இனி இவங்க எல்லாம் டோல்கேட்களில் 4 மடங்கு அதிக கட்டணம் செலுத்தணும்! சத்தமே இல்லாமல் அமலுக்கு வந்த அதிரடி சட்டம்
இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பது கிடையாது. நிறைய பேர் குடிபோதையில் வாகனங்களை இயக்குகின்றனர். அத்துடன் நிறைய பேர் செல்போனில் பேசி கொண்டேயும் வாகனங்களை ஓட்டுகின்றனர். இது போதாதென்று இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் நிறைய பேர் ஹெல்மெட் அணிவதே இல்லை.
இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்திய சாலைகளில் ஏராளமான விபத்துக்கள் நடைபெற்று கொண்டிருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அது ஓவர்லோடு பிரச்சனை ஆகும். இந்திய சாலைகளில் பயணம் செய்யும் ஏராளமான லாரிகளில் நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிக சரக்குகளை கொண்டு செல்வதை காணலாம்.

இது இந்தியாவிற்கு 2 விதமான வழிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சாலைகள் சேதம் அடைவது முதல் பிரச்சனை ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 1,47,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 அல்லது அதற்கும் மேற்பட்ட லேன்களை கொண்ட சாலைகளின் தொலைவு மட்டும் சுமார் 47,000 கிலோ மீட்டர்கள் ஆகும்.
இதற்காக அரசு மிகப்பெரிய தொகையை செலவு செய்துள்ளது. ஆனால் ஓவர்லோடு ஏற்றி வரும் வாகனங்களால், தேசிய நெடுஞ்சாலைகள் மிக கடுமையாக சேதம் அடைகின்றன. அத்துடன் பாலங்களிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஓவர்லோடு வாகனங்களால் இந்தியாவிற்கு ஏற்படும் 2வது பிரச்சனை, சாலை விபத்துக்கள் ஆகும்.

ஓவர்லோடு ஏற்றி வரும் வாகனங்கள், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் விபத்தில் சிக்குகின்றன. இதன் காரணமாகவும் இந்திய சாலைகளில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்வதை தடுக்க மத்திய அரசு தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இனி நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 10 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை அதிக சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள், டோல்கேட்களில் 2 மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும். அதாவது வழக்கமான கட்டணம் 500 ரூபாய் என்றால், 10 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை அதிக சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள், 1,000 ரூபாயை டோல்கேட் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதுவே நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட 40 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்கள், வழக்கமான கட்டணத்தை விட, 4 மடங்கு அதிக கட்டணத்தை டோல்கேட்களில் செலுத்த வேண்டும். அதாவது வழக்கமான கட்டணம் 500 ரூபாய் என்றால், இந்த வாகனங்கள் 2,000 ரூபாயை டோல்கேட் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதுமட்டுமின்றி ஓவர்லோடு உடன் வரும் வாகனங்கள் தனியாக 20 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் செலுத்த வேண்டும். அத்துடன் ஒவ்வொரு டன்னுக்கும் (1 டன் = 1,000 கிலோ) 2,000 ரூபாயை அபராதமாகவும் செலுத்த வேண்டும். அதாவது ஒரு வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 15 டன் அதிக சரக்கு இருந்தால், 50,000 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் (20,000 + 15 டன்களுக்கு தலா 2,000 என 30,000).
அத்துடன் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ள சரக்குகள், உடனடியாக வாகனத்தில் இருந்து அகற்றப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 15ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, இனி வரும் காலங்களில், வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்லப்படுவது தடுக்கப்படும் என நாம் நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே தவறுகள் குறையும். எனவே மத்திய அரசின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும். ஆனால் இந்த விதிமுறைகள் பெயரளவிற்கு இல்லாமல், முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.


Click it and Unblock the Notifications








