3 லட்ச ரூபா விலை வித்தியாசத்தில் இத்தனை வசதிகளா! புதிய டாடா பன்ச் இவி காரை புக்கிங் போடும்முன் தெரிஞ்சிக்கோங்க
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரான பன்ச் இவி (Punch EV) 2026ஆம் ஆண்டிற்கான மேம்படுத்தப்பட்ட பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வடிவமைப்புகள், பெரிய பேட்டரி பேக்குகள் மற்றும் 'பேட்டரி-சேவை-திட்டம்' (Battery-as-a-Service - BaaS) ஆகியவற்றுடன் வெளிவந்துள்ள 2026 பன்ச் இவி கார் ஆனது கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட பன்ச் ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் காரில் காணப்பட்ட பல மாற்றங்களையும், பெரிய பேட்டரி பேக்குகளையும் உள்ளடக்கியுள்ளது.
புதிய 2026 பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.9.69 லட்சம் முதல் ரூ.12.59 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது முந்தைய பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை விட ரூ.1.85 லட்சம் வரை மலிவானதாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த விலைகள் ஆரம்ப சலுகை விலைகள் என்றும், எதிர்காலத்தில் உயரலாம் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா வாகன வரிசையில் முதன்முறையாக, பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு 'பேட்டரி-சேவை-திட்டம்' (BaaS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சம் முதல் தொடங்குகிறது. பேட்டரி பயன்பாட்டுக் கட்டணமாக ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.60 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பன்ச் இவி, ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட்+ (Smart+), அட்வென்ச்சர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு+ (Empowered+) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான சிறப்பம்சங்களை பெறலாம் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வேரியண்ட்கள் வாரியான அம்சங்களைப் பார்க்கும்போது, ஸ்மார்ட் வேரியண்டில் 30kWh பேட்டரி, 6 ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (TPMS), எல்இடி டிஆர்எல்-கள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பிரகாசமான டாடா லோகோ கொண்ட ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் இரண்டு டிரைவ் மோட்கள் (சிட்டி மற்றும் ஸ்போர்ட்) உள்ளிட்டவை அடங்கும்.
ஸ்மார்ட் வேரியண்ட் 30kWh பேட்டரி உடன் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஸ்மார்ட்+ வேரியண்ட் 30kWh மற்றும் 40kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஸ்மார்ட் வேரியண்டின் அம்சங்களுடன், 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஸ்டீயரிங் சக்கரத்தில் கண்ட்ரோல்கள், வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (Apple CarPlay), 65 வாட்ஸ் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், தன்னிச்சையாக ஒளி மங்கும் ஐஆர்விஎம் (IRVM) மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா ஆகியவை இதில் கூடுதல் அம்சங்களாக கிடைக்கும். மேலும், 40kWh பேட்டரி உடன் வாங்கினால் இன்னும் கூடுதலாக ஹில்-ஹோல்ட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 16-அங்குல ஸ்டீல் சக்கரங்கள், ஈக்கோ டிரைவ் மோட் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற கூடுதல் அம்சங்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
அட்வென்ச்சர் வேரியண்ட் 40kWh பேட்டரியுடன் கிடைக்கிறது. ஸ்மார்ட்+ 40kWh வேரியண்ட்டின் அம்சங்களுடன் கூடுதலாக காரை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்ய புஷ்-பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல், இறங்குமான சாலைகளில் இறங்குவதற்கான கண்ட்ரோல், எலக்ட்ரிக்கலாக அட்ஜஸ் செய்யக்கூடிய ORVM-கள் மற்றும் 16-அங்குல ஏரோ-ஆப்டிமைஸ் செய்யப்பட்ட இரும்பு சக்கரங்கள் ஆகியவை கிடைக்கும்.
எம்பவர்டு வேரியண்ட் 40kWh பேட்டரியுடன் வருகிறது. அட்வென்ச்சர் வேரியண்ட்டின் அம்சங்களுடன், 360-டிகிரி கேமரா, பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, தன்னிச்சையாக மடங்கக்கூடிய ORVM-கள், காருக்கு பின்பக்கத்தில் எல்இடி லைட் பார், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் மற்றும் கேபின் காற்று சுத்திகரிப்பான் போன்ற நவீன அம்சங்கள் இதில் அடங்குகின்றன.

எம்பவர்டு+ வேரியண்ட் 40kWh பேட்டரியுடன் வருகிறது. மேலே கண்ட எம்பவர்டு வேரியண்ட்டின் அம்சங்களுடன், குரல் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய சன்ரூஃப், லெதரெட் இருக்கைகள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், பின் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட், தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய IRVM, வயர்லெஸ் சார்ஜிங் பேட், SOS அழைப்பு வசதி, எல்இடி ஹெட்லைட்கள், கார்னரிங் ஃபங்ஷன் உடன் கூடிய எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் ரூஃப் ரெயில்கள் போன்ற பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் பட்ஜெட் அனுமதித்தால், புதிய டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் எம்பவர்டு அல்லது எம்பவர்டு+ வேரியண்டுகளை தேர்வு செய்வது சிறந்தது. இந்த இரண்டுக்கும் இடையே ரூ.30,000 மட்டுமே வித்தியாசம் உள்ளது. போதிய அளவிற்கு பட்ஜெட் இல்லையென்றால், ஸ்மார்ட்+ 40kWh வேரியண்ட் ரூ.10.89 லட்சம் விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது. இரண்டாம் நிலை வேரியண்ட்டான இதில் அடிப்படை அம்சங்களுடன் சில ஆடம்பர அம்சங்களையும் பெறலாம்.


Click it and Unblock the Notifications









