துரேந்தரில் இதனால்தான் இந்த டொயோட்டா காரை காட்டுனாங்களா? பாகிஸ்தான்னு மட்டுமில்ல எந்த நாட்லயும் யூஸ் பண்ணலாம்!
துரேந்தர்: தி ரிவேஞ்ச் (Dhurandhar: The Revenge) திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. பாக்ஸ்-ஆபிஸ் (Box-Office) வசூலை வாரி குவித்துவரும் இது, கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதியில் திரைக்குவந்த துரேந்தர் முதல் பாகத்தின் இரண்டாம் பாகமாகும். முதல் பாகத்தில் ஏகப்பட்ட கார் & பைக்குகள் பயன்படுத்தப்பட்டதை போல், இரண்டாம் பாகத்திலும் நிறைய கார் மற்றும் பைக்குகள் படம் முழுவதிலும் சீறிப் பாய்வதை பார்க்க முடிகிறது.
துரேந்தர் முதல் பாகத்தில் என்னென்ன கார் & பைக்குகள் காட்டப்பட்டு இருந்தன என்பதை ஏற்கனவே முந்தைய ஒரு தொகுப்பில் பார்த்திருந்தோம். இந்த தொகுப்பில், துரேந்தர்: தி ரிவேஞ்ச் திரைப்படத்தில் கதாநாயகன் ரன்வீர் சிங் (Ranveer Singh) மற்றும் படத்தின் வில்லன் கதாபாத்திரம் பயன்படுத்திய கார்களையும், அவற்றில் சிறந்தது எது என்பதையும் பற்றி பார்க்க போகிறோம்.

முதல் பாக திரைப்படத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், இரண்டாம் பாகத்தில் எதிரெதிர் துருவங்களாக மாறிய கதைகளை பலமுறை பார்த்துள்ளோம். துரேந்தர் கதையும் அவ்வாறானதே. துரேந்தர் முதல் பாகத்தில் ரவுடியாக நடித்த ரன்வீர் சிங்கிற்கும், மேஜர் இக்பால் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஜூன் ராம்பால் (Arjun Rampal) அவருக்கும் இடையே நெருக்கம் இருப்பதுபோல் காட்டியிருப்பார்கள்.
ஆனால், எதிர்பார்த்ததை போல் இரண்டாம் பாகத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே உரசல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மேஜர் இக்பால் மூலம் ஹம்சா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரன்வீர் சிங்கிற்கு 'படே சஹாப்' கதாபாத்திரம் அறிமுகமாகிறது. இந்த படே சஹாப் கதாபாத்திரம் ஆனது இந்தியாவின் பிரபல ரவுடி தாதாவான தாவூத் இப்ராஹிம் (Dawood Ibrahim) என கூறப்படுகிறது.

அதன்பின், மேஜர் இக்பால் குழுவுக்கும், ஹம்சா குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை தான் இரண்டாம் பாகத்தில் கதையாக எடுத்து வைத்துள்ளனர். துரேந்தர்: தி ரிவேஞ்ச் பாகத்தில் ஹம்சாவாக நடித்த ரன்வீர் சிங் அதிகமாக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 60 சீரிஸ் (Toyota Land Cruiser 60 Series) காரை பயன்படுத்தி உள்ளார். இந்த காரை முதல் பாகத்தில் ரெஹ்மான் டகெயிட் ஆக நடித்த அக்சய் கண்ணா (Akshay Khanna) பயன்படுத்தியதை பார்த்திருந்தோம்.
மறுப்பக்கம், வில்லன் குழுவின் தலைவரான மேஜர் இக்பால் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) காரை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. முதல் பாகத்தில் இருந்தே இந்த டிஃபெண்டர் காரை தான் அவர் பயன்படுத்தினார். இந்த திரைப்பட கதைகளம் 2000- 2010 காலக்கட்டத்தில் நடப்பதுபோல் காட்டியிருந்தாலும், மேஜர் இக்பால் கதாபாத்திரம் இன்றைய கால மாடர்ன் டிஃபெண்டர் 110 காரை பயன்படுத்தியது, பார்க்க ஒன்றும் அவ்வளவு நெருடலாக இல்லை.
ஹம்சாவின் லேண்ட் க்ரூஸர் 60 சீர்ஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், படத்தில் இவர் பயன்படுத்தி இருப்பது லேண்ட் க்ரூஸர் 60 சீரிஸின் எஃப்ஜே60 (FJ60) கார் ஆகும். 1980-90ஆம் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட லேண்ட் க்ரூஸர் எஃப்ஜே60 ஆனது எளிதாக பழுதுப் பார்க்கக்கூடிய கார் ஆகும். அதாவது, அந்த அளவிற்கு இதன் மெக்கானிசம் 1980 கால கார்களில் இருப்பது போன்று எளிமையானது.
இதனால்தான், பாகிஸ்தானின் லியாரி (Lyari) போன்ற பகுதிகளில் கூட இந்த காரை தொடர்ந்து பராமரித்து பயன்படுத்துவது போல இந்த படத்தில் காட்டியுள்ளனர். ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றதான லேண்ட் க்ரூஸர் எஃப்ஜே60 கார் 4 லிட்டர் மற்றும் 4.2 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டது. மேஜர் இக்பாலின் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 ஆனது 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இப்போதும் இந்தியாவில் விற்பனையில் உள்ளது.
இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இருக்கும் அதே மாடர்ன் டிஃபெண்டர் 110 காரை எடுத்து துரேந்தர் படத்தில் பயன்படுத்தி இருப்பதுதான் இதில் நகைச்சுவையாக அமைந்துள்ளது. லேண்ட் க்ரூஸர் எஃப்ஜே60 காரை போல், மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களுடன் டிஃபெண்டர் 110 சொகுசு காரும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: துரேந்தர் திரைப்படத்தின் ஹீரோ மற்றும் வில்லனின் இந்த கார்களில் எது வெற்றி பெற்றது என்பதை கூறுவது மிகவும் கடினம். மாடர்ன் டர்போ டீசல் என்ஜின் உடன் மேஜர் இக்பாலின் டிஃபெண்டர் 110 வேகமான இயக்கத்திற்கு ஏற்ற சேசிஸை கொண்டுள்ளது. அதேநேரம், 30- 40 வருட பழைய லேண்ட் க்ரூஸர் எஃப்ஜே60 ஆனது எளிதாக பராமரித்து நீண்ட வருடங்களுக்கு பயன்படுத்தக்கூடியது ஆகும். இவர்கள் இருவர் இல்லாமல், போலீஸ் அதிகாரியாக எஸ்பி அஸ்லாம் சௌத்ரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத் (Sanjay Dutt) லெக்ஸஸ் எல்.எக்ஸ்470 (Lexus LX470) காரை பயன்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications








