டிரைவிங் லைசன்ஸ் பயன்படுத்துவதில் கொண்டுவரப்படும் முக்கிய திருத்தம்! 50 வயதுக்கு மேலானவர்களுக்கு கட்டுப்பாடு!
இந்தியா முழுக்க வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான விஷயத்தில் மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முடிவு என சொல்வதை காட்டிலும் சீர்திருத்தம் என்றே இதனை சொல்ல வேண்டும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாதுகாப்பான மற்றும் விரைவான போக்குவரத்துக்கு ஓட்டுநர் உரிம முறையானது அவசியமான ஒன்றாக உள்ளது. தகுந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களை மட்டுமே வாகனங்களை இயக்க அனுமதிப்பது, பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இதனால், ஓட்டுநர் உரிமத்தை பெற்ற பின் அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் தற்சமயம் உள்ளது.

இதில்தான் மத்திய அரசு புதிய சீர்திருத்தங்களை கொண்டுவர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓட்டுநர் உரிமத்தை பெறும் நபர் தொடர்ந்து வாகனங்களை இயக்கும் அளவிற்கு நல்ல உடல் தகுதி உடன் உள்ளார் என்பதை குறிப்பிட்ட காலத்திற்கு பின் உறுதிப்படுத்துவதற்காகவே ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது.
அதுமட்டுமின்றி, அரசாங்கத்தால் குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்தை வேறு யாரும் சட்ட விரோதமாக பயன்படுத்தாததையும் உறுதிப்படுத்துவதற்காக ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு முறை கடைப்பிடிக்கப் படுகிறது. இருப்பினும், இந்த புதுப்பிப்பு தொடர்பான விதிகளில் சீரமைப்பு செய்து புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும் காலம் தற்சமயம் அதிகப்பட்சமாக 20 வருடங்களாக உள்ளது. அதாவது, ஒருவர் தனது 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை பெற்றால், அவர் அதனை தனது 40 வயது வரையில் பயன்படுத்தலாம். இந்த செல்லுப்படியாகும் காலம் ஆனது ஓட்டுநர் உரிமத்தை பெறும் நபரின் வயதை பொறுத்து வேறுப்படக் கூடியது ஆகும்.
அதாவது, 20 வயதில் ஓட்டுநர் உரிமத்தை பெற்றால் அதனை அவர் 40 வயது வரையில் பயன்படுத்தலாம். அதுவே, 25 வயதில் பெற்றால் அந்த ஓட்டுநர் உரிமத்திற்கான செல்லுபடியாகும் காலம் 15 வருடங்கள் மட்டுமே ஆகும். அதாவது, 40 வயதிற்குள் ஒருவர் ஓட்டுநர் உரிமத்தை பெற்றால் அதனை தனது 40 வயது வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அதன்பின் அந்த ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். 40 வயதில் இருந்து 50 வயதிற்குள் புதுப்பித்தால் 10 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமம் செல்லுப்படியாகும் காலம் வழங்கப்படும். 50 வயதில் இருந்து 55 வயதிற்குள் புதுப்பித்தால் 60 வயதை எட்டும் வரையில் அந்த ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
55 வயதிற்கு மேல் புதுப்பித்தாலும் 60 வயது வரையில் மட்டுமே ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்த முடியும். இவ்வாறு இருக்கும் நடைமுறையில் புதிய மாற்றமாக, 18 வயதில் இருந்து 50 வயதிற்குள் எப்போது ஓட்டுநர் பெற்றதை பெற்றாலும் அதனை தனது 50ஆம் வயது வரையில் பயன்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவர மத்திய போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டால், 50 வயது வரையில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டிய தேவை இருக்காது. இவ்வளவு நேரம் இந்த தொகுப்பில் நாங்கள் கூறியிருப்பது எல்லாம் பைக், கார் போன்ற தனி பயன்பாட்டு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தை பற்றி ஆகும். பயணிகள் மற்றும் சரக்கு பொருட்களை ஏற்றி செல்லும் கமர்ஷியல் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தில் இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications