தனது பழைய காரை மறக்காமல் கான்வேயில் இணைத்த முதல்வர் விஜய்! நேற்றுவரை அதுதான் அவரது விருப்பமான கார்!
தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். சென்னையின் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு பின்னர் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து தலைமை செயலகத்திற்கு பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ புறப்பட்டு சென்றார். கடந்த மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அன்றிரவே முதலமைச்சருக்கான இசட்+ (Z+) பாதுகாப்பு வாகனங்கள் விஜய் வீட்டு வாசலை தேடி வந்துவிட்டன.
அடுத்த நாளில் இருந்து, விஜய் எங்கேனும் வெளியில் செல்லும்போது அவரது காருக்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்பு வாகனங்கள் வரிசைக்கட்டி சென்றன. இருப்பினும், ஆட்சியமைப்பதற்கு போதிய பெரும்பான்மையை விஜய் நிரூபிக்காததால் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்தார். இதனால், விஜய்க்கான முதல்வர் பாதுகாப்பு அந்தஸ்து நிறுத்திக் கொள்ளப்பட்டது.

ஆனால், தலைவர் விஜய் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே வாகன பாதுகாப்பு தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்பட்டதாக தவெக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மே 6ஆம் தேதி மாலை முதல்முறையாக ஆளுநரை சந்திக்க பாதுகாப்பு வாகனங்களின் படை பலத்துடன் சென்ற விஜய்க்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தினால் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுக்கப்பட்டதை அடுத்து அப்போதே அவருக்கான இசட்+ பாதுகாப்பு நீக்கப்பட்டது.
இந்த நிலையில், மே 10ஆம் தேதியான இன்று அதிகாரப்பூர்வமாக விஜய்க்கு தமிழக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்ததை அடுத்து, கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு முதல்வருக்கான இந்த பாதுகாப்புப் படையில் இருப்பது எல்லாம் மிகவும் அல்ட்ரா லக்சரி கார்கள் கிடையாது.

சற்றே விலையுயர்ந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyata Fortuner) மற்றும் லேண்ட் க்ரூஸர் (Land Cruiser) போன்ற கார்கள் தான். இருப்பினும், அவை அனைத்தும் துப்பாக்கி குண்டுகளை தாங்கும் அளவிற்கு புல்ல்ட் ப்ரூஃப் (Bullet Proof) செய்யப்பட்டவை ஆகும். இதில் சில கார்களை கையெறிக் குண்டுகளை தாங்கும் அளவிற்கு மாற்றி பயன்படுத்துகின்றனர்.
முதலமைச்சருக்கான அதிகாரப்பூர்வ அலுவலக வாகனமாக முன்பக்கத்தில் தேசிய கொடியுடன் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta) கார் வழங்கப்பட்டுள்ளது. '6666' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் உடன் சில்வர் நிறத்தில் உள்ள இந்த கார் ஆனது கொஞ்சம் பழைய ஜென்ரேஷன் இன்னோவா கிரிஸ்டா தான். இருப்பினும், பொதுவாகவே இன்னோவா கார்கள் எந்தவொரு காலத்திற்கும் ஏற்ற கார்கள் ஆகும்.
முதல்வரின் அலுவலக வாகனம் மட்டுமின்றி, அவரது இசட்+ பாதுகாப்பு படையிலும் பெரும்பாலான வாகனங்கள் டொயோட்டா இன்னோவா கார்களாக உள்ளன. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் பாதுகாப்புக்கான இன்னோவா கார்களில் பம்பர்கள், மேற்கூரை ரூஃப் கம்பிகள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் நிற்க படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முதல்வர் விஜய்க்கான இசட்+ பாதுகாப்பு வாகனங்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும் உள்ளன. இவை அதிகமாக, முதல்வர் வாகனத்திற்கு பின்னால் வருகின்றன. பழைய ஜென்ரேஷன் ஃபார்ச்சூனர் காரையும் கான்வேயில் பார்க்க முடிகிறது. இவற்றை தொடர்ந்து, டொயோட்டா இன்னோவா, மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) கார்களும் காவல்துறை வாகனங்களாக செல்கின்றன.
இவற்றுடன், முதல்வர் விஜய் முன்னதாக பயன்படுத்திய நீல நிறத்திலான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரையும் இன்றைய கான்வேயில் பார்க்க முடிந்தது. விஜய் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஸ்விஃப்ட் காரை தனது கான்வேயில் வைத்துள்ளரா அல்லது இன்றும் மட்டுமே இந்த ஸ்விஃப்ட் கார் கான்வேயில் இருக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமின்றி, ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கான கான்வேயில் அவசர மருத்து உதவிக்காக ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்கான வாகனங்களும் இருக்கும். இது எல்லா முதல்வர்களுக்கும் வழங்கப்படும் ஒன்றுதான் என்றாலும், நேற்றுவரை எளிமையாக ஸ்விஃப்ட் காரில் சென்றுக் கொண்டிருந்த முதல்வர் விஜய் இன்று இத்தனை கார்கள் புடைசூழ செல்வதை பார்க்கும்போது பிரம்மிப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications