படம் தியேட்டருக்கு வந்து 2 வாரம் கூட இன்னும் முழுசா ஆகல... நடிகருக்கு தயாரிப்பாளர் கொடுத்த கார்!
நடிகர் விஷ்ணு விஷாலின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து, விமர்சனம் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 'கட்ட குஸ்தி 2' திரைப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலுக்கு பிராண்ட்-நியூ BMW 3-சீரிஸ் காரை பரிசளித்து சிறப்பித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் நடிப்பில் 2022இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கட்ட குஸ்தி ஆகும். பெண்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக, கிராமப்புற சூழலில் எடுக்கப்பட்டதினாலேயே கட்ட குஸ்தி திரைப்படம் மாநிலம் முழுவதும் சிறு சிறு கிராமப்புற மக்கள் வரையில் சென்றடைந்தது.

திரையரங்கில் பார்க்க முடியாதவர்கள் கூட அதன்பின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட கட்ட குஸ்தி திரைப்படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளினர். இதனாலேயே, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் விரைவாக துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து கட்ட குஸ்தி 2 திரைப்படம் கடந்த ஜூலை 3ஆம் தேதி திரைக்கு வந்தது.
முதல் பாகம் பெற்ற வெற்றியினால் எளிதாகவே மக்களின் கவனத்தை பெற்ற கட்ட குஸ்தி 2 திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் சரி, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சரி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்.ஐசரி கணேஷ், படத்தின் ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு புத்தம் புதிய BMW 3-சீரிஸ் காரை பரிசளித்துள்ளார்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட BMW டீலர்ஷிப் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள படங்களில், பிராண்ட்-நியூ 3-சீரிஸ் கார் உடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் படத்தில் நடித்த நடிகை மோக்சா உள்ளிட்டோரை காணலாம். 3-சீரிஸ் காரை நீல நிறத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஐசரி கணேஷ் பரிசளித்துள்ளார்.
இதனை ஆர்டிக் ரேஸ் ப்ளூ மெட்டாலிக் என BMW நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், மினரல் வெள்ளை மெட்டாலிக், ஸ்கைஸ்க்ராப்பர் கிரே மெட்டாலிக், கார்பன் பிளாக் மெட்டாலிக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கிறது. இந்தியாவில் 3-சீரிஸ் ஆனது எம்-ஸ்போர்ட் மற்றும் லாங்-வீல்பேஸ் என இரு விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் பெற்றிருப்பது 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் கார் ஆகும். இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பெட்ரோல் என்ஜின் உடன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.62.70 லட்சம் அளவிலும், டீசல் என்ஜின் உடன் ரூ.64.20 லட்சம் அளவிலும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் விஷ்ணு விஷாலின் ஸ்டைலுக்கு ஏற்ற கார் இது என சொல்லலாம். இந்த காரை திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எப்போது புக் செய்தார் என்கிற விபரம் கிடைக்கப் பெறவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாகவே புக் செய்து இருந்தால், குறைவான விலையில் காரை வாங்கியிருக்க முடியும்.
ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் மேலும் சில BMW கார்களுடன் சேர்த்து 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரின் விலைகளும் 2% உயர்த்தப்பட்டு இருந்தன. ஆனால், இதற்கு முன்னதாக கடந்த 2025 அக்டோபர் மாத சமயத்தில் மத்திய அரசின் GST சலுகையால் 3-சீரிஸ் லாங்-வீல்பேஸ் காரின் விலைகள் சுமார் ரூ.3.55 லட்சம் வரையில் குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications