சென்னைல ஏறி படத்தை போட்டா 4, 5 சீன் முடியறதுக்குள்ள பெங்களூர் வந்துரும்! ஏர்போர்ட்லாம் இனி காத்து வாங்க போகுது
2026-27ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் (Union Budget 2026-27) நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnaw), செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இந்தியாவில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் (7 New High-speed Rail Corridors) அமைக்கப்படவிருப்பது குறித்து அவர் பேசினார். இந்த புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் மூலமாக இந்தியாவின் பெரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் (Travel Time) வெகுவாக குறையவுள்ளது.

சென்னை-பெங்களூர், சென்னை-ஐதராபாத், ஐதராபாத்-பெங்களூர், ஐதரபாத்-புனே, புனே-மும்பை, டெல்லி-வாரணாசி மற்றும் வாரணாசி-சிலிகுரி ஆகிய 7 வழித்தடங்களில்தான், புதிய அதிவேக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த நகரங்களுக்கு இடையே தற்போதைய நிலையில் பயணம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? என்பதையும், அதுவே புதிய அதிவேக ரயில் வழித்தடங்களில் பயணம் செய்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதையும் இனி பார்க்கலாம்.
சென்னை-பெங்களூர் இடையே பயணம் செய்ய தற்போதைய நிலையில் 4.5-6 மணி நேரம் ஆகிறது. ஆனால் புதிய அதிவேக ரயில் வழித்தடத்தில் பயணம் செய்தால் வெறும் 1 மணி நேரம் மற்றும் 13 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதாவது வெறும் 73 நிமிடங்களில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று சேர்ந்து விட முடியும்!

மறுபக்கம் சென்னை-ஐதராபாத் இடையே பயணம் செய்ய தற்போதைய நிலையில் 10-12 மணி நேரம் ஆகிறது. ஆனால் புதிய அதிவேக ரயில் வழித்தடத்தில் பயணம் செய்தால் வெறும் 2 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்களில் சென்னையில் இருந்து ஐதராபாத் சென்று சேர்ந்து விட முடியும்.
மறுபக்கம் ஐதராபாத்-பெங்களூர் இடையே பயணம் செய்ய தற்போதைய நிலையில் 8-11 மணி நேரம் ஆகிறது. ஆனால் புதிய அதிவேக ரயில் வழித்தடத்தில் பயணம் செய்தால் வெறும் 2 மணி நேரத்திலேயே தெலங்கானா மாநில தலைநகரான ஐதராபாத் நகரில் இருந்து கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவிற்கு சென்று சேர்ந்து விட முடியும்.
மறுபக்கம் ஐதராபாத்-புனே இடையே பயணம் செய்ய தற்போதைய நிலையில் 8-10 மணி நேரம் ஆகிறது. ஆனால் புதிய அதிவேக ரயில் வழித்தடத்தில் பயணம் செய்தால் வெறும் 1 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்களில் ஐதராபாத் நகரில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான புனேவிற்கு சென்று விடலாம்.
மறுபக்கம் புனே-மும்பை இடையே பயணம் செய்ய தற்போதைய நிலையில் 3-4 மணி நேரம் ஆகிறது. ஆனால் புதிய அதிவேக ரயில் வழித்தடத்தில் பயணம் செய்தால் வெறும் 48 நிமிடங்களிலேயே இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து புனேவிற்கு நம்மால் சென்று சேர்ந்து விட முடியும்.
மறுபக்கம் டெல்லி-வாரணாசி இடையே பயணம் செய்ய தற்போதைய நிலையில் 8-11 மணி நேரம் ஆகிறது. ஆனால் புதிய அதிவேக ரயில் வழித்தடத்தில் பயணம் செய்தால் வெறும் 3 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களிலேயே இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரான வாரணாசிக்கு சென்று விட முடியும்.
மறுபக்கம் வாரணாசி-சிலிகுரி இடையே பயணம் செய்ய தற்போதைய நிலையில் 12-15 மணி நேரம் ஆகிறது. ஆனால் புதிய அதிவேக ரயில் வழித்தடத்தில் பயணம் செய்தால் வெறும் 2 மணி நேரம் 55 நிமிடங்களிலேயே வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிலிகுரிக்கு சென்று சேர்ந்து விட முடியும்.
இந்த 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்களின் ஒட்டுமொத்த தொலைவு சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஆகும். இவை சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை (Investments) ஈர்க்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடம் முதலில் புனே மற்றும் ஐதராபாத்திற்கும், பின்னர் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய ரயில்வே துறையின் சமீபத்திய சாதனைகளையும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்து கொண்டார். இதன்படி இந்திய ரயில்வே புதியதாக 35 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ரயில்வே தண்டவாளங்களை அமைத்துள்ளது. அத்துடன் 47 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புல்லட் ரயில் மற்றும் புதிய 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் குறையவுள்ளது. இது பொதுமக்களின் பயணங்களை எளிமையாக மாற்றுவதுடன் மட்டுமல்லாது, அந்தந்த பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் (Economic Growth) உதவி செய்யும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








