60 வயதில் செய்யுற காரியமா இது... இளம் ரைடர்களே மேற்கொள்ள தயங்கும் பைக் பயணம்!
இந்தியாவை சேர்ந்த 60 வயதான கேப்ரில் ஷரத் குமார் என்பவர் தனது வயதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 38 நாடுகளுக்கு தனி ஆளாக மோட்டார்சைக்கிள் பயணத்தை துவங்கியுள்ளார். கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்தவரான இவரது மோட்டார்சைக்கிள் பயணம் குறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பல நாடுகளுக்கு தொலைத்தூர மோட்டார்சைக்கிள் பயணங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். ஜாலிக்காகவும் அல்லது குறிப்பிட்ட பிரச்சாரத்தை வலியுறுத்துவதற்காகவும் அவ்வப்போது இவ்வாறான தொலைத்தூர பயணங்களை பலர் மேற்கொள்கின்றனர். கேப்ரில் ஷரத் குமார் இந்த பயணத்தை தனது மகிழ்ச்சிக்காகவும், அதேநேரம் போதைப்பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை வலியுறுத்தும் விதமாகவும் துவங்கியுள்ளார்.

60 வயதில் இவ்வாறான தொலைத்தூர பைக் பயணத்தை மேற்கொண்டு போதை பழக்கங்கள் இல்லாமல் உடலை நல்லப்படியாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதை கேப்ரில் ஷரத் குமார் வலியுறுத்துகிறார். மங்களூருவின் பல்மட்டா என்கிற பகுதியில் உள்ள CSI ஷாந்தி கேத்ட்ரல் தேவாலயத்தில் இருந்து இவரது இந்த நீண்ட நெடிய பயணம் துவங்கியது.
கேப்ரில் ஷரத் குமாரின் இந்த பயணம் ஆனது மேற்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழியாக மொத்தம் 38 நாடுகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. முதலாவதாக, மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று, அங்கிருந்து ஹைதராபாத்துக்கு சென்று, அங்கிருந்து உத்தர பிரதேசம் வழியாக நேபாளம் நாட்டிற்குள் நுழைவதுதான் இவரது பயண திட்டம் ஆகும்.

பின்னர் அங்கிருந்து, திபெத், சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, லாட்வியா, லிதுவேனியா, போலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ரோமானியா, பல்கேரியா, துருக்கி, ஈராக் மற்றும் மேற்காசிய நாடுகள் வழியாக கடைசியாக ஓமன் நாட்டை அடைவதுதான் இவரது பயண திட்டம் ஆகும்.
பின்னர் ஓமனில் இருந்து கப்பல் வழியாக பைக் மங்களூரு துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஈரான் மற்றும் அதனை சுற்றிய நாடுகளில் போர் பதற்ற சூழல் நிலவுவதால் அந்த நாடுகளை தவிர்ப்பது மட்டுமின்றி, அந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் கேப்ரில் ஷரத் குமார் செல்ல போவதில்லை.
மாதக்கணக்கில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த பயணத்தில் 35 ஆயிரத்தில் இருந்து சுமார் 40 ஆயிரம் கிமீ தொலைவை பைக்கில் இவர் கடக்கவுள்ளார். இந்த பயணம் மொத்தத்திற்கும் தான் கொண்டு செல்லும் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 மோட்டார்சைக்கிளை தான் கேப்ரில் ஷரத் குமார் பயன்படுத்த உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ப இந்த ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் சில மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது தூசி, துகள்கள் ரைடரின் மீது படாமல் இருக்க முன்பக்கத்தில் பெரிய பேனல்கள் மற்றும் விண்ட்ஷீல்டு பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீண்ட நாட்கள் பயணத்திற்கான பொருட்களை வைக்க பைக்கின் பின்பக்கத்தில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த பெட்டிகளை சுற்றிலும் பாதுகாப்புக்காக விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்தமாக இந்த ராயல் என்ஃபீல்டு பைக் பார்ப்பதற்கு ஹார்லி-டேவிட்சன் பைக் போன்று உள்ளது. அத்துடன், இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக பலமுறை தனது சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை கேப்ரில் ஷரத் குமார் தகுந்த மெக்கானிக்குகள் மூலம் பரிசோதித்துள்ளார்.
இதனை அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் அறிய முடிகிறது. கடைசியாக கடந்த மே 22ஆம் தேதி பைக்கை இவர் சர்வீஸ் செய்துள்ளார். அப்போது பைக்கின் சக்கரங்கள் மற்றும் செயின் ஸ்ப்ராக்கெட்கள் மெருக்கேற்றப்பட்டுள்ளன. இவ்வாறான இந்த பயணத்திற்கு பல மாதங்களுக்கு முன்பு இருந்தே தயாராக ஆரம்பித்துவிட்ட கேப்ரில் ஷரத் குமார் 60 வயதில் இவ்வாறான பயணத்தை மேற்கொள்வது தனக்கு கிடைத்த பரிசு என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications