இன்ஸ்சூரன்ஸ் தொகை கிடைக்காதுனு யார் சொன்னாலும் நம்பாதீங்க! சரியான நேரத்தில் அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு!
இந்தியாவில் எத்தனால் கலந்த E20 எரிபொருளைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், இதனால் உங்கள் வாகனக் காப்பீடு (Insurance) எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது என்றும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது. இந்த மாபெரும் அறிவிப்பு ஆனது வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவிய குழப்பத்தை தீர்ப்பதுடன், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியதாக அமைந்துள்ளது.
மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த முக்கிய அறிவிப்பில், E20 எரிபொருள் பயன்பாடும், வாகனத்தின் காப்பீட்டுச் செல்லுபடியாகும் தன்மையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஆச்சரியம் என்னவென்றால், அமெரிக்கா, பிரேசில், மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் ஏற்கனவே எத்தனால் கலப்பு முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.

அப்படியிருந்தும் இந்தியாவில் இவ்வாறான ஒரு வதந்தி பரவி உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு சந்தேகங்களுக்கும் ஆதாரமற்ற தகவல்களுக்கும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மூலம் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் தற்போது மிக விரிவான விளக்கங்களை அளித்துள்ளது.
வாகனத்தின் என்ஜின் பழுதடையும் என்கிற அச்சம் தேவையில்லை என்றும், E20 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை என்ஜின் பழுதடைந்ததாக எந்தவொரு உறுதியான புகாரும் பதிவாகவில்லை என்றும் அரசு தெளிவாகக் கூறியுள்ளது. எத்தனால் கலந்த எரிபொருளில் சர்க்கரையின் மூலக்கூறுகள் இருப்பதால் எறும்புகள் மற்றும் பூச்சிகள் ஈர்க்கப்படும் என்கிற விசித்திரமான வதந்தியும் பரவியது.

ஆனால், எரிபொருளில் பயன்படுத்தப்படும் எத்தனால் கடுமையான தொழிற்சாலை செயலாக்கத்திற்கு உட்படுத்தப்படுவதால், இதில் பூச்சிகளைக் கவரும் சர்க்கரை கூறுகள் எதுவும் இருக்காது என்று அரசு இந்த வதந்தியை அறிவியல் பூர்வமாக முறியடித்துள்ளது. இவ்வாறு வதந்திகள் பரவுவது, நாட்டில் எத்தனால் மீதான வெறுப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
உங்களுக்குத் தெரியுமா? இந்த எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, இந்தியா இதுவரை ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது. இது நமது நாட்டின் பொருளாதார வலிமைக்கு எவ்வளவு பெரிய ஊக்கம் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே நேரத்தில், வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய கேள்வியும், எதிர்பார்ப்பும் உள்ளது.
எத்தனாலை பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அரசு விரிவாக விளக்கினாலும், மிக முக்கியமான சில விஷயங்கள் பற்றி இன்னும் மௌனம் காப்பது ஏன் என்கிற கேள்வி பலருக்கும் உள்ளது. E20 எரிபொருளின் மைலேஜ், அதன் பராமரிப்புச் செலவு மற்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார தாக்கம் பற்றி அரசு அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
உண்மையில், பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் அடர்த்தி குறைவு என்பது உலகறிந்த விஷயம். இதனால் எத்தனால் கலப்பு அதிகரிக்கும் போது மைலேஜ் சற்றே குறைய வாய்ப்பு உள்ளதா? E85 போன்ற மிக உயர்ந்த எத்தனால் கலவைகளைப் பயன்படுத்தும் போது, வாகன ஓட்டிகள் தங்களின் அன்றாட மைலேஜில் எந்த மாதிரியான மாற்றத்தை உணர்வார்கள்? என்கிற கேள்விகள் இன்னும் விடை தெரியாமல் நீடிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனால் கலந்த மலிவான எரிபொருளைப் பயன்படுத்தும் போது, ஒரு கிலோமீட்டருக்கான உண்மையான இயக்க செலவு குறையுமா அல்லது அதிகரிக்குமா? என்பதை கண்டறியும் பொருட்டு சில ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. எரிபொருள் விலை குறைந்தாலும் மைலேஜ் குறைவதால் லாபம் சமமாகி விடுகிறது என்று அந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மத்திய அரசின் தற்போதைய விளக்கம் காப்பீடு பாதுகாப்பு மற்றும் ஆற்றல் பாதுகாப்பை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. நுகர்வோரின் பாக்கெட்டைப் பாதிக்கும் எரிபொருள் சிக்கனம் மற்றும் நீண்ட காலப் பராமரிப்புச் செலவுகள் போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கு வரும் நாட்களில் என்னென்ன விடைகள் கிடைக்கப்போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
டிரைவ்ஸ்பார்க் கருத்தில் கூடுதலான விபரங்கள் சேர்க்கப்பட்டன.


Click it and Unblock the Notifications