மரணத்திற்கு முன்பே சுய இரங்கல் குறிப்பு... நெகிழ வைத்த முன்னாள் ராலி ரேஸ் வீரர் உமாமகேஷ்!

முன்னாள் கார் பந்தய வீரர், நடிகர், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்ட எஜ்ஜி உமா மகேஷ் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவு மோட்டார் பந்தய உலகிற்கு மட்டுமின்றி, பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர் மரணத்திற்கு முன்பு தனக்கு எழுதிய இரங்கல் குறிப்பும் எல்லோரையும் நெகிழ வைத்துள்ளது.

உமாமகேஷ்

சென்னையை சேர்ந்த உமாமகேஷ் ராலி ரேஸ் பந்தயங்களில் பங்கேற்று அசத்தியவர். புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த ஃபார்முலா ஒன் பந்தய அமைப்பின் துணை செயலாளராகவும் பதவி வகித்தவர். தமிழகத்தை சேர்ந்த மோட்டார் பந்தயத் துறையில் மிக முக்கியமானவராக இருந்த உமாமகேஷ் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார். நாடகம் மற்றும் சினிமா நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர் பகுத்தறிவு கொள்கைகள் மீது பற்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சிக்கலான இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த சூழலில், தான் மரணத்தை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதிய அவர், அறுவை சிகிச்சைக்கு முன்பாக தனக்கு தானே இரண்டு இரங்கல் மடல்களை சொந்தமாக எழுதியுள்ளார். மேலும், தான் மரணமடைந்தால், இந்த இரங்கல் மடல்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒன்றும், செய்தித்தாள்களில் பிரசுரிக்க வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மரணமடைந்தார். அவரது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக அவர் மரணத்தை தழுவி உள்ளார். அவரது விருப்பப்படியே, அவர் தனக்கு எழுதிய இரங்கல் குறிப்புகள் செய்தித்தாள்களிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் தனது வாழ்க்கை குறித்து மிகவும் உருக்கமாக எழுதி உள்ளார்.

உமாமகேஷ் பதிவு

செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில்,"அவரது பணி, தொழில் சம்பந்தமான விபரங்களுடன் சேர்த்து, எனது பார்ட்டி முடிந்துவிட்டது. எனது பின்னால் இருப்பவர்களுக்கு எந்த ஹேங்ஓவரும் இருக்காது என்று நம்புகிறேன். நன்றாக வாழுங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்; பார்ட்டியை தொடருங்கள். ஏதோ இருக்கிறோம் என்பதைவிட மகிழ்வுடன் வாழுங்கள். இந்த பூமி எனும் கிராமத்தில் மதசார்பற்றவனாக வாழ்ந்தவன்," என்று தன்னை அடையாளப்படுத்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த இரங்கல் செய்தியில், எஜ்ஜி உமாமகேஷ் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி இருக்கிறார்.

அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் எழுதிய இரங்கல் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் எந்த அளவுக்கு கார்கள் மீது பிரியம் வைத்திருந்தார் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில், அவர் எழுதியிருக்கிறார். அதாவது, அவரை ஒரு விண்டேஜ் கார் போன்று உருவகப்படுத்திக் கொண்டு உருக்கமாக எழுதி உள்ளார்.

உமா மகேஷ் ஃபேஸ்புக் பதிவு

அதில், எனது விண்டேஜ் வாகனம் புதுப்பிக்கும் பணி நடந்தது. இந்தியாவின் சிறந்த மெக்கானிக்குகள், நவீன கருவிகள், நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலமாக உயிர்ப்பிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும், துரதிருஷ்டவசமாக எஞ்சின் அறையில் தெறிப்பு விழுந்துவிட்டது. பிஸ்டன்கள் செயலிழந்துவிட்டன. இந்த பழைய வாகனம் இப்போது உடைக்கும் நிலைக்கு வந்தவிட்டது.

அதிர்ஷ்டவசமாக சில பாகங்கள் மட்டும் இதர விண்டேஜ் வாகனங்களுக்கு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. உலகின் பல்வேறு வகையான நிலப்பரப்பிலும் 72 ஆண்டுகள் இந்த வாகனம் சென்று வந்துள்ளது. அதி உச்ச வெப்பநிலை, தாள முடியாத குளிர் என அனைத்திலும் சிறப்பாக இயங்கியது. நிச்சயம் இது நினைவு கொள்ளப்படும்," என்று அவர் தனக்குத்தான இரங்கல் மடலை எழுதி உள்ளார்.

இந்த ஃபேஸ்புக் பதிவில் அவரது நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை சேர்ந்தவர்கள் அவரது நினைவையும், அவரது பண்புகளையும் போற்றி பிரியா விடை கொடுத்துள்ளனர்.

Most Read Articles
English summary
An eminent former car rally driver, Ejji Umamahesh, wrote a self-obituary before he died.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X