விஜய் உடன் நடித்த நடிகைக்கு 2 வருடம் கழித்து கிடைத்த அங்கீகாரம்! ஆன்-ரோடு விலை ரூ.60 லட்சத்துக்கு வருது!
நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற 'மாஸ்க்' திரைப்படத்தில் கவினுக்கு மனைவியாக நடித்திருந்தவர் நடிகை கோமல் ஷர்மா. சில நிமிட காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், திரைப்படத்தில் அது முக்கியமான கதாபாத்திரம் ஆகும். பெயரை பார்த்தால் ஏதோ இந்தி நடிகை பெயர் போன்று இருந்தாலும், இவர் பிறந்தது சென்னையில் ஆகும்.
இதைவிட இவரிடம் நம்மை ஆச்சிரியப்படுத்துவது இவரது வயது ஆகும். 35 வயதை நெருங்கினாலும் இன்னமும் இளம் நடிகை போன்றே கோமல் ஷர்மா காட்சியளிக்கிறார். இப்படிப்பட்ட இவர் தற்போது புதியதாக பிராண்ட்-நியூ BMW 2-சீரிஸ் கிரான் கூபே என்கிற லக்சரியான செடான் காரை வாங்கியுள்ளார். மேலும், இதுதொடர்பான படங்களையும் கோமல் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த மாஸ்க் திரைப்படத்தில் மட்டுமின்றி, கடந்த 2024இல் வெளிவந்த நடிகர் விஜய்யின் 'GOAT' திரைப்படத்திலும் நடிகை கோமல் ஷர்மா நடித்திருந்தார். மேலும், இன்னும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், சில தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களில் நடித்தது மட்டுமின்றி, ஒரு இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இருப்பினும், இந்த 2026இல் இவரது நடிப்பில் இன்னும் எந்த திரைப்படமும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில்தான், புத்தம் புதிய BMW 2-சீரிஸ் கிரான் கூபே காரை இவர் சொந்தமாக்கியுள்ளார். இதுதொடர்பாக கோமல் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள படங்களில், BMW டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து அவர் பளபளக்கும் வெள்ளை நிறத்திலான BMW 2-சீரிஸ் கிரான் கூபே காரை டெலிவிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இன்ஸ்டாகிராமில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டிருப்பதால், இவர் புதியதாக லக்சரி காரை வாங்கியுள்ள செய்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள BMW ஷோரூமில் இவர் இந்த காரை வாங்கியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது.
BMW 2-சீரிஸ் கிரான் கூபே காரை பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் BMW நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான மற்றும் தாழ்வான செடான் ரக கார் இதுவாகும். இந்தியாவில் 218 எம் ஸ்போர்ட் மற்றும் 218 எம் ஸ்போர்ட் புரோ என இரு விதமான வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் எந்த வேரியண்ட்டில் 2-சீரிஸ் கிரான் கூபே காரை நடிகை கோமல் ஷர்மா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. இந்த காரின் இரு வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.45.80 லட்சம் மற்றும் ரூ.48.20 லட்சமாக உள்ளன. நான்கு கதவுகளுடன் உருவாக்கப்படும் இந்த காரின் பின்பக்க மேற்கூரை ஆனது நன்கு சரிவாக கூபே கார்களை போன்று வடிவமைக்கப்படுகிறது.
இருப்பினும், BMW நிறுவனத்தின் 4-கதவு கூபே கார்களின் வரிசையில் இருப்பதிலேயே அளவில் சிறியது இந்த 2-சீரிஸ் கிரான் கூபே ஆகும். BMW நிறுவனத்தின் புதிய FAAR பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த காரின் கதவுகளில் ஜன்னல்களுக்கு ஃபிரேம்கள் வழங்கப்படுவது இல்லை. முன்பக்கத்தில் 'கிட்னி' வடிவ கிரில்லை ஒளிரக்கூடியதாக பெறும் இந்த காரில் ஏகப்பட்ட எம் ஸ்போர்ட் ஸ்டைலிங் பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள இந்த BMW ஷோரூம் மிக பிரபலமானது ஆகும். இத்தகைய ஷோரூமில் நடிகை கோமல் ஷர்மா வாங்கியிருக்கும் 2-சீரிஸ் கிரான் கூபே காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். சென்னை ஆன்-ரோடு விலைகள் எப்படியிருந்தாலும் ரூ.60 லட்சம் அளவிற்கு வரும்.
காரை பற்றிய கூடுதல் விபரங்கள் சேர்க்கப்பட்டன.


Click it and Unblock the Notifications