இன்சூரன்ஸை கிளைம் செய்ய போகும்போது தடையே இல்லாம இழப்பீட்டை பெற வேண்டுமா? அப்போ இந்த தவறை எல்லாம் செய்யாதீங்க!

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் என்பது மிக முக்கியமானது. விபத்து போன்ற கசப்பான அனுபவங்களின்போது ஏற்படும் மிகப் பெரிய இழப்புகளுக்கு தீர்வு காண இன்சூரன்ஸ் உதவுகின்றன. இந்த இன்சூரன்ஸை கிளைம் செய்யும்போது நமது கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நிராகரிப்பை தவிர்க்க என்ன வழிகள் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். விரிவான பதிவிற்குள் போகலாம்.

என்ன காரணத்தைச் சொல்லி நம்முடைய கிளைமை ரத்து செய்யலாம் என்பதே பெரும்பாலான இன்சூரன்ஸ் கம்பெனி காரர்களின் யோசனையாக இருக்கின்றது. இந்த மாதிரி சூழலில் நாம் செய்யும் சிறு தவறுகூட இன்சூரன்ஸ் கம்பெனி காரர்களுக்கு விருந்தளிக்கும் செயலாக மாறலாம். ஆம், நம்முடைய கிளைம் கோரிக்கையை, நாம் செய்யும் சின்ன தவறைக் காரணம் காட்டி அவர்கள் நிராகரிக்கலாம். இதுபோன்று பல்வேறு நிராகரிப்பு சம்பவங்கள் கடந்த காலங்களில் நம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன.

குறிப்பாக, வாகன இன்சூரன்ஸ் கிளைமிங்கின்போது நீங்க இதை செஞ்சிட்டீங்க, அத செஞ்சிட்டீங்க, அதனால உங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் பண்ண முடியாதுனு சொல்லிடுவாங்க. இந்த மாதிரியான சூழல் நம்மை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். இதுபோன்று இன்சூரன்ஸ் கம்பெனிகள் நம்முடைய கிளைமை நிராகரிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதிலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதாவது, எந்தெந்த காரணங்களுக்காக இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது, அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது:

இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றமாகும். இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம் எதுவாக இருந்தாலும் அவற்றை இயக்க லைசென்ஸ் கட்டாயம். இது இன்றி வாகனத்தை இயக்கினால் கடுமையான அபராதத்திற்கு ஆளாக நேரிடும். இதுமட்டுமில்லைங்க, டிரைவிங் லைசென்ஸ் இல்லாத ஓர் நபர் விபத்தைச் சந்திக்கும்போது ஏற்படும் இழப்புகளுக்கு கிளைமை கோர முடியாது. நாம் கிளைம் கோரினாலும் அதை இன்சூரன்ஸ் கம்பெனி நிராகரித்து விடும். இந்த மாதிரியான சூழலை தவிர்க்க உரிய உரிமத்துடன் வாகனத்தை இயக்குவதே நல்லது.

மது போதையில் வாகனத்தை இயக்குவது:

குடித்துவிட்டு வாகனத்தை இயக்குவது இந்தியவில் கிரிமினல் குற்றமாகும். இதனாலேயே இந்தியாவில் பல்வேறு விபத்துகள் அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக சில கோரமான விபத்துகளுக்கு பின்னால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதே காரணமாக இருக்கின்றது. எனவேதான் இந்த விதிமீறளை இந்திய மோட்டார் வாகன சட்டம் கிரிமினல் குற்றமாக பாவிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளுக்கும் நம்மால் இன்சூரன்ஸ் கிளைமை கோர முடியாது. இந்த கோரிக்கையும் இன்சூரன்ஸ் கம்பெனி காரர்களால் நிராகரிக்கப்படும்.

தேவையற்ற காரணங்களுக்காக வாகனங்களை பயன்படுத்துதல்:

ஓர் வாகனம் அது தயாரிக்கப்பட்ட காரணத்தைத் தாண்டி பிற காரணங்களுக்காக பயன்படுத்தப்படுமானால் அந்த வாகனத்திற்கு ஏற்படும் இழப்புகளை இன்சூரன்ஸ் வாயிலாக கிளைம் செய்ய முடியாது. உதாரணமாக, ஓர் பயணிகள் ஆட்டோ ரிக்சாவை எடுத்துக் கொள்ளலாம். இந்த வாகனத்தில் பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதியாகும். மாறாக, இந்த வாகனங்கள் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனமாக பயன்படுத்தப்படுமானால், அப்போது ஏற்படும் இழப்புகளுக்கான கோரிக்கை நம்மால் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கோர முடியாது. இந்த கோரிக்கையும் அதிகபட்சம் நிராகரிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் உள்ளன.

அங்கீகரிக்கப்படாத அக்ஸெசரீஸ்களை பயன்படுத்த வேண்டாம்:

நம்மில் பலருக்கு நம்முடைய வாகனத்தை அழகாக வைத்துக் கொள்ள விருப்பம் இருக்கும். ஆனால், இதற்காக வெளி சந்தையில் இருக்கும் அலங்காரப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு, அங்கீகரிக்கப்படாத அக்ஸசெரீஸ்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் எனில் அதற்கான இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாது. அதேவேலையில், வாகன உற்பத்தியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அக்ஸசெரீஸ்களை விற்பனக்கு வழங்குகின்றனர். இவற்றை பயன்படுத்தும்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நம்முடைய கோரிக்கையை நிராகரிக்காது. அதேவேலையில், நாம் பயன்படுத்தும் அக்ஸசெரீஸ்கள் ஆர்சி புத்தகத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் உங்க பேருல மட்டுமே இருத்தல் வேண்டும்:

செகண்ட்-ஹேண்டில் காரை வாங்கும் பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கின்றது. வாகனத்தின் ஆர்சி புத்தகத்தை தங்களின் பெயருக்கு மாற்றும் அவர்கள், இன்சூரன்ஸ் போன்றவற்றை தங்களுடைய பெயருக்கு மாற்ற தவறிவிடுகின்றனர். இந்த மாதிரியான சூழலில் விபத்தைச் சந்தித்தால் பெரிய சிக்கலே. ஆம், உங்களுடைய பெயரில் இன்சூரன்ஸ் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் கோரிக்கையை நிராகரித்துவிடலாம். அதேவேலையில், வாகனத்தை வாங்கிய பின்னர் பழைய ஓனரிடம் இருந்து குறிப்பிட்ட சில ஆவணங்களைப் பெற்று அதே பழைய இன்சூரன்ஸை உங்களுடைய பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வழிகளை ஏற்கனவே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்திவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

விபத்து நடந்த உடனேயே கோரிக்கையை முன் வச்சிடுங்க:

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சில விபத்து நடைபெற்ற உடனேயே கிளைமிற்கான கோரிக்கைய முன் வைக்க வேண்டும் என்பதை கூறுகின்றன. இது சாத்தியம் அற்றது என்பதால் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இதற்கு அவகாசம் வழங்கப்படுகின்றது. இதைத் தாண்டி நாம் கிளைம் கோரிக்கையை வைக்கும்போதே அந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது. ஆகையால், எந்தவொரு சம்பவம் அரங்கேறினாலும் கிளைம் கோரிக்கையை முடிந்த அளவு தாமதிக்காமல் விரைவாக கொடுப்பது மிக மிக நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Claiming insurance easy avoid these mistakes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X