3 வருஷத்துக்கு அப்புறம் எலெக்ட்ரிக் கார்கள் பேரிச்சம் பழத்துக்கு கூட தேறாது! வெளியான அதிர்ச்சி தகவல்!
எலெக்ட்ரிக் கார்களுக்கு பெரிதாக ரீ-சேல் வேல்யூ கிடையாது என பலரும் கருதுகின்றனர். அது தற்போது நிஜமாகியுள்ளது. சீனா ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு மற்றும் ஹீஜன் கன்சல்டிங் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து தற்போது ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளன. இதில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளன.
சீனாவில் புதிதாக வாங்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் கார் 3 ஆண்டுகள் கழித்து சராசரியாக தனது மதிப்பில் 43 சதவீதத்தை மட்டுமே தக்க வைத்து கொள்வதாக அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 லட்ச ரூபாய்க்கு ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்கினால், 3 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கும்.

சீனாவில் எலெக்ட்ரிக் கார்களின் ரீ-சேல் வேல்யூ மிக கடுமையாக சரிந்து வருவதை இந்த ரிப்போர்ட் உறுதி செய்துள்ளது. அதுவும் வெறும் மூன்றே வருடங்களில் இந்த அளவிற்கு மறுவிற்பனை மதிப்பு சரிவது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருவதுதான் இதற்கு முதல் காரணம். அதாவது சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் நிறுவனங்கள் அதிக ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் கார்களை தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்கின்றன. ரேஞ்ச் விஷயத்தில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

அத்துடன் வேகமாக சார்ஜ் ஏறும் தொழில்நுட்பமும் மேம்பட்டு கொண்டே செல்கிறது. மேலும் புதுப்புது வசதிகளுடன் புதிய எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகமாகின்றன. இதை எல்லாம் பார்க்கும் வாடிக்கையாளர்கள் பழைய எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு பதிலாக, ரேஞ்ச், சார்ஜ் ஏறும் வேகம் மற்றும் அதிநவீன வசதிகளில் மேம்பட்ட புதிய எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதையே விரும்புகின்றனர்.
பழைய எலெக்ட்ரிக் கார்களின் மதிப்பு குறைந்து வருவதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இங்கே மற்றொரு காரணத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. சந்தையில் தங்களின் ஆதிக்கத்தை அதிகரித்து கொள்வதற்காக சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் சமீப காலமாக எலெக்ட்ரிக் கார்களின் விலையை மிக கடுமையாக குறைத்து வருகின்றன.
குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்போது, அதுவும் ரேஞ்ச், சார்ஜ் ஏறும் வேகம் மற்றும் வசதிகளில் மேம்பட்ட புதிய எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்போது, பழைய எலெக்ட்ரிக் கார்களை வாங்க யாரும் விரும்ப மாட்டார்கள் அல்லவா? இதன் காரணமாகவும் சீனாவில் எலெக்ட்ரிக் கார்களின் ரீ-சேல் வேல்யூ குறைந்து கொண்டே செல்கிறது.
சீனாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார்களின் சராசரி வயது வெறும் 1.8 வருடங்களாக மட்டுமே உள்ளது. அதாவது ஒரு எலெக்ட்ரிக் காரை வாங்கினால், சராசரியாக 1.8 வருடங்களில் அதை விற்பனை செய்து விடுகின்றனர். சீனாவில் மக்கள் எலெக்ட்ரிக் கார்களை செல்போன் போல் கருத தொடங்கியிருப்பதை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
பொதுவாக செல்போன் போன்ற உபகரணங்களை மக்கள் அடிக்கடி அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு மாடலை வாங்கின குறுகிய காலத்திலேயே, அதை விட மேம்பட்ட மாடல் வரும்போது அதற்கு மாறி கொள்வார்கள். அதேபோன்றுதான் தற்போது சீனாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கும் நடக்க தொடங்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சீனாவில் எலெக்ட்ரிக் கார்களின் மறு விற்பனை மதிப்பு குறைந்தாலும் கூட, வழக்கமான ஐசி இன்ஜின் கார்களின் மறு விற்பனை மதிப்பு தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு மக்கள் தயங்குவதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக உள்ளது. மறு விற்பனை மதிப்பு குறைவாக இருக்கும் என்று கருதிதான், எலெக்ட்ரிக் கார்களுக்கு பதிலாக இன்னமும் பலர் தொடர்ந்து ஐசி இன்ஜின் கார்களையே வாங்கி கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications