சிவகார்த்திகேயனின் மஹிந்திரா கார் பரிசு... தாய் கிழவி பட இயக்குனருக்கு!
நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்ற நிலையில், படத்தின் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் பிராண்ட்-நியூ மஹிந்திரா BE 6 என்கிற எலெக்ட்ரிக் காரை பரிசளித்து உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்ததில் இருந்து பல தரமான படைப்புகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் தாய் கிழவி ஆகும். நடிகை ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்த இந்த திரைப்படம் கிராமப்புற சூழலை கதைகளமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்ததால், சிறு சிறு கிராமப்புற மக்கள் வரையிலும் சென்று சேர்ந்தது.

இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படம் திரைக்கு வந்து 100 நாட்கள் கடந்ததை கொண்டாடும் விதமாக படத்தை இயக்கிய இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதுதான், பிராண்ட்-நியூ மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் கார் ஆகும்.
இதுதொடர்பான படங்களும், வீடியோக்களும் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் கருப்பு நிறத்திலான மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த கருப்பு நிறத்தை 'ஸ்டீல்த் கருப்பு' என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது.

இது இல்லாமல், எவரெஸ்ட் வெள்ளை, டெசர்ட் மிஸ்ட், டீப் ஃபரஸ்ட், டாங்கோ சிவப்பு மற்றும் ஃபையர்ஸ்டோர்ம் ஆரஞ்சு என்கிற கலர் ஆப்ஷன்களிலும் BE 6 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், டெசர்ட் மிஸ்ட் மற்றும் எவரெஸ்ட் வெள்ளை நிறத்தை சாடின் ஃபினிஷிங்கிலும் பெறலாம்.
BE 6 எலெக்ட்ரிக் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மஹிந்திராவின் லேட்டஸ்ட் கிராஸ்ஓவர் டிசைனில், INGLO EV கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடர்ன் மஹிந்திரா எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.18.90 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
பேக் ஒன், பேக் ஒன் அபோவ், பேக் டூ, பேக் த்ரீ செலெக்ட், பேக் த்ரீ என்கிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் காரின் ஃபார்முலா இ எடிஷன் மற்றும் பேட்மேன் எடிஷன் உள்ளிட்ட ஸ்பெஷல் எடிஷன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பேட்மேன் எடிஷன் ஆனது குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் லிமிடெட் எடிஷன் ஆகும். வேரியண்ட்களை பொறுத்து காரின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.28.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
BE 6 எலெக்ட்ரிக் காரில் 59kWh மற்றும் 79kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 59kWh பேட்டரி ஆனது அதிகப்பட்சமாக 557கிமீ வரையிலும், 79kWh ஆனது 683கிமீ வரையிலும் காரை இயக்கிச் செல்லக்கூடியதாக உள்ளது. இருப்பினும், நிஜ உலகில் இதனை காட்டிலும் 150- 200கிமீ குறைவான ரேஞ்சையே பெற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா BE 6 எலெக்ட்ரிக் கார் முற்றிலும் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இத்தகைய காரை தான் இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளார். BE 6 பேட்மேன் எடிஷனும் முற்றிலும் கருப்பு நிறத்தில்தான் வழங்கப்படுகிறது என்றாலும், இது பேட்மேன் எடிஷன் கிடையாது.
தலைப்பில் தவறுதலாக 'தாய் கிழவி இயக்குனருக்கு' என குறிப்பிடப்பட்டு இருந்தது, 'தாய் கிழவி பட இயக்குனருக்கு' என சரியாக மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications
