சென்னை பனையூரில் பங்களா, கூடவே டெஸ்லா சைபர்டிரக்... ஆந்திராவில் இருந்து வந்து மாஸ் காட்டும் தொழிலதிபர்!
டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) உலகின் தனித்துவமான எலெக்ட்ரிக் வாகனம் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு அதன் அசாதாரண வடிவமைப்பாலும், புதுமையான தோற்றத்தாலும் உலகம் முழுவதும் பல வசதி படைத்த தொழிலதிபர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தொழில் நடத்திவரும் ஆந்திர தொழிலதிபர் ஒருவர் டெஸ்லா சைபர்ட்ரக்கை வாங்கி உள்ளார்.
இந்தியாவில் டெஸ்லாவில் இருந்து ஒரேயொரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சைபர்ட்ரக் விற்பனையில் இல்லை. இருப்பினும், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் தொழிலதிபர் 'கார்னெட்' (Carnet) மூலம் இந்த லேட்டஸ்ட் டெஸ்லா வாகனத்தை இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். அந்த தொழிலதிபர் வேறு யாருமில்லை, ஆதித்யாராம் க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் ஆதித்யாராம் (Aditya Ram) ஆகும்.

ஆந்திரா பிரதேசத்தின் விஜயவாடாவுக்கு அருகே ஜகநாதபுரம் என்கிற கிராமத்தில் பிறந்தவரான ஆதித்யாராமின் வணிகம் வளர்ந்தது சென்னையில் ஆகும். பொறியாளர் மற்றும் ரியல் எஸ்டேட் பில்லியனரான ஆதித்யாராம், சென்னையிலும் சென்னையை சுற்றியுள்ள பழைய மகாபலிபுரம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஆடம்பர பங்களாக்களை கட்டியெழுப்பி விற்று அதன் மூலம் தொழிலதிபர் ஆனவர்.
இவர்தான் தற்போது, இந்தியாவில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட முதல் டெஸ்லா சைபர்ட்ரக்கை வாங்கியுள்ளார். அதற்காக இவர்தான், இந்தியாவிலேயே முதல் ஆளாக சைபர்டிரக்கை வாங்கியுள்ளார் என நினைத்துவிட வேண்டாம். இங்கு 'முதல்' என அழைக்கப்படுவதற்கான காரணம், இந்தியாவில் தனிப்பட்ட முறையில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட முதல் வாகனம் இது என்பதால் ஆகும்.

இதற்கு முன் வந்தவையும் கார்னெட் முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சைபர்டிரக்குகளே ஆகும். ஆனால், அவை இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் முறையாக ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், ஆதித்யாராமின் இந்த சைபர்டிரக் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'கார்னெட்' என்பது ஒரு சுங்க ஆவணம்.
பொருட்களுக்கும், கார்களுக்கும் பாஸ்போர்ட் போல் செயல்படும் இது, தொழில்முறை உபகரணங்கள் அல்லது கண்காட்சி பொருட்களை ஒரு வருடம் வரை வரி இல்லா இறக்குமதிக்கு உதவுகிறது. இதனால் பெரும் சுங்கக் கட்டணங்கள் தவிர்க்கப்படுகின்றன. இருப்பினும், இந்த சைபர்டிரக் வாகனத்தை வெளிநாட்டில் (அமெரிக்கா-யுஏஇ-இந்தியா) வாங்கி இந்தியாவிற்கு கொண்டுவந்து பதிவு செய்வதற்கு மொத்தமாக சுமார் ரூ.5 கோடி வரை செலவாகி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சர்வதேச சந்தை விலையை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம். சைபர்ட்ரக்கின் மிக விலையுயர்ந்த மாடலான 'சைபர்பீஸ்ட் லக்ஸ் பேக்கேஜ்' (Cyberbeast Luxe Package) அமெரிக்காவில் 114,990 டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் தற்போதைய மதிப்பு ரூ.1.03 கோடி மட்டுமே ஆகும்.
தொழிலதிபர் ஆதித்யாராமின் சைபர்ட்ரக் குறித்த புகைப்படங்களை 'கார் கிரேசி இந்தியா' தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள், சென்னை பனையூரில் அவரது ஆடம்பர பங்களா வீட்டிற்கு முன் சைபர்ட்ரக் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை காட்டுகின்றன. எந்த வித கீறல்களும் இல்லாத, துருப்பிடிக்காத எஃகு தோற்றம் இந்த சைபர்ட்ரக்கிற்கு தனித்துவம் சேர்க்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா சைபர்ட்ரக் அதன் கம்பீரமான, முக்கோண வடிவ உடலமைப்பிற்காகப் புகழ் பெற்றது. சாதாரண கார்கள் போல் அல்லாமல், இதன் துருப்பிடிக்காத எஃகு உடல் பேனல்கள் வலுவான மற்றும் எதிர்கால கார்களின் தோற்றத்தை அளிக்கின்றன. இத்தகைய வாகனத்தை அமெரிக்காவில் வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், இந்தியர் ஒருவர் வாங்கியுள்ளார் எனும்போது ஆச்சிரியமாக உள்ளது. இருப்பினும், எந்த மாநிலத்தில் இந்த வாகனத்தை இவர் பதிவு செய்துள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









