முதல்வரின் ஒரே கையெழுத்தில் வருஷத்துக்கு 10,000 பேருக்கு வேலை! சென்னையில் ஆலை இருக்குறது பத்தாதுனு இங்க வேறயா!
ஹிந்துஜா (Hinduja) குழுமத்தின் முதன்மை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் (Ashok Leyland), தனது புதிய ஒருங்கிணைந்த வாகன ஆலையை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (2026 ஜனவரி 9) உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) முன்னிலையில் திறந்துள்ளது.
உத்திரபிரதேச முதல்வர் மட்டுமின்றி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், லக்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய கனரக தொழில்கள் & பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சரும், முன்னாள் கர்நாடகா மாநில முதலமைச்சருமான எச்.டி. குமாரசாமி ஆகியோரும் இந்த ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

மேலும், அசோக் லேலண்டின் உலகளாவிய டீலர்கள், சப்ளையர்கள் மற்றும் பிற கூட்டணியாளர்கள், ஹிந்துஜா குழுமம் மற்றும் அசோக் லேலண்டின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பல உயர் மட்டப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த புதிய தொழிற்சாலை ஆனது லக்னோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சரோஜினி நகர் தொழில்துறை பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த புதிய தொழிற்சாலை, அசோக் லேலண்டின் உலகளாவிய ஆலைகளில் மிகவும் மேம்பட்ட மற்றும் நிலையான ஒன்றாகத் திகழ்கிறது. உலகத் தரம் வாய்ந்த மற்றும் செயல்நிறைவுடன், இந்த ஆலை உருவாக்கப்பட்டதன் முதன்மை நோக்கம் எலெக்ட்ரிக் வாகனங்களை, குறிப்பாக எலெக்ட்ரிக் பேருந்துகளை, உற்பத்தி செய்வதாகும். இந்த ஆலை ஆரம்பத்தில் ஆண்டுக்கு 2,500 வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது படிப்படியாக 5,000 வாகனங்களாக அதிகரிக்கப்படும். இந்த ஆலையில் பணிபுரிவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் பெரும்பாலானோர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. இது உள்ளூர் திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றும்.
மேலும், இது ஒரு பசுமை ஆலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள், ஆற்றல் திறன் கொண்ட எல்.இ.டி விளக்குகள், தொழிற்சாலைக்கு உள்ளே பொருட்களை கொண்டு செல்ல பேட்டரி மூலம் இயக்கப்படும் மெஷின்கள், நீர் சமநிலைத் திட்டங்கள் மற்றும் பூஜ்ஜியக் கழிவு வெளியேற்ற அமைப்பு போன்ற பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அம்சங்கள் இந்த தொழிற்சாலையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
புதிய ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பேருந்து, 17-18 இருக்கைகள் கொண்ட வாகனமாக சுமார் ரூ.15 லட்சம் விலையில், பள்ளி போக்குவரத்து மற்றும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்காக வடிவமைக்கப்படும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஹிந்துஜா குழுமம் உத்தரபிரதேச அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஆண்டுதோறும் 10,000 இளைஞர்களுக்கு இந்த ஆலையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் என்றும் அவர் அறிவித்தார்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது உரையில், இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 செப்டம்பரில் கையெழுத்தானதாகவும், அதைத் தொடர்ந்து 2024 ஜனவரியில் நில ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். சென்னை அருகே எண்ணூர் பகுதியிலும் 1955ஆம் ஆண்டில் இருந்து வாகன உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ள அசோக் லேலண்ட் 2048ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய ஆலைத் திறப்பு, உத்தரபிரதேசத்தின் தூய்மையான போக்குவரத்துத் துறையில் அசோக் லேலண்டின் புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் உத்தரபிரதேசம் ஒரு முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ள நிலையில், அசோக் லேலண்டின் இந்த புதிய ஆலை, பசுமை போக்குவரத்தில் மாநிலத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









