டிவிஎஸ் XL, மாருதி ஸ்விஃப்ட்.. 'எளிமையான' தலைவர் விஜய்யிடம் இருக்கும் பைக் மற்றும் கார்கள் இவை தான்!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்தத் தேர்தல் களத்தில் முக்கியமான நபராக அறியப்படும் நடிகரும், அரசியல் தலைவருமான விஜய் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னிடம் உள்ள சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபலங்கள் என்ன வகையான வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் நடிகர் விஜயிடம் இருக்கும் வாகனங்கள் குறித்த தகவல்களை இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்கலாம்.
1. லெக்சஸ் LM 350h: சமீபமாக இந்தியாவில் இருக்கும் பிரபலங்களால் விரும்பி வாங்கப்படும் ஒரு உயர்ரக சொகுசு காராக இருக்கிறது லெக்சஸ் LM 350h. இதனை தளபதி விஜய்யும் பயன்படுத்தி வருகிறார். சொகுசுத்தன்மைக்கும், நிலைத்தன்மைக்கும் பெயர் பெற்ற சொகுசுக் காராக இந்த லெக்சஸ் LM 350h சொகுசு எம்பிவி இருக்கிறது.

ரூ.2.15 கோடி எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட இந்தக் காரில், 185 hp பவர் மற்றும் 239 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 2.4 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காரானது சத்தத்தை உள்வாங்கிக் கொள்ளும் ரூஃப், சரவுண்டு சவுண்டு ஸ்பீக்கர்கள், 48 இன்ச் அல்ட்ரா-ஒயிடு மல்டிமீடியா சிஸ்டம், ஆம்பின்ட் லைட்டிங், மார்க் லெவின்சன் சவுண்டு சிஸ்டம் ஆகிய மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருப்பது குறப்பிடத்தக்கது.
2. BMW 5 சீரிஸ்: லாங் வீல் பேஸ் டிசைன் கொண்ட BMW 5 சீரிஸ் கார் மாடலும் விஜய்யின் கராஜில் உள்ளது. ரூ.74.8 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட இந்த சொகுசுக் காரில், 258 hp பவர் மற்றும் 400 Nm டார்க்கை வெளிப்பத்தும் திறன் கொண்ட 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் மைல்டு-ஹைபிரிட் சிஸ்டமும் இந்த சொகுசுக் காரில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காரின் உட்புறம் டூயல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி, கிளாஸ் எலமென்ட்கல் கொண்ட செண்டர் கண்சோல், இன்டராக்ஷன் பாருடன் கூடிய ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் கிளாஸ் ரூஃப், போவர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம், லைவ் காக்பிட்டுடன் கூடிய கர்வ்டு டிஸ்பிளே, நான்கு ஸோன்கள் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய மேம்பட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
3. BMW i7 எலெக்ட்ரிக்: விஜய்யின் கலெக்ஷனில் இருக்கும் ஒரேயொரு எலெக்ட்ரிக் கார் இந்த i7 தான். இந்தக் காரில் தான் விஜய் அவ்வப்போது சென்னையில் வலம் வருவார். அப்படி வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகும். இந்த எலெக்ட்ரிக் BMW காரானது இந்தியாவில் தற்போது ரூ.2.50 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருக்கும் ரியர் வீல் டிரைவ் செட்டப் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரானது 449 hp பவர் மற்றும் 650 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்பானது அதிகபட்சமாக மணிக்கு 205 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. 31.2 செமீ ரியர் சீட் தியேட்டர் ஸ்கிரீன், ஸ்கை லாஞ் பனோரமிக் கிளாஸ் ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
4. டொயோட்டா வெல்ஃபயர் எம்பிவி: விஜய் அரசியல் களத்தில் குதித்த பின்பு பயன்படுத்தும் முக்கிய வாகனமாக இந்த டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) இருக்கிறது. ரூ.1.19 கோடி எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட இந்தக் காரில் 190 hp பவர் மற்றும் 240 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2.5 லிட்டர் ஹைபிரிட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதுவும் சொகுசுத் தன்மைக்கு மிகவும் பெயர் போன எம்பிவி மாடல் தான். லெக்சஸ் LM 350h-ப் போலவே, ஆனால் அதனை விட சற்று குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் சொகுசு எம்பிவியா இந்த வெல்ஃபயர் இருக்கிறது. இந்தக் காரில் டூயல் சன்ரூஃப், ப்ரீமியமான டூயல் டோன் டேஷ்போர்டு, முன்பக்கமும் பின்பக்கமும் என்டர்டெயின்மென்ட் ஸ்கிரீன்கள், 15 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL சவுண்டு சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
5. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: இந்திாவில் அதிகம் விற்பனையாரும், மிகவும் குறைவான விலை கொண்ட ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலும் விஜய்யின் கேரேஜில் உள்ளது. கடந்தாண்டு தேர்தலின் போது இந்தக் காரில் தான் விஜய் ஓட்டளிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.5.78 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படும் இந்த மாருதி காரில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 80 hp பவர் மற்றும் 111 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய கார்களில் ஒன்றாக இந்த ஸ்விஃப்ட் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறைவான விலை என்றாலும், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், EBD-யுடன் கூடிய ABS, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராகவே ஸ்விஃப்ட் இருந்து வருகிறது.
6. டிவிஎஸ் XL சூப்பர்: விஜய்யிடம் இருக்கும் என யாரும் எதிர்பார்திருக்காத ஒரு வாகனம் இந்த XL சூப்பர். இந்த இருசக்கர வாகனமும் தன்னிடம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் விஜய். நம்ம ஊரு வண்டி என செல்லமாக அழைக்கப்படும் இந்த டிவிஎஸ் மொபெட் ரூ.44,900 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மொபெட் 100 சிசி பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட் முதல் உயர்ரக சொகுசு கார்கள் வரை அனைத்து வகையிலான வாகனங்களும் தளபதி விஜய்யின் கேரேஜில் இருப்பதை இந்தப் பட்டியல் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அனைத்து வகையான வாகனங்களும் இருந்தாலும், விஜய் அதிகம் பயன்படுத்துவது குறிப்பிட்ட சில வகை சொகுசு வாகனங்களைத் தான். சமீப காலமாக அதில் முக்கிய இடத்தில் இருக்கிறது டொயோட்டா வெல்ஃபயர். வரும் காலத்தில் இன்னும் சில புதிய சொகுசு வாகனங்களும் கூட விஜய்யின் கேரேஜில் சேரலாம், அவை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








