், "இந்தியாவில் இருந்து ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உந்துதல் உடன் சர்வதேச சந்தையில் கால்தடத்தை விரிவாக்கம் செய்ய மாருதி சுஸுகி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. ஏற்றுமதி செய்யும் தயாரிப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெற்றிக்கான முக்கிய தூண்களுள் ஒன்றாகும். கிராண்ட் விட்டாராவை இணைத்திருப்பதன் மூலம் நாங்கள் ஏற்றுமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

கிராண்ட் விட்டாரா 2022 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டு சந்தையில் இந்த காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போன்றதான வெற்றியை வெளிநாட்டு சந்தைகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கிராண்ட் விட்டாரா கார் பெறும் என்று நம்புகிறோம்" என்றார். இந்தியாவில் விற்பனையில் மாருதி கிராண்ட் விட்டாரா காருக்கு டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 முக்கிய போட்டி மாடலாக விளங்குகின்றன. தற்போதைக்கு 5-இருக்கை தேர்வில் மட்டுமே கிடைக்கும் கிராண்ட் விட்டாராவை விரைவில் 7-இருக்கை தேர்வில் கொண்டுவர மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வது மட்டுமின்றி, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் மாருதி சுஸுகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 2.6 லட்ச கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை இந்த 2023 ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் முனைப்பில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது.

இந்தியாவில் பயணிகள் கார்கள் ஏற்றுமதியில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் முக்கிய போட்டி நிறுவனமாக விளங்குகிறது. தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் கடந்த 2022ஆம் ஆண்டில் 1.48 லட்ச கார்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களை காட்டிலும் 13.7% அதிகமாகும்.

Most Read Articles
English summary
Maruti suzuki grand vitara exports starts to latin america africa
Story first published: Thursday, January 19, 2023, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X