பெட்ரோல், டீசலை நிரப்புற வேகத்தில் சார்ஜிங்... டீ குடிக்குற நேரத்திற்குள் சார்ஜ் செய்யும் BYD ஃபிளாஷ் சார்ஜர்!
சீனாவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமான BYD, 'ஃபிளாஷ் சார்ஜர்கள்' என்கிற பெயரில் விரைவான சார்ஜர்களை வழங்கி வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜர்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், அது என்ன ஃபிளாஷ் சார்ஜர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள முக்கிய பிரச்சனைகளுள் ஒன்று, அவற்றை விரைவாக சார்ஜ் செய்ய முடியாத சூழல் இருப்பதாகும். ஃபாஸ்ட் சார்ஜர்கள், சூப்பர் சார்ஜர்களில் கூட பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்ப குறைந்தது 20- 30 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டியதாக உள்ளது.

ஆனால், சீனாவை சேர்ந்த BYD நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஃபிளாஷ் சார்ஜர்கள் பெட்ரோல், டீசலை நிரப்பும் வேகத்திற்கு இணையாக எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்யக் கூடியவைகளாக உள்ளன. எந்த அளவிற்கு வேகமான சார்ஜிங் என்றால், பேட்டரியை 10%-இல் இருந்து 70% சார்ஜ் செய்ய வெறும் 5 நிமிடங்களை மட்டுமே BYD-இன் ஃபிளாஷ் சார்ஜர்கள் எடுத்துக் கொள்கின்றன.
அதுவே, 9 நிமிடங்களில் 97% சார்ஜ் நிரப்பி விடலாம். இதற்காக சுமார் 1,500 கிலோவாட்ஸ் வரையிலான DC சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஃபிளாஷ் சார்ஜிங் மையத்தில் ஒட்டுமொத்தமாக 1,500 கிலோவாட்ஸ் வரையிலான DC சார்ஜர் அல்ல... ஒவ்வொரு கனெக்டரிலும் 1,500 கிலோவாட்ஸ் வரையிலான DC சார்ஜர்கள் ஆகும். அதாவது, ஒரு ஃபிளாஷ் சார்ஜிங் மையத்தில் இன்னும் சில கனெக்டர்கள் இருக்கும்.

இந்த அளவிற்கு பவர்ஃபுல்லான சார்ஜர்களாக இவை இருந்தால் மட்டும் போதாது; அதற்கேற்ப BYD எலெக்ட்ரிக் கார்களில் பொருத்தப்படும் பேட்டரியும் திறன்மிக்கதாக இருக்க வேண்டும் அல்லவா... அதன்படி, 2ஆம் தலைமுறை பிளேடு பேட்டரி BYD எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் செல்களை கொண்ட இந்த பேட்டரி ஆனது மின்னல் வேகத்தில் இரும்பு மூலக்கூறுகளை இடமாற்றம் செய்யக் கூடியதாக உள்ளது.
இதன் மூலமாக, சார்ஜ் செய்யும்போது ஏற்படும் இடையூறுகள் குறைக்கப்படுவதுடன், பேட்டரி வெப்பம் அடைவதும் தவிர்க்கப்படுகிறது. BYD நிறுவனத்தின் ஃபிளாஷ் சார்ஜர்கள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். ஏனெனில் சீனாவிலேயே இந்த திட்டம் இப்போதைக்கு ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளது. சீனாவில் ஃபிளாஷ் சார்ஜர்களை கடந்த மார்ச் மாத துவக்கத்தில் BYD அறிமுகப்படுத்தியது.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் சீனாவில் 297 நகரங்களில் 5,000 ஃபிளாஷ் சார்ஜர்களை நிறுவி BYD ஆச்சிரியப்படுத்தியது. மே மாதம் 20ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 6 ஆயிரத்தை தொட்ட நிலையில், தற்சமயம் சீனாவில் 321 நகரங்களில் 6,682 ஃபிளாஷ் சார்ஜர்களை BYD கொண்டுள்ளது.
இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்குள் சீனாவில் 20 ஆயிரம் ஃபிளாஷ் சார்ஜர்களை நிறுவ BYD நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் சார்ஜிங் நிலையங்கள் சீனாவின் நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட உள்ளன. மேலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலும் ஃபிளாஷ் சார்ஜர்களை நிறுவ BYD தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதில் உள்ள அதிக நேர விரயத்தை BYD-இன் ஃபிளாஷ் சார்ஜர்கள் தீர்க்கும் என பல ஆட்டோமொபைல் அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது. BYD நிறுவனம் இந்தியாவிலும் செயல்படுகிறது. ஆனால், ஏற்கனவே கூறியதுபோல் இந்தியாவில் ஃபிளாஷ் சார்ஜர்களை இந்த சீன நிறுவனம் நிறுவுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அதுவரையில், இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால்தான் அது சாத்தியமாகும்.


Click it and Unblock the Notifications