வள்ளுவர் கோட்டம் பகுதியில் பைக் சாகசம்: பொதுச்சாலையில் இப்படிச் செய்தால் என்ன தண்டனை?
சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் அக்டோபர் 4 அதிகாலை 15 முதல் 20 பேர் கொண்ட குழு பொதுச்சாலையில் பைக் பந்தயம் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு சக்கரத்தில் பைக்கை இயக்குவது உள்ளிட்ட சாகசங்கள் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாகசங்களில் பயன்படுத்தப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுபோன்று பொதுச்சாலையில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான தண்டனை குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விதிமீறி பைக் பந்தயம் நடத்தினால்?
மோட்டார் வாகனச் சட்டத்தின் 189வது பிரிவின்படி, உரிய அனுமதி இல்லாமல் பொதுச்சாலையில் வாகனப் பந்தயம் அல்லது அதிவேகச் சோதனைகளில் ஈடுபடுவது குற்றமாகும். முதல் முறை குற்றத்திற்கு 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் செய்தால் ஒரு ஆண்டு வரை சிறை அல்லது ரூ.10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
ஆபத்தான முறையில் பைக் ஓட்டினால்?
பொதுச்சாலையில் மற்ற வாகனங்கள் மற்றும் பயன்பாட்டாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டத்தின் 184வது பிரிவின் கீழ் நடவடிக்கைக்கு உட்படும். முதல்முறை குற்றத்திற்கு 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை சிறை அல்லது ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தீவிரம் பொறுத்து இரண்டும் விதிக்கப்படலாம்.
மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஒரு சக்கரத்தில் பைக்கை இயக்குவது (Wheeling) போன்ற சாகசங்கள் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தால், சம்பவத்தின் தன்மைக்கு ஏற்ப இந்தப் பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம்.
ஓட்டுனர் உரிமம் ரத்து
மோட்டார் வாகனச் சட்டத்தின் 206வது பிரிவின்படி, குறிப்பிட்ட போக்குவரத்து குற்றங்களில் போலீசார் ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றி, தகுதி நீக்கம் அல்லது உரிமம் ரத்து செய்வதற்கான நடவடிக்கைக்கு அனுப்ப முடியும். மேலும், பொதுச்சாலையில் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக வாகனம் ஓட்டினால், பாரதிய நியாய சன்ஹிதாவின் 281வது பிரிவின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம். இதன் கீழ் 6 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும்.
பெற்றோர்தான் பொறுப்பு
சிறார் ஒருவர் வாகனம் ஓட்டி குற்றத்தில் ஈடுபட்டால், மோட்டார் வாகனச் சட்டத்தின் 199ஏ பிரிவின் கீழ் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் பொறுப்பாளராக கருதப்படுவார். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படலாம். வாகனப் பதிவு 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படலாம். குற்றத்தில் ஈடுபடும் சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும் தடை விதிக்க முடியும்.
விபத்து ஏற்பட்டால் நடவடிக்கை கடுமையாகும்
பைக் பந்தயம் அல்லது சாகசத்தின் போது ஒருவர் காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தினால், சாதாரண போக்குவரத்து விதிமீறல்களைக் காட்டிலும் கடுமையான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்படலாம். சம்பவத்தின் தன்மைக்கு ஏற்ப அலட்சியத்தால் காயம் அல்லது மரணம் ஏற்படுத்துதல் தொடர்பான சட்டப்பிரிவுகளும் பரிசீலிக்கப்படலாம். மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் மூலம் அதிக சத்தம் ஏற்படுத்துவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கும் தனியாக நடவடிக்கை எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications


