சாலைகளில் பள்ளங்களை கண்டறிந்து சரிசெய்யும் AI டேஷ்கேம்... பெங்களூர் பொறியாளரின் கண்டுபிடிப்பு!!
பெங்களூர் பெருநகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் உலக அளவில் பிரபலமடைந்துள்ள நிலையில், அங்குள்ள பல பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளும் வாகன ஓட்டிகளுக்கு தினசரி எம பயத்தை காட்டி வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் அடிக்கடி சாலை விபத்துக்களில் சிக்கும் நிலையும் உள்ளது. மழைக்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது. சாலை விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், பள்ளங்களை கண்டுபிடித்து அதனை சரிசெய்யும் முயற்சியாக புதிய தொழில்நுட்பத்தை பெங்களூர் நகரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கண்டறிந்துள்ளார்.
பெங்களூரை சேர்ந்த கவுரவ் சென் என்ற இளம் பொறியாளர் காரின் டேஷ்கேம் அமைப்பு, ஜிபிஎஸ் சிஸ்டம், ஆக்சிலரோமீட்டர் ஆகியவற்றை வைத்து சாலைகளில் உள்ள பள்ளங்களை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கம்போல் கார் செல்லும்போது, டேஷ்போர்டு கேமரா சாலையை பதிவு செய்கிறது. அதனுடன் வாகனத்தின் இருப்பிடத் தகவலும் இயக்கத் தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன.
பின்னர் இந்த வீடியோ பதிவுகளை AI அடிப்படையிலான விஷன் தொழில்நுட்பம் ஆய்வு செய்கின்றது. சாலையில் இருக்கும் பள்ளங்கள் மட்டுமின்றி, அவற்றின் அளவையும் சிறியது, நடுத்தரம் மற்றும் பெரியது என வகைப்படுத்துகிறது. தூரத்தில் பார்க்கும்போது ஸ்பீடு பிரேக்கர் போலத் தெரியும் சில சாலை சேதங்களையும் கண்டறியும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளங்கள் இருக்கும் இடத்தை GPS மூலம் துல்லியமாக பதிவு செய்த பிறகு, அந்த சாலை எந்த அரசு ஒப்பந்தத்தின் கீழ் வருகிறது என்பதையும் மென்பொருள் தேடுகிறது. இதற்காக சுமார் 2,900 அரசு சாலை ஒப்பந்தங்கள் தொடர்பான தரவுகளை இந்த அமைப்பு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குறிப்பிட்ட சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியை அடையாளம் காண முயற்சி செய்கிறது. பள்ளத்தின் புகைப்படம், இருப்பிடத் தகவல் மற்றும் தேவையான விவரங்களை இணைத்து புகார் அளிக்கத் தயாரான பதிவையும் உருவாக்குகிறது.

ஒரு சோதனைப் பயணத்திலேயே இந்த அமைப்பு 12 பள்ளங்களை கண்டுபிடித்ததாகவும், அவற்றுக்கான 12 புகார் பதிவுகளை உருவாக்கியதாகவும் கவுரவ் சென் தெரிவித்துள்ளார். பள்ளம் இருப்பதை கண்டறிந்தாலும், வாகனத்தை நிறுத்தி பின்னர் அதனை படம் பிடித்து இடத்தை கண்டுபிடித்து, புகார் அளிப்பது போன்ற வேலைகளை தனித்தனியாக செய்ய வேண்டிய நிலை உள்ளதால் வாகன ஓட்டிகள் இதில் கவனம் செலுத்த முடியவில்லை.
இது இன்னும் ஒரு தனிப்பட்ட தொழில்நுட்ப முயற்சியாகவே பார்க்கப்படப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்ற AI அமைப்புகள் அதிக வாகனங்களில் பயன்படுத்தப்பட்டால், சாலையின் நிலை குறித்த பெரிய அளவிலான தரவுகளை சேகரிக்க முடியும். அதைவிட முக்கியமாக, "இந்த பள்ளத்தை யார் சரி செய்வார்கள்?" என்ற கேள்விக்கு தொழில்நுட்பத்தின் மூலம் பதில் தேடும் முயற்சியாக இது அமைந்துள்ளது.
பெங்களூருவின் பள்ளங்களுக்கு உடனடி தீர்வாக இது மாறிவிடாது. ஆனால் சாலையில் இருக்கும் ஒரு பிரச்சினையை வெறுமனே பதிவு செய்வதிலிருந்து, அதற்கான பொறுப்பையும் அடையாளம் காணும் அடுத்த கட்டத்தை AI மூலம் உருவாக்க முடியும் என்பதை இந்த முயற்சி காட்டுகிறது. இதற்கு அரசாங்கமும் ஊக்குவித்து இதனை மேம்படுத்தினால், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications

