இந்திய கொடியை தூக்கி பிடித்து பெருமை சேர்த்த கார் ரேசர் அஜித்! தேர்தலில் நின்றால் எல்லார் ஓட்டும் இவருக்கே!!
நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) என கூறுவதை தாண்டி, கார் பந்தய வீரர் என கூறும் அளவிற்கு அஜித்குமார் மற்றும் அவரது ரேசிங் குழு (Racing Team) தொடர்ச்சியாக பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. அதில் மேலும் ஒரு முத்திரையாக, அஜித்குமார் ரேசிங் (AKR) குழு பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் இரண்டாவது பிடித்து ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற புகழ்பெற்ற 'சர்க்யூட் டி ஸ்பா-ஃபிரான்கோர்சாம்ப்ஸ்' (Circuit de Spa-Francorchamps) பந்தயத்தில் அஜித்குமாரின் ரேசிங் குழுவினர் 2வது இடத்தைப் பிடித்து பதக்கத்தை தட்டி சென்றுள்ளனர். சர்க்யூட் டி ஸ்பா-ஃபிரான்கோர்சாம்ப்ஸ் ஆனது பெல்ஜியத்தில் நடத்தப்படும் பிரபலமான 24 மணிநேர கார் பந்தயம் ஆகும்.

அதில், 12 மணிநேர மிச்செலின் (Michelin) ஸ்பா-ஃபிரான்கோர்சாம்ப்ஸ் பந்தயத்தில் ஜிடி3 புரோ-ஏஎம் (GT3 Pro-Am) வகுப்பு பிரிவில் கலந்துக்கொண்டு அஜித்குமாரின் ரேசிங் குழு இரண்டாவது இடத்தை பிடித்து பார்வையாளர்கள் அனைவர் முன்னிலையிலும் பதக்கத்தை பெற்றுள்ளது. 12 மணிநேரத்தில் மொத்தம் 251 லாப்களை இந்த குழு நிறைவு செய்தது.
'அஜித் ரெட்அண்ட் ரேசிங்' (Ajith RedAnt Racing) என்கிற பெயரில் இந்த பந்தயத்தில் பங்கேற்ற குழுவில் பந்தய டிரைவர்கள் கோபி டி ப்ரூக்கர், அயர்டன் ரெட்அண்ட் மற்றும் யானிக் ரெட்அண்ட் உள்ளிட்டோரும் இருந்தனர். பெருமையை பேஷன் சந்திக்கும்போது இது நடக்கும் என தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, உலக அரங்கில் இந்திய கொடி வானுயரத்தில் பறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பந்தயத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை அஜித்குமார் ரேசிங் குழுவும் அதன் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் குழுவினர் பயன்படுத்தியது, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி3 எவோ (Mercedes-AMG GT3 EVO) என்கிற ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.
திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க ஸ்பிளிட்டர், அட்ஜெஸ் செய்யக்கூடிய பின்பக்க விங் மற்றும் டபுள்-விஷ்போன் சஸ்பென்ஷன் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் காரில் 6.3 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி3 எவோ காரை அஜித்குமாரின் ரேசிங் குழுவினர் பயன்படுத்த, பின்னர் நடிகர் அஜித்தும் பந்தயத்தில் பயன்படுத்தினார் என்றாலும், முன்னதாக அஜித் பயன்படுத்தியது போர்ஷே 911 ஜிடி3 கப் (992) (Porsche GT3 Cup (992)) என்கிற ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.
இந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரை அப்படியே பயன்படுத்தாமல், தங்களது தேவைக்கேற்ப அதிகமாக கஸ்டமைஸ் (Customize) செய்து பயன்படுத்தி உள்ளனர். வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த பந்தயத்தில் காட்சித்தந்த அஜித்குமார் ரேசிங் குழுவின் இந்த போர்ஷே காரில் ஆங்காங்கே மஞ்சள் நிற ஸ்ட்ரிப்களை பார்க்க முடிந்தது.
இந்த போர்ஷே 911 ஜிடி3 கப் (992) காரில் 4 லிட்டர் 6-சிலிண்டர் பாக்ஸர் என்ஜின் பொருத்தப்படுகிறது. சதுர வடிவிலான 6-ஸ்பீடு டாக்-டைப் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் இந்த பாக்ஸர் என்ஜினின் உதவியுடன் இந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு சுமார் 296கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெல்ஜியத்தின் ஸ்பா-ஃபிரான்கோர்சாம்ப்ஸ் பந்தய களம் ஆனது அதிவேகத்தில் காரை திருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கும் வளைவுகளை கொண்டதாகும். அதாவது, அந்த அளவிற்கு கடினமான பந்தய களத்தில் 12 மணிநேரம் தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, 2வது இடத்தை பிடித்தது உண்மையில் அசாத்தியமான காரியம் ஆகும். வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார் இந்திய தேசிய கொடியை தூக்கி பிடித்தது இந்தியராய் நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.


Click it and Unblock the Notifications








