பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தும் மத்திய அரசு? மக்கள் இப்போவே வரிசையில் காத்திருக்காங்களா
நான்கு மாநில தேர்ந்தல்கள் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படலாம் என பலரும் கூறி வருகின்றன. இந்த நிலையில் இந்தத் தகவலை கிட்டத்தட்ட உண்மை என நிரூபிக்கும் விதமான மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது கவனத்தைப் பெற்றிருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியே இது குறித்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
'எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் கடும் நஷ்டத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுவே ஒரு காலாண்டிற்குப் பார்த்தால் 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பில் இருக்கிறோம். எவ்வளவு நாட்களுக்கு இப்படியே தொடர முடியும்?' என அவர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் காலம் தூரத்தில் இல்லை என்று குறிப்பிடும் விதமாகவே அவருடைய இந்தக் கருத்து அமைத்திருக்கிறது.

எவ்வளவு நாட்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கேள்விக்கு, அது தான் தனக்கும் கவலையளிப்பதாகத் தெரிவித்த ஹர்தீப் சிங் பூரி, ஒரு கட்டத்தில் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் பெட்ரோல் டீசல் விலையை அதிகளவில் மத்திய அரசு உயர்த்துமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருக்கிறது.
மேலும், எரிபொருள் விலை மற்றும் தேர்தல்களை இணைத்துக் கூறப்பட்டு வரும் கருத்துக்களை முற்றிலும் மறுத்திருக்கிறார் அவர். 'தேர்தல்கள் எல்லாம் முடிந்துவிட்டது. இனி எரிபொருள் விலை விண்ணை முட்டும் எனக் கூறுகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை தேர்கல்கள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2022ம் ஆண்டே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பொதுத் தேர்தலும் பல்வேறு மாநில தேர்தல்களும் நடைபெற்றுவிட்டன' என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை எப்போதுமே உயராது என்று நான் கூறவில்லை. ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இத்துடன் இந்தியாவில் போதுமான அளவிற்கு பெட்ரோல் டீசல் இருப்பு இருப்பதாகவும், அது குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் இடையிலான போர் தொடங்கிய போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக ஏற்பட்ட வதந்தியினால் 6% வரை எரிபொருள் தேவை உயர்ந்தது. ஆனால் இந்தியாவில் 74 நாட்களுக்கான எரிபொருள் கையிருப்பில் இருந்து வருகிறது. எரிபொருள் தேவையை சமாளிக்க 2006-2007ல் 27 நாடுகளில் இருந்து மட்டுமே எரிபொருள் வாங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 41 நாடுகளில் இருந்து வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகளவில ஏற்படும் பிரச்சினையினால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் மட்டுமின்றி LNG மற்றும் LPG ஆகிய எரிபொருள்களும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதை ஹர்தீப் சிங் பூரி உறுதி செய்துள்ளார். மத்திய அமைச்சர் கூறிய இந்தக் கருத்துக்களால் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமைச்சர் சொன்னது போலவே இப்போது இல்லையென்றால் ஏதேனும் ஒரு கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை மத்திய அரசு உயர்த்தித் தான் ஆக வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வரும் இந்த நிலையில் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதே ஆச்சரியமான விஷயம் தான்.
எனவே மத்திய அமைச்சரின் கருத்தில் நாம் ஆச்சரியப்படுவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தவிர்த்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற வதந்திகளையும் நம்புவதை மக்கள் தவிர்க்க வேண்டும். மேலே கூறியது போல் அது தான் தேவையில்லாமல் எரிபொருள் தேவையை அதிகரித்துவிடும்.
URL-ல் 'Price' என்ற வார்த்தை இல்லாமல் இருந்தது சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications