2022 கேடிஎம் 390 அட்வென்ச்சர் & 250 அட்வென்ச்சர் பைக்குகள் வெளியீடு!! இப்படிப்பட்ட தோற்றத்தில் எதிர்பார்க்கல

2022 கேடிஎம் 390 அட்வென்ச்சர் & 250 அட்வென்ச்சர் பைக்குகள் புதிய அப்டேட்கள் மற்றும் புதிய நிறங்களுடன் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் முதன்முதலாக 390 அட்வென்ச்சர் பைக்கை 2019 EICMA கண்காட்சியின் மூலம் உலக மக்களுக்கு வெளிக்காட்டி இருந்தது. அதன்பின் இந்தியாவில் இந்த அட்வென்ச்சர் பைக் 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட, கடந்த ஆண்டின் இறுதியில் 250 அட்வென்ச்சர் பைக்கும் அறிமுகமாகியது.

மற்ற கேடிஎம் பைக்குகளை போல் இந்த அட்வென்ச்சர் பைக்குகளும் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் சாகான் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, இங்கு தயாரிக்கப்படும் கேடிஎம் பைக்குகள் வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் தான் அப்டேட் செய்யப்பட்ட 390 அட்வென்ச்சர் & 250 அட்வென்ச்சர் பைக்குகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 390 அட்வென்ச்சர் பைக்கை பொறுத்தவரையில், கேடிஎம் நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளை முன்பை காட்டிலும் அட்வென்ச்சர் பயணங்களுக்காக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வகையில் அப்டேட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது புத்துணர்ச்சியான தோற்றம் மற்றும் புதிய நிறத்தேர்வுகள் மட்டுமின்றி, எலக்ட்ரானிக் தொகுப்புகளையும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த வகையில் ஸ்ட்ரீட் & ஆஃப்ரோடு என்ற ஒரு புதிய டிராக்‌ஷன் கண்ட்ரோல் மோட்கள் 2022 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்கள் தன்னிச்சையாக பின் சக்கர ஸ்லிப் கோணத்தை அட்ஜெஸ்ட் செய்வது மட்டுமின்றி, சகதியான & ஈரமான பாதைகளில் ரைடருக்கு கூடுதல் கண்ட்ரோலை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் உரிமையாளர்கள் பலர், ஆஃப்-ரோட்டிற்கு செல்லும் சில சமயங்களில் வாகனம் அப்படியே நகரமால் நின்றுவிடுவதாகவும், இல்லையென்றால் கீழே சரிந்துவிடுவதாகவும் கூறி, இந்த அட்வென்ச்சர் பைக்கின் டிராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு வந்தனர்.

இத்தகைய சமயங்களில் மீண்டும் பயணத்தை தொடர டிராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் கூறி இருந்தனர். இது தற்போது புதிய 390 அட்வென்ச்சரில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ளும்போது எதிர்பாராத விதமாக சரிய நேர்ந்தாலும், 2022 390 அட்வென்ச்சர் பைக் தொடர்ந்து ஆஃப்-ரோடு டிராக்‌ஷன் மோடில் இயங்க அனுமதிக்கும் என கேடிஎம் தெரிவித்துள்ளது.

390 அட்வென்ச்சரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அதன் அலாய் சக்கரங்கள். முன்பு வழங்கப்பட்ட 12 ஸ்போக்ஸ் சக்கரங்களுக்கு பதிலாக, இந்த 2022 மாடல் 10 ஸ்போக்ஸ் சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமும் பைக்கிற்கு கூடுதல் விரைப்புத்தன்மையை வழங்குவதாகவும், இயக்கத்தின்போது சக்கரங்களின் ரிம்களுக்கு ஏற்படும் தடைகளை குறைப்பதாகவும் அமைந்துள்ளன என்று கேடிஎம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலமாக கடினமான சூழலிலும் நீடித்து உழைக்கும் திறன் இந்த அட்வென்ச்சர் பைக்கில் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பு உடன் ஆரஞ்ச் & ஆரஞ்ச் உடன் நீலம் என்கிற இரு விதமான பெயிண்ட் தேர்வுகள் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் நீல நிறத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட புதிய தலைமுறை ஆர்சி390 பைக்கில் காணலாம்.

புதிய 250 அட்வென்ச்சர் பைக்கை பொறுத்தவரையில், இந்த பைக்கிற்கும் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்வென்ச்சர் பைக்கிலும் 12 ஸ்போக்ஸிற்கு பதிலாக 10 ஸ்போக்ஸ் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பைக்கிற்கு வழங்கப்பட்டு வந்த நிறத்தேர்வுகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. ஆரஞ்சு உடன் வெள்ளை, நீலத்துடன் வெள்ளை என்ற இரு நிறத்தேர்வுகள் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

மற்றப்படி இந்த இரு அட்வென்ச்சர் பைக்குகளில் பொருத்தப்படும் என்ஜின் அமைப்புகளில் எந்த மாற்றத்தையும் கேடிஎம் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. இந்த 2022 மாடல்களிலும் அவற்றின் வழக்கமான என்ஜின்களே தொடரப்பட்டுள்ளன. 390 அட்வென்ச்சரில் பொருத்தப்படும் 373சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 43.5 பிஎஸ் மற்றும் 37 என்எம் டார்க் திறனையும், 250 அட்வென்ச்சரின் 249சிசி என்ஜின் 30 பிஎஸ் மற்றும் 24 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இந்த இரு கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகளில் எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட், ப்ளூடூத் இணைப்புடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இரட்டை ஏபிஎஸ், விரைவான கியர்மாற்றி உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக பொருத்தப்படுகின்றன. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 390 & 250 அட்வென்ச்சர் பைக்குகளின் விற்பனை மாதந்தோறும் குறைந்து வருகிறது. இதனால் 2022 390 அட்வென்ச்சர் & 250 அட்வென்ச்சர் பைக்குகள் சரியான நேரத்தில் தான் விற்பனைக்கு வரவுள்ளன.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
2022 KTM 390 Adventure, 250 ADV Debuts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X