பல வருஷமா மார்க்கெட்டை ஆளும் பல்சர் பைக்! 2026ஆம் ஆண்டிற்காக என்னென்ன மாற்றங்கள்?
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், 2026ஆம் ஆண்டுக்கான பல்சர் 125 (Pulsar 125) பைக்கை 2026 ஜனவரி 22 அன்று அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடலில் புதுப்பிக்கப்பட்ட முகப்புத் தோற்றமும், சில அழகியல் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த 125சிசி மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு ஆர்வமூட்டும் வகையில் பஜாஜ் அறிமுகப்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து இனி விரிவாகப் பார்க்கலாம்.
2026 பஜாஜ் பல்சர் 125 பைக்கின் மிக முக்கியமான மேம்பாடு, ஹெட்லேம்ப் பகுதியில் செய்யப்பட்டுள்ளது. பழைய ஹாலோஜன் யூனிட்டுக்கு பதிலாக, அகலமான LED ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. இது இரவு நேரப் பயணத்தின் போது சிறந்த வெளிச்சத்தையும், அதிக தூரம் பாயும் ஒளியையும் அளித்து, ஓட்டுநர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

மேலும், இந்த மோட்டார்சைக்கிள் புதிய கலர் ஆப்ஷன்களையும், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் டிசைன்களையும் பெற்றுள்ளது. கருப்பு கிரே (Black Grey), கருப்பு ரேசிங் ரெட் (Black Racing Red), கருப்பு சியான் ப்ளூ (Black Cyan Blue) மற்றும் டேன் பழுப்பு (Tan Beige) உடனான ரேசிங் ரெட் (Racing Red) என்பன புதிய பல்சர் 125 பைக்கிற்கான கலர் ஆப்ஷன்கள் ஆகும்.
பல்சர் 125 பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. பைக்கின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட இரட்டை ரியர் ஷாக் அப்சார்பர்களும் சஸ்பென்ஷன் பணிகளைத் தொடர்கின்றன. மேலும், பைக்கின் பிரேக் அமைப்பிலும் முன் டிஸ்க் பிரேக் மற்றும் பின் டிரம் பிரேக் அமைப்பு அப்படியே உள்ளது.

புதிய பல்சர் 125 பைக்கின் முன் சக்கரத்தில் சறுக்கலை தவிர்க்கும் பிரேக்கிங் தொழில்நுட்பம் மற்றும் அதே அதிக பிடிமானம் கொண்ட ட்யூப்லெஸ் டயர்களுடன் வந்துள்ளது. தொழிற்நுட்ப ரீதியாக, மோட்டார்சைக்கிள் அதன் முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் இணைப்பு மூலம் மொபைல் போன் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள் குறித்த எச்சரிக்கைகள், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், கடிகாரம் மற்றும் DTE அளவீடு போன்றவற்றை வழங்குகிறது.
கூடுதல் வசதிக்காக USB சார்ஜிங் போர்ட்டும் புதிய பல்சர் 125 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் வழக்கமான 124.38சிசி சிங்கிள்-சிலிண்டர், 2-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8,500 rpm-ல் 11.8 பிஎஸ் ஆற்றலையும், 6,500 rpm-ல் 10.8 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பைக்கில் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. 2026 பல்சர் 125 பைக்கின் கார்பன் ஃபைபர் சிங்கிள்-சீட் (Carbon Fiber Single-seat) வேரியண்ட் ரூ.92,320 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாக பிளவுப்பட்ட ஸ்பிளிட்-சீட் (Split-seat) வேரியண்ட்டிற்கு ரூ.2,131 கூடுதல் விலையுடன் ரூ.94,451 (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய வண்ணங்களும் கிராபிக்ஸ் வடிவமைப்புகளும் புதிய பஜாஜ் பல்சர் 125 பைக்கிற்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான தோற்றத்தை வழங்கியுள்ளன. இந்த 125சிசி பல்சர் பைக் ஆனது ஹீரோ கிளாமர் (Hero Glamour), ஹோண்டா ஷைன் (Honda Shine), ஹோண்டா எஸ்பி 125 (Honda SP125) மற்றும் டிவிஎஸ் ரைடர் (TVS Raider) போன்ற இந்தியாவின் மற்ற 125சிசி பைக்குகளுடன் விற்பனையில் போட்டியிடுகிறது.


Click it and Unblock the Notifications









