21 வருட பழைய கார் இதுனு சொன்னா உருவாக்குன கார் கம்பெனி கூட நம்பாது! மொத்த செலவு ரூ.2 லட்சம் கூட இல்ல!
குறைந்த விலைக்கு ஒரு பழைய காரை வாங்கி, அதை புத்தம் புதியது போல மாற்றுவது பலரின் கனவாகும். குறிப்பிட்ட ஒரு கார் மீதான ஆர்வம் அல்லது பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முடிவை பலர் எடுக்கின்றனர். அதிக பணம் செலவழிக்காமல் ஒரு காரை சொந்தமாக்குவதற்கு இது ஒரு சிறந்த வழியாகவும் அமைகிறது.
இந்த நிலையில், 'வண்டிபிராந்தன்' என்ற மலையாள யூடியூப் (Youtube) சேனலில் சமீபத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று, ஒருவர் தனது 21 ஆண்டுகள் பழைய ஹூண்டாய் சான்ட்ரோ (Hyundai Santro) காரை எவ்வாறு புத்திசாலித்தனமான செலவுகள் மற்றும் கவனமான மறுசீரமைப்பு மூலம் புதுப்பித்தார் என்பதைக் காட்டுகிறது. தற்போது அந்தக் கார், ஓனரின் விருப்பத்திற்கேற்ற பெயிண்ட்டில் அசத்துகிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கார், 2004 மாடலான சான்ட்ரோ ஜிங் (Xing) ஆகும். இது கேரளாவின் கொச்சியில் இருந்து வாங்கப்பட்டது. உரிமையாளர் கடந்த ஆண்டு இதை ரூ.40,000க்கு வாங்கினார். இந்த மறுசீரமைப்பு திட்டத்தில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார், அதே நேரத்தில் செலவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினார்.
இதற்காக அவர் தனது வீட்டின் பின்புறத்தில், வாடகைக்கு எடுத்த இயந்திரங்களைப் பயன்படுத்தி கஸ்டமைஸ் (Customize) பெயிண்ட் வேலையைச் செய்தார். தன் சொந்த முயற்சியில் செய்ததால், பெயிண்டிங் செலவை ரூ.50,000க்கும் குறைவாக ரூ.35,000இல் அவரால் வைத்திருக்க முடிந்தது. இந்த கார் இப்போது டூயல்-டோன் பிஸ்தா பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் ஜொலிக்கிறது. சக்கரங்களிலும் பச்சை நிற தொடுதல்களைக் காணலாம்.

முகப்பு விளக்குகள் இரண்டும் மாற்றப்பட்டன. ஒவ்வொன்றின் விலையும் ரூ.2000 ஆகும். ஃபாக் விளக்குகளை மாற்றுவதற்கு ஒவ்வொன்றிற்கும் ரூ.900 செலவானதாக வீடியோவில் தெரிவித்துள்ளனர். அசல் கிரில் மீண்டும் சரிசெய்யப்பட்டு, வைப்பர்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, காரில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ஒரு ஆண்டெனா பொருத்தப்பட்டுள்ளது, இது காரின் பின்புறத்தில் உள்ளது.
வழக்கமாக சான்ட்ரோ ஜிங் காரில் ஆண்டெனா முன்புறத்தில் இருக்கும். பின்புறத்தில் உள்ள இரண்டு டெயில் விளக்குகளுக்கும் தலா ரூ.750 செலவானது. ஸ்பாய்லர் மற்றும் உயரமாகப் பொருத்தப்பட்ட ஸ்டாப் விளக்கு மீண்டும் சரிசெய்யப்பட்டன. பின்புற பம்பரில் இப்போது பார்க்கிங் சென்சார்களுடன், காரில் புதிய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கார் முதலில் வந்தபோது அதிக துருப்பிடித்து இருந்ததாகவும், அதை அகற்ற அதிகமாக உழைக்க வேண்டியிருந்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார். காரின் உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகள் புதிய அப்ஹோல்ஸ்டரி உடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன. முன் வரிசையில் பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மிகவும் வசதியானதாகவும், சவுகரியமான பயணத்திற்கு ஆதரவாகவும் உள்ளன.
பவர் விண்டோ ஸ்விட்சுகள் மாற்றப்பட்டு, ஹெட்லைனரும் புதியதாக உள்ளது. சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் மியூசிக் சிஸ்டம் ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளன. பின் இருக்கையும் புதிய அப்ஹோல்ஸ்டரி உடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காரை மீட்டெடுக்க வாகன விலையை காட்டிலும் கூடுதலாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது. இதில், காரின் ஃபிட்னஸ் சோதனைக்கான ரூ.15,000 கட்டணங்களும் அடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 21 வருட பழைய காரை இப்போது மாற்றுவது என்பது நீங்கள் நினைப்பதை விட கடினமானது ஆகும். ஏனெனில், அப்போது உருவாக்கப்பட்ட காருக்கு இப்போது பாகங்கள் கிடைப்பது அரிதானது. அதற்காக அதிகம் அலைய வேண்டியது மட்டுமன்றி, அதிக செலவும் ஏற்படும். இந்த 21-வருட சாண்ட்ரோ காரின் உரிமையாளரும் மொத்தம் ரூ.1.40 லட்சம் செலவு செய்துள்ளார். ஆனால், இவ்வளவு செலவு செய்தாலும் கார் பார்ப்பதற்கு அழகாக உள்ளது.


Click it and Unblock the Notifications









