சீனாக்காரன் என்னென்ன கண்டுப்பிடிக்குறான் பாருங்க... 1 வருஷத்துக்கு அப்புறம் அரசாங்கத்திடம் இருந்து வந்த பதில்!
விமானங்கள், ராக்கெட்கள், கப்பல்கள் உள்ளிட்டவற்றில் எல்லாம் கழிப்பறை என்கிற எந்தவொரு மனிதனுக்கும் அடிப்படை தேவையான அம்சம் ஆனது உள்ளது. மிக உயரத்தில் பணியாற்றும் கிரேன் (Crane) ஆப்ரேட்டர்களுக்கு கூட அவ்வளவு உயரத்தில் கழிப்பறை ஆனது வழங்கப்படுகிறது. ஆனால், தினந்தோறும் மணிக்கணக்கில் நாம் பயன்படுத்தும் கார்களில் ஏன் கழிப்பிட வசதி வழங்கப்படுவது இல்லை என எப்போதாவது யோசித்துள்ளீர்களா?
நம்மில் பலருக்கு இந்த கேள்வி எழ வாய்ப்பில்லை என்றாலும், சீனாவை சேர்ந்த செரெஸ் (Seres) என்கிற கார் நிறுவனம் இதனை யோசித்தது மட்டுமின்றி, காரில் இருக்கைக்கு அடியில் கழிப்பிட வசதியை அமைப்பதற்கான டிசைனுக்கு காப்புரிமையையும் (Patent) பெற்று ஷாக் கொடுத்துள்ளது. இதற்கான காப்புரிமையை வேண்டி சீன அரசாங்கத்திடம் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செரெஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், அதற்கான ஒப்புதல் தற்போது இந்த ஏப்ரல் மாதத்தில் கிடைத்துள்ளது.

தனது எலெக்ட்ரிக் கார்களில் இத்தகைய வசதியை வழங்குவதற்காக இந்த காப்புரிமையை செரெஸ் பெற்றுள்ளது. படங்களில் இதற்கான டிசைனை பார்க்கும்போது எளிமையாக இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் இது செரெஸ் நிறுவனத்திற்கு சிக்கலான விஷயமாகவே இருக்கும். ஏனெனில், காருக்குள் இருக்கைக்கு அடியில் வழங்கப்படும் கழிப்பிட வசதி ஆனது இருக்கையை நகர்த்தி, இருக்கும் இடத்தில் இருந்தே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.
கழிப்பிடத்தை பயன்படுத்தாத நேரத்தில் இருக்கைக்கு அடியில் மறைவாக இருப்பது போன்றும், தேவைப்படும் சமயத்தில் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது போன்றும் வடிவமைத்துள்ளனர். இது எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செயல்பாட்டிற்கு எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.

ஏனெனில், இருக்கைக்கு அடியில் பொருட்களை வைத்தற்கான இடவசதியை நகர்த்தக் கூடிய வகையில் வழங்குவது எளிது. ஆனால், அந்த இடத்தில் கழிப்பிட வசதியை வழங்குவது நாம் நினைப்பதை காட்டிலும் கடினம். ஏனென்றால், கழிப்பிடம் என்றால் அதற்கேற்ப நீர் வசதியை வழங்க வேண்டும் மற்றும் செப்டிக் டேங்க் (Septic Tank) வசதியை வழங்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, கழிப்பிட வசதியை பயன்படுத்துவதால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கான வழியை கண்டுப்பிடிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் எப்படியோ கஷ்டப்பட்டு அமைத்துவிட்டாலும், ஓடும் காரில் அத்தனை குலுக்கல் மற்றும் அதிர்வுகளுக்கு மத்தியில் கழிப்பிடத்தை எப்படி பயன்படுத்துவது என்பது கேள்விக்குறியே ஆகும்.
எலெக்ட்ரிக் கார்களில் தான் இந்த வசதியை செரெஸ் நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுவதால், எலெக்ட்ரிக் கார்களில் நீரை சேமித்து பயன்படுத்துவது எந்த அளவிற்கு நடைமுறைக்கு சரிப்பட்டுவரும் என்பது தெரியவில்லை. ஆனால், எலெக்ட்ரிக் கார்களின் எடை குறைவு என்பதால், அவற்றில் செப்டிக் டேங்க் போன்ற கூடுதல் எடையை சேர்ப்பது பெரியதாக பிரச்சனையாக இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகவும் சிலர் தங்களது காரில் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்களில் காரின் பின்பக்க பூட்ஸ்பேஸ் (Bootspace) பகுதியிலோ அல்லது பின் இருக்கை வரிசையை நீக்கிவிட்டு அந்த இடத்திலோ தான் கழிப்பிட வசதியை கொண்டுவந்தனர். மற்றப்படி, இந்தியாவில் எந்த கார் நிறுவனமும் இவ்வாறு யோசித்தது இல்லை.
ஆதலால், ஒருவேளை இது செரெஸ் கார்களில் வழங்கப்பட்டால், உலகிலேயே காரில் கழிப்பிட வசதியை பயணிகளின் இருக்கைக்கு அடியிலேயே வழங்கிய பெருமையை சீனாவின் செரெஸ் பெறும். இருப்பினும், காப்புரிமை பெறப்பட்டுள்ளது என்பதற்காக இந்த வடிவமைப்பு உயிர்பெறும் என உறுதியாக கூற முடியாது. ஒருவேளை சீனாவில் இந்த கண்டுப்பிடிப்பு பயன்பாட்டிற்கு வந்தாலும், இந்தியாவில் வருவதற்கு இன்னும் பல வருடங்களாகும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








