ஸ்கூட்டரோட லுக்குக்கும் விலைக்கும் சம்பந்தமே இல்ல.. பட்ஜெட் விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..

மிகக் குறைவான விலையில் அட்டகாசமான தோற்றம் மற்றும் அம்சங்கள் கொண்ட புதுமுக ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கோமகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் கோமகி-யும் ஒன்று. இந்த நிறுவனம் தன்னுடைய பிராண்டின்கீழ் எக்கசக்கமான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தனது புதிய தயாரிப்பான ஃப்ளோரா எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இதனை பட்ஜெட் விலையில் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரூ. 78,999 என்ற விலையே புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கோமகி நிர்ணயம் செய்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிறுவனத்தின் ஹைஸ்பீடு ஸ்கூட்டர் பிரிவிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். கோமகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக மூன்று பிரிவுகளின்கீழ் தனது மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், ஹை-ஸ்பீடு ஸ்கூட்டர் பிரிவுடன் சேர்த்து ஸ்மார்ட் ஸ்கூட்டர் மற்றும் ஈசி ரிக்சா ஆகிய பிரிவுகளின் கீழே கோமகி தனது மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதில், ஸ்மார்ட் ஸ்கூட்டர்கள் பிரிவில் எக்ஸ்ஜிடி-கேஎம், எக்ஸ்ஜிடி-எக்ஸ்-ஒன், எக்ஸ்ஜிடி-எக்ஸ் வோக், எக்ஸ்ஜிடி-எக்ஸ்3, எக்ஸ்ஜிடி-எக்ஸ்4, எக்ஸ்ஜிடி-எக்ஸ்5, எக்ஸ்ஜிடி கிளாசிக், எக்ஸ்ஜிடி விபி, எம்எக்ஸ் 3, எக்ஸ்ஜிடி கேட்-2.0 ஆகிய வாகன மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் சற்று வேகம் குறைந்த மின்சார இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், சிறிய உருவம் கொண்ட எலெக்ட்ரிக் பைக் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்டவை விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இதேபோல், ஹைஸ்பீடு ஸ்கூட்டர்கள் பிரிவிலும் பன்முக மின்சார வாகனங்கள் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ரேஞ்ஜர், வெனிஸ், டிஎன்-95, எஸ்இ, எல்ஒய், டிடி-3000 மற்றும் வெனிஸ் ஈகோ உள்ளிட்ட எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே புதிதாக தற்போது ஃப்ளோரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெப்பம் மற்றும் தீயை தவிர்க்கும் வசதிக் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதன் வாயிலாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பாதுகாப்பு கிடைப்பது உறுதியாகி உள்ளது. LiFePO4 எனும் பேட்டரி பேக்கே ஃப்ளோராவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் லித்தியம் அயன் ஃபெர்ரோ பாஸ்பேட் பேட்டரி ஆகும். இதனை தனியாக கழட்டி மாட்டிக் கொள்ள முடியும். இந்த மின்சார ஸ்கூட்டரில் இன்னும் பல சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், செல்ஃப் டைக்னாஸ்டிக் மீட்டர், பேக் ரெஸ்ட், பார்க்கிங் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி அதிக கம்ஃபோர்ட்டான பயணத்தை வழங்கும் விதமாக மிருதுவான இருக்கை, பூட் ஸ்பேஸும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன் டூயல் ஃபூட் ரெஸ்ட், ஃபிளாட் ஃபூட் போர்டு போன்ற அம்சங்களும் இந்த மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், இதில் ரைடு மேற்கொள்ளும்போது அலாதியான பயண அனுபவத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இதன் ரேஞ்ஜ் திறனும் சற்று அதிகம் ஆகும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

கியர் மோட் மற்றும் ரிவர்ஸ் மோட் எனும் இரு விதமான ரைடிங் மோட்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில், கியர் மோட் வெவ்வேறு விதமான வேகங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மாற்றிய இயக்க உதவும். ரிவர்ஸ் மோடானது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பின்னோக்கி இயக்குவதற்கு உதவியாக இருக்கும். மிகவும் அட்டகாசமான மற்றும் ஸ்டைலில் தோற்றத்தில் இந்த ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. கிளாசிக் தோற்றத்தில் அது காட்சியளிக்கின்றது.

இந்த தோற்றத்திற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், பாடி பேனலில் ஆங்காங்க குரோம் அணிகலன் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் நவீன கால தொழில்நுட்ப வசதியாக ப்ளூடூத் இணைப்பு மற்றும் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, டிஸ்க் பிரேக் அம்சமும் ஃப்ளோரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், ஜெட் பிளாக், கார்னெட் ரெட், ஸ்டீல்கிரே மற்றும் சேக்ரமெண்டோ கிரீன் உள்ளிட்ட பன்முக நிற தேர்வுகளிலும் ஃப்ளோராவை வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Komaki flora launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X