EV கார் வாங்கப்போறீங்களா... இந்த பேட்டரி kWh திறன், சார்ஜர் kW திறன், மின்சார Unit எப்படி கணக்கிடுவது?
பண்டிகை காலம் நெருங்கி வரும் இவ்வேளையில் பலர் புதிய கார் வாங்க திட்டமிட்டு வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வு, E20 மீதான சந்தேகம் போன்றவற்றால் பலரது கவனம் இப்போது எலெக்ட்ரிக் கார்கள் மீது திரும்பி உள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார் வாங்கும்போது பேட்டரி திறன், ரேஞ்ச், சார்ஜிங் நேரம், மோட்டார் பவர் என பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதில் kWh, kW, Unit போன்ற வார்த்தைகள் பலருக்கும் இன்னும் குழப்பமாகவே இருக்கின்றன.
இந்த வார்த்தைகள் உண்மையில் மிகவும் எளிமையான விஷயங்கள்தான். ஒரு EV-யின் பேட்டரி எவ்வளவு மின்சாரத்தை சேமிக்கும், அதை சார்ஜ் செய்ய எவ்வளவு செலவாகும், அந்த மின்சாரத்தில் எவ்வளவு தூரம் செல்ல முடியும், மோட்டார் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை புரிந்துகொள்ள இந்த அளவீடுகள் உதவுகின்றன. இதனை புரிந்துகொள்ளும் வகையில் அவற்றிற்கான விளக்கத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேட்டரியின் kWh என்பது என்ன?
ஒரு எலெக்ட்ரிக் காரின் பேட்டரி எவ்வளவு மின்சார ஆற்றலை சேமித்து வைக்கும் என்ற திறனை குறிப்பிடுவதற்கு kWh பயன்படுத்தப்படுகிறது. இது Kilowatt-hour என்பதன் சுருக்கம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, ஒரு எலெக்ட்ரிக் காரில் 50 kWh பேட்டரி இருக்கிறது என்றால், அந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் சுமார் 50 kWh அளவிலான மின்சார ஆற்றலை சேமித்து வைத்திருக்கும் என்று அர்த்தம்.
இன்னொரு காரில் 60 kWh பேட்டரி இருந்தால், அதில் இதனைவிட அதிக அளவு ஆற்றலை சேமிக்க முடியும். இதை ஒரு தண்ணீர் தொட்டியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தொட்டி எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அவ்வளவு அதிக தண்ணீரை நாம் சேமிக்க முடியும். அதேபோல், பேட்டரியின் kWh அளவு அதிகமாக இருந்தால், அதில் அதிக மின்சார ஆற்றலையும் சேமிக்க முடியும்.

kWh மற்றும் Unit இடையிலான சம்பந்தம்
இப்போது kWh என்ற அளவிற்கும் நாம் வீட்டு மின்சார பில்லில் பார்க்கும் Unit என்ற அளவிற்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்வோம். மின்சார கணக்கில் 1 Unit என்பது 1 kWh-க்கு சமம். எனவே 50 kWh பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக சார்ஜ் செய்ய கணக்கீடுகளின்படி 50 Unit மின்சாரம் தேவைப்படும்.
ஆனால் இது ஒரு நேரடி கணக்கு மட்டுமே. ஆனால் சார்ஜிங் நேரத்தில் ஏற்படும் ஆற்றல் இழப்பு காரணமாக, 50 kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய மின்சார இணைப்பிலிருந்து 50 யூனிட்டுகளைவிட சற்று அதிகமான மின்சாரம் தேவைப்படலாம். இந்த கூடுதல் பயன்பாடு சார்ஜர் மற்றும் வாகனத்தின் சார்ஜர் திறனைப் பொறுத்து மாறுபடும்.
சார்ஜிங் செலவை எப்படி கணக்கிடுவது?
EV கார் வாங்குபவர்களுக்கு மிகவும் முக்கியமான கணக்குகளில் ஒன்றாக இதனை குறிப்பிடலாம். ஒரு காரில் 50 kWh பேட்டரி இருக்கிறது என்றும், வீட்டு சார்ஜரில் போடும்போது ஒரு Unit மின்சாரத்தின் விலை ரூ.8 என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியானால், 50 யூனிட்டுகளுக்கு ரூ.8 வீதம் ரூ.400 வரை செலவாகும். சார்ஜ் செய்யும்போது ஏற்படும் மின் இழப்பை கணக்கில் எடுத்தால் நடைமுறை செலவு சற்று அதிகமாக இருக்கும்.

சார்ஜரின் kW என்ன சொல்கிறது?
இப்போது சார்ஜரைப் பார்ப்போம். இங்கு சார்ஜரின் திறனை குறிப்பதற்கு kW என்ற அளவை பயன்படுத்துகிறோம். உதாரணமாக, 7.2 kW AC வீட்டு சார்ஜர் என்றால், அந்த சார்ஜர் ஒரு மணி நேரத்தில் சுமார் 7.2 kWh அளவிலான மின்சார ஆற்றலை பேட்டரிக்கு கொடுக்கும் திறன் கொண்டது. 50 kWh பேட்டரியை 7.2 kW சார்ஜரில் சார்ஜ் செய்தால், இரண்டையும் வகுக்கும்போது 6.9 மணி நேரம் வருகிறது. நடைமுறையில் சார்ஜிங் திறன், பேட்டரியின் நிலை மற்றும் சார்ஜிங் வேகம் மாறும் வெப்பம் போன்ற காரணங்களால் உண்மையான நேரம் இதிலிருந்து சற்று கூடுதலாகவே இருக்கும். எனவே, எளிமையாகச் சொன்னால், kWh என்பது பேட்டரி எவ்வளவு ஆற்றலை சேமிக்கிறது என்பதையும், kW என்பது சார்ஜர் அந்த ஆற்றலை எவ்வளவு வேகமாக வழங்குகிறது என்பதையும் குறிக்கிறது.
மைலேஜ் கணக்கீடு?
பெட்ரோல் காரில் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் என்றால், ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ செல்லும் என்று அர்த்தம் கொள்கிறோம். அதேபோன்று, எலெக்ட்ரிக் காரில் km/kWh என்பது ஒரு kWh அல்லது 1 Unit மின்சாரத்தில் கார் எத்தனை கிமீ பயணிக்கும் என்பதை குறிக்கிறது. இதை தெரிந்துகொள்ள, காரின் ரேஞ்சை அதன் பேட்டரி திறனால் வகுக்க வேண்டும். உதாரணமாக, 50 kWh பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் கார்ஸ 300 ரேஞ்ச் கொடுக்கிறது.ரேஞ்ச் திறனுடன் 50kWh மின்சேமிப்புத் திறனை வகுத்தால் பேட்டரியில் உள்ள ஒரு kWh மின் ஆற்றலுக்கும் அந்த கார் 6 கிமீ வரை செல்லும் திறன் கொண்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த கணக்கை வைத்து பயணச் செலவையும் எளிதாக தெரிந்துகொள்ளலாம். அதாவது 100 கி.மீ செல்வதற்கு 16.7 kWh மின்சாரம் தேவைப்படும். ஒரு Unit மின்சாரத்தின் விலை ரூ.8 என்றால், 100 கி.மீ பயணத்திற்கான மின்சாரச் செலவு சுமார் 16.7 kWh மின் ஆற்றலை ரூ.8 உடன் பெருக்கினால் ரூ.134 கட்டணம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடைமுறையில் சார்ஜிங் இழப்பு, ஏசி பயன்பாடு, வேகம் மற்றும் சாலை நிலை போன்ற காரணிகளால் ரேஞ்சும் செலவும் மாறுபடும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெட்ரோல் காரில் மைலேஜ் மற்றும் லிட்டர் கணக்கு எப்படி முக்கியமோ, அதேபோல் எலெக்ட்ரிக் காரில் kWh, km/kWh மற்றும் charging kW ஆகியவற்றை புரிந்துகொள்வது முக்கியம். இந்த அடிப்படைகளை தெரிந்துகொண்டால், அடுத்த முறை எந்த எலெக்ட்ரிக் வாகனங்களின் தொழில்நுட்ப விபரங்களை பார்த்தாலும், பேட்டரி, ரேஞ்ச், சார்ஜிங் செலவு மற்றும் மோட்டார் பவர் பற்றிய தகவல்களை நீங்களே எளிதாக புரிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications


