விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை! பெட்ரோல் உடன் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் முடிவில் திடீர் மாற்றம்!
உலகிலேயே கச்சா எண்ணெய்யை (Crude Oil) அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 137 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. அதன் பின் வந்த 2025-26ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கா இந்தியா செலவிட்ட தொகை 121.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.
இந்த சிறிய அளவிலான வீழ்ச்சிக்கு மேற்கு ஆசியா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் (West Asia War) பதற்றம் மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் (Israel-US-Iran) நாடுகளுக்கு இடையே போர் மூண்ட காரணத்தால் கடந்த 2025-26ம் நிதியாண்டின் இறுதியில் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் தொகையும் குறைந்தது. ஆனால் இது போன்ற காரணங்களால் அல்லாமல், மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைய வேண்டும். இது நடக்கும்பட்சத்தில் இந்தியாவின் அந்திய செலாவணி (Foreigh Exchange) கையிருப்பு உயர்ந்து, பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.
எனவே கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகையை குறைப்பதற்காக எத்தனாலை (Ethanol) எரிபொருளாக பயன்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் (Petrol) 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இதை E20 எரிபொருள் என அழைக்கின்றனர்.

முதலில் 2030ம் ஆண்டில்தான் E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை காட்டிலும் சில ஆண்டுகள் முன்னதாக தற்போதே E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதற்கு அடுத்தபடியாக E25 எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது 25 சதவீதம் எத்தனாலும், 75 சதவீதம் பெட்ரோலும் கலந்த கலவை ஆகும். ஆனால் E25 எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது சற்று தள்ளி போகலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் E20 எரிபொருள் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக வாகன உரிமையாளர்கள் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
அதாவது E20 எரிபொருளுக்கு இணங்காத பழைய வாகனங்களில் மைலேஜ் குறைந்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் பலரும் தற்போது புலம்பி தீர்க்கின்றனர். அத்துடன் செயல்திறன் குறைந்து விட்டதாகவும், வாகனங்களின் இன்ஜின் உள்ளிட்ட பல்வேறு பாகங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகதான் E25 எரிபொருள் பயன்பாட்டிற்கு வருவது சற்று தள்ளி போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் E25 எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முடிவை மத்திய அரசு கை விடவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நன்றாக திட்டமிட்டு பிரச்சனைகள் எதுவும் இல்லாத வகையில் E25 எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு சற்று கால அவகாசம் தேவை என்பதால்தான் E25 எரிபொருள் பயன்பாட்டிற்கு வருவது தள்ளி போகலாம் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. இதற்காக ரஷ்யா (Russia), ஈராக் (Iraq), சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற பல்வேறு நாடுகளை இந்தியா சார்ந்துள்ளது. இந்த நிலையை குறைக்க வேண்டும் என்றால், எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரித்தாக வேண்டும்.
இந்திய பொருளாதாரத்திற்கு அதுவே சிறந்தது. எனவே மத்திய அரசின் முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால் வாகனங்களில் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் அதை செய்ய வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும்.


Click it and Unblock the Notifications