75கிராம் தங்கத்தை பொட்டலத்தில் மடித்து எடுத்துட்டு போய்டலாம்! அந்த பணத்தில் மொத்த பேரும் வாங்க துடிக்கும் கார்
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்திய சந்தையில் தற்சமயம் மக்கள் பலரும் மிகவும் விரும்பும் கார்களுள் ஒன்று. விலை சற்று அதிகமாக இருப்பதினாலேயே பலர் இந்த ஹூண்டாய் காரை வாங்க முடியாத சூழல் உள்ளதே தவிர்த்து, கிரெட்டாவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தகைய ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்குவதற்கு எவ்வளவு தங்கம் (Gold) தேவைப்படும் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா?
ஏனெனில், சமீப காலங்களில் தங்கத்தின் மதிப்பு விண்ணை தொட்டுள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன். ஹூண்டாய் கிரெட்டா வாங்குவதற்குத் தேவையான தங்கம், காரின் வேரியண்ட் மற்றும் அன்றைய தங்கத்தின் சந்தை விலையைப் பொறுத்தது ஆகும். 2026 ஜனவரி 12 நிலவரப்படி, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு சுமார் ரூ.14,215 முதல் ரூ.14,230 வரை உள்ளது.

அதேநேரம், 2026 ஹூண்டாய் கிரெட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.79 லட்சம் முதல் ரூ.20.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை மாடலான கிரெட்டா இ (E) சுமார் ரூ.10.79 லட்சத்தில் கிடைக்கிறது; தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி இதற்கு தோராயமாக 75.8 கிராம் 24 காரட் தங்கம் தேவைப்படும்.
அதாவது, தற்போதைய சூழலில் கிரெட்டாவின் விலை குறைவான வேரியண்ட்டின் மதிப்பானது கிட்டத்தட்ட 9.5 சவரன் ஆகும். கிரெட்டா எஸ்/ எஸ்.எக்ஸ் (S/SX) போன்ற நடுத்தர வேரியண்ட்கள் ரூ.13.07 லட்சம் முதல் ரூ.15.30 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் நிலையில், இதற்கு 92 முதல் 108 கிராம் தங்கம் தேவைப்படும்.

கிரெட்டாவின் உயர்வகை வேரியண்ட்டான நைட் எடிஷன் (Knight Edition) மற்றும் எஸ்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) (SX(O))-இன் விலை சுமார் ரூ.20.20 லட்சம் ஆகும்; இதற்கு தோராயமாக 142.1 கிராம் தங்கம் அவசியம். அதாவது, ஹூண்டாய் கிரெட்டாவின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டிற்கும், டாப் வேரியண்ட்டிற்கும் இடையேயான, இணையான தங்கத்தின் மதிப்பானது கிட்டத்தட்ட டபுள் மடங்காக உள்ளது.
2026 ஜனவரி முதல் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கிரெட்டா காரின் விலையை 1.36% (சுமார் ரூ.21,272 வரை) உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றத்தில், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் எஸ் (ஆப்ஷ்னல்) நைட் வேரியண்ட்டின் விலை அதிகப்பட்சமாக ரூ.21,272 உயர்ந்துள்ளது.

புதிய விலைகளின்படி, கிரெட்டா வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.79 லட்சம் முதல் ரூ.20.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) திருத்தத்தினால் கிரெட்டா காரின் விலைகள் ரூ.70,000 வரையில் குறைக்கப்பட்டு இருந்த நிலையில், புதிய 2026ஆம் வருடத்தை விலை அதிகரிப்புடன் கிரெட்டா துவங்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை ஹூண்டாய் கிரெட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலைகளே. ஆர்டிஓ (RTO) பதிவு கட்டணம், காப்பீடு, வரிகள் அடங்கிய 'ஆன்-ரோடு' விலை, கிரெட்டாவின் உயர்வகை வேரியண்ட்களுக்கு ரூ.23.97 லட்சம் வரை உயரலாம். இதற்கு சுமார் 168.6 கிராம் தங்கம் தேவைப்படும். அதேபோல், நகர்ப்புறங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை மாறுபடும்.

மேலும், காரின் விலையை போல் அன்றி, தங்கத்தின் விலை ஒரு நாளிலேயே 2 முறை உயர்ந்த அல்லது குறைந்த செய்திகளை பார்த்திருக்கிறோம். அதுமட்டுமன்றி, இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை அனைத்தும் 24 காரட் தங்கத்தின் விலை ஆகும். 22 காரட் தங்கம் (ரூ.13,030/கிராம்) பயன்படுத்தினால், கிரெட்டாவின் அடிப்படை வேரியண்ட்டிற்கு தற்போதைய சூழலில் 83 கிராமும், உயர்வகை வேரியண்ட்டிற்கு 155 கிராமும் தங்கம் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications









