என்னாடா சுத்து போடுறீங்களா? டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியா எத்தனை கார் வந்தாலும் ஒன்னும் நடக்காது!
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) நீண்ட காலமாக ப்ரீமியம் D-பிரிவு எஸ்யூவி (SUV) கார்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல புதிய போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகும், அதன் நம்பகத்தன்மை மற்றும் வலிமையான நற்பெயரால் ஃபார்ச்சூனர் தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், இதே விலை வரம்பில் கருத்தில் கொள்ளத்தக்க சில சக்திவாய்ந்த மாற்று கார்கள் உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் டைரோன் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line): ஜெர்மன் கார் நிறுவனமான ஃபோக்ஸ்வாகன், தனது புதிய டைரோன் ஆர்-லைன் காரை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நேரடிப் போட்டியாக அமைகிறது. இந்த எஸ்யூவி கார் 204 பிஎச்பி ஆற்றலையும், 320 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வலிமையான 2.0 லிட்டர் TSI என்ஜினுடன் வருகிறது. இந்த என்ஜின் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.45-50 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைரோன் ஆர்-லைன், ஆல்-வீல்-டிரைவ் (AWD) திறனுடன் எளிதாக ஆஃப்-ரோடு சாகசங்களை கையாளக்கூடியது. ஃபார்ச்சூனரை விட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இந்த வாகனம், பல அதிநவீன அம்சங்களுடன் வருகிறது.
இதில் ஸ்போர்ட்டியான வெளிப்புற வடிவமைப்பு, 19-இன்ச் அலாய் சக்கரங்கள், IQ.LED விளக்குகள், 15-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வெண்டிலேட்டட் (Ventilated) வசதியுடன் கூடிய லெதர் இருக்கைகள், வண்ண கேபின் விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், டிரைவ் புரொஃபைல் செலக்டர், 4மோஷன் (4MOTION) தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) ஆகியவை அடங்கும்.

எம்.ஜி க்ளோஸ்டர் (MG Gloster): சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட D-பிரிவு எஸ்யூவி கார் எம்.ஜி க்ளோஸ்டர் ஆகும். இந்த பிரிவில் இன்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்றாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.38.33 லட்சம் முதல் தொடங்குகிறது. இதில் 2.0 லிட்டர் டர்போ மற்றும் ட்வின்-டர்போ டீசல் என்ஜின் ஆப்ஷன்கள், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்றன.
2-வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் ஆகிய இரு வெர்சன்களில் க்ளோஸ்டர் கிடைக்கிறது. இதன் கூடுதல் சிறப்பம்சங்களில் இரட்டை பேனல் சன்ரூஃப், அனைத்து பாதைகளுக்கான அமைப்புடன் கூடிய இன்டெலிஜென்ட் 4-வீல்-டிரைவ், தானியங்கி பார்க்கிங் உடன் கூடிய எலக்ட்ரானிக் கியர் ஷிஃப்ட், 31.2 செ.மீ மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் ஸ்போர்ட், நார்மல், எக்கோ போன்ற பல டிரைவ் மோட்கள் அடங்கும்.

ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq): இந்த பிரிவில் உள்ள ப்ரீமியம் எஸ்யூவி கார்களில் ஒன்று ஸ்கோடா கோடியாக் ஆகும். குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த 7-சீட்டர் எஸ்யூவி கார், வலிமையான ஜெர்மன் பொறியியலுடன் 4x4 டிரைவ்ட்ரெய்ன், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. ஸ்கோடா கோடியாக் ஆரம்ப விலை ரூ.39.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
டைரோன் ஆர்-லைனின் அதே பிளாட்ஃபார்மில் கோடியாக் கட்டமைக்கப்பட்டு இருந்தாலும், மிகவும் நேர்த்தியான மற்றும் ஆடம்பரமான வடிவமைப்பை வழங்குகிறது. இந்த எஸ்யூவி 204 எச்பி ஆற்றலையும், 320 என்.எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் TSI என்ஜினுடன், 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதன் உட்புறம் ஆனது இரட்டை நிற லெதர் இருக்கைகள் மற்றும் மெருகூட்டப்பட்ட டாஷ்போர்டு உடன் ஆடம்பரமானதாக உள்ளது.

ஜீப் மெரிடியன் (Jeep Meridian): ஸ்டெல்லன்டிஸ் நிறுவனத்தின் ஜீப் பிராண்ட், இந்தியாவில் மெரிடியன் எஸ்யூவி காரை விற்பனை செய்கிறது. இந்தப் பட்டியலில் மிகவும் மலிவு விலையுள்ள D-பிரிவு எஸ்யூவி கார்களில் இதுவும் ஒன்று. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.23.33 லட்சம் முதல் தொடங்குகிறது. இது 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உடன் வருகிறது. 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் ஆகிய இரு வெர்சன்களிலும் கிடைக்கிறது.
செலெக்டிவ் டாம்பிங் சஸ்பென்ஷன் அமைப்பு, வலிமையான டயர்கள், பாதைக்கு ஏற்ற மோட்கள் (ஆட்டோ, சகதி, மணல் மற்றும் பனி), 4-வீல்-டிரைவ் லாக், 4-வீல்-டிரைவ் லோ மற்றும் இறக்குமுகமான சாலைகளில் இறங்குவதற்கான கண்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் மெரிடியன் வலுவான ஆஃப்-ரோடு திறனை வழங்குகிறது. ஜீப் கார்கள் அவற்றின் கரடுமுரடான மற்றும் துணிச்சலான வெளிப்புற வடிவமைப்புக்கு பெயர் பெற்றவை, மெரிடியனும் அதே வடிவமைப்பைப் பின்பற்றுகிறது.

எம்.ஜி மெஜஸ்டர் (MG Majestor): சமீபத்தில் வெளியீடு கண்ட எம்.ஜி மெஜஸ்டர், ஃபார்ச்சூனருக்கு நேரடியான போட்டியாளராக இந்தப் பிரிவில் விரைவில் விற்பனைக்குவர உள்ளது. இது பல போட்டி கார்களை விட பெரியதாகவும், ஆக்ரோஷமான தோற்றத்துடனும் காணப்படுகிறது. இது எம்.ஜி க்ளோஸ்டர் காரை விடவும் விலையுயர்ந்ததாக எம்ஜி பிராண்டின் வரிசையில் இடம் பெறுகிறது. இதன் விலை ரூ.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
க்ளோஸ்டரில் உள்ள அதே 2.0 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜினை மெஜஸ்டர் பயன்படுத்துகிறது. மேலும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கான மேம்பட்ட 4-வீல்-டிரைவ் கண்ட்ரோல்களை கொண்ட ஒரு பிரத்யேக சென்டர் கன்சோலுடன் வருகிறது. இது 10 வெவ்வேறு ஆஃப்-ரோடு மோட்கள், டிரிபிள் டிஃபரன்ஷியல் லாக் அம்சங்கள், சீரற்ற நிலப்பரப்பிற்கான இன்டெலிஜென்ட் க்ரால் ஃபங்ஷன் மற்றும் 810 மி.மீ ஆழ நீரிலும் இயங்கும் திறன் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விலைமிக்கதாக இருப்பினும், டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக, ஆஃப்-ரோடு பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்களின் முதன்மையான சாய்ஸாக ஃபார்ச்சூனர் உள்ளது. இத்தகைய காருக்கு பதிலாக வேறொரு காரை தேர்வு செய்வது சற்று சிரமம் தான். இருப்பினும், மேற்கூறப்பட்ட கார்களும் போட்டிக்கு உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிலிலும் குறிப்பாக, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் மெஜஸ்டர் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications









