பதிவுச் சான்றிதழை மாற்றாத உரிமையாளர்.. ரூ.47 லட்சம் வழங்க உத்தரவு.. இந்த தப்ப நீங்களும் பண்ணாதீங்க!
ஒரு வாகனத்தின் உரிமையாளர் இன்னார் தான் என்பதைக் குறிக்கும் விதமாக பதிவுச் சான்றிதழ் (RC Book) கொடுக்கப்படுகிறது. சில வாகன உரிமையாளர்கள் இந்த இந்தப் பதிவுச் சான்றிதழை முக்கியமாகக் கருதாமல் வாகனத்தை விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக பத்து, பதினைந்தாண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களை பதிவுச் சான்றிதழை வாங்குபவரின் பெயருக்கு மாற்றாமலேயே விற்பனை செய்து விடுகின்றன. இது பல நேரங்களில் நமக்கு எதிராக திரும்ப வாய்ப்பு இருக்கிறது. அப்படியான சம்பவமே இந்த வாகன உரிமையாளருக்கு நிகழ்ந்திருக்கிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த குமார், சபரீஸ் என்பவருக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தை விற்பனை செய்துள்ளார். ஆனால், தன்னுடைய பெயரில் இருந்த வாகனத்தின் பதிவுச் சான்றிதழை சபரீஸின் பெயருக்கு அவர் மாற்றவில்லை. பின்னர் சபரீஸ் அந்த வாகனத்தைப் பயன்படுத்திய போது விபத்து நிகழ்ந்து விட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம், குமார் மற்றும் சபரீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.33 லட்சம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குமார் தன்னுடைய வாகனத்தை விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், சபரீஸ் அதனை வாங்கவில்லை என வாதிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில், இழப்பீட்டு அளவை ரூ.47 லட்சமாக உயர்நீதிமன்றம் உயர்த்தியது மட்டுமின்றி, மொத்த தொகையையும் குமாரே பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் ஏன் குமார் இழப்பீட்டை வழங்க வேண்டும்? இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஒரு வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் உள்ள உரிமையாளரே அந்த வாகனம் மூலம் ஏற்படும் எந்த விதமான சேதத்திற்கும் பொறுப்பாளராகிறார். பதிவுச் சான்றிதழில் உள்ள பெயரை மாற்றாமல், வாகனத்தை விற்பனை செய்தது தொடர்பாக எந்த விதமான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும், வாகனத்தை விற்பனை செய்ததற்கு சாட்சியங்கள் இருந்தாலுமே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

முன்னதாக உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம். இதன் மூலம் வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் பெயர் மாற்றம் எவ்வளவு முக்கியம் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இது விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கானது மட்டுமல்ல, இரவல் கொடுக்கப்படும் வாகனங்களுக்கும் சேர்த்துத் தான். உங்கள் பெயரில் இருக்கும் ஒரு வாகனம் ஏற்படுத்தும் சேதங்கள் அனைத்தும் உங்களைச் சேர்ந்தவையாகவே கருத்தப்படும். அதற்கு சட்டரீதியாக நீங்களே பொறுப்பேற்கும் நிலை ஏற்படும்.
பதிவுச் சான்றிதழை மாற்றாமல் வாகனத்தை விற்பனை செய்வது என்பது, நாம் செய்யாத தவறுக்கு பொறுப்பேற்க நாமே வழிவகுத்துக் கொடுத்தது போல் ஆகிவிடும். பதிவுச் சான்றிதழை மாற்றுவது கடினமான காரியமும் கிடையாது. அதிகபட்சமாக ரூ.2,000 வரை செலவாகும் அவ்வளவு தான். படிவம் 29, படிவம் 30, பதிவுச் சான்றிதழின் அசல், காப்பீட்டுச் சான்றிதழின் நகல், ஏதேனும் ஒரு அடையாள அட்டை, விற்பனை செய்யப்பட்டதற்கான சான்று ஆகியவற்றுடன், விற்பனை செய்தவரும் வாங்கியவரும் RTO அலுவலகம் சென்று பதிவுச் சான்றிதழை எளிதாக வாங்குபவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு வாரம் முதல் நான்கு வாரங்களுக்குள் மாற்றப்பட்ட பதிவு சான்றிதழ் பரிவாகன் பக்கத்திலும் பதிவேற்றப்பட்டு விடும். அதன் பின்னர் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்த ஒருநாள் வேலைக்கு பயந்து வாகனத்தின் பதிவுச் சான்றிதழை மாற்றாமல் விட்டீர்கள் என்றால், பின்னர் மேலே கூறிய சம்பவம் போல பெரிய பிரச்சினைகளை கூட சந்திக்க நேரலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாழ்நாளின் கடைக்கட்டத்தில் உள்ள வாகனங்களை விற்பனை செய்யும் போது நிறைய வாடிக்கையாளர்கள் பதிவுச் சான்றிதழை மாற்றாமலேயே விற்பனை செய்த சம்பவங்கள் நிறையே நடந்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது. இல்லையென்றால் பாதிப்புகளை வாகன உரிமையாளர்களே சந்திக்க வேண்டி வரும்.


Click it and Unblock the Notifications