சாலை விபத்தை படம் எடுக்கும் நேரத்தில் உதவுபவர்களுக்கு சன்மானம்! ரூ.25,000 உடன் சான்றிதழ்!
சாலை விபத்துகளில் சிக்குவோரை பார்த்தும் பார்க்காத மாதிரி கடந்து போவது போன்று சினிமா திரைப்படங்களில் காட்டப்படுவதை போல் நிஜ வாழ்வில் நடக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசாங்கம் புதியதாக 'ரா-வீர்' (Rah-Veer) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய திட்டத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
உலகில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மக்கள் தொகை அதிகமாக இருப்பதற்கு ஏற்ப சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளன. இதனை குறைக்க மத்திய அரசு பல விதமான முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் புதிய முயற்சி தான் ரா-வீர் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின்படி, விபத்தில் சிக்குவோருக்கு மருத்துவ உதவி கிடைக்கும் அளவிற்கு உதவி செய்து காப்பாற்றும் நபர்களுக்கு அவர்களது செயலை பாராட்டி சன்மானம் வழங்கப்படும். விபத்தில் சிக்குவோரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அத்தகைய அவசர நேரத்தில் எந்தவொரு தயக்கமும் இன்றி முன்வந்து உதவுவோரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த சன்மான திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி, சாலை விபத்தில் சிக்குவோரை உதவி செய்து காப்பாற்றுபவர்களுக்கு ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது இந்த திட்டத்தின்படி வழங்கப்படும் அதிகப்பட்ச சன்மான தொகை ஆகும். அதாவது, இருவர் உதவி செய்து இருந்தால் ரூ.25,000 இரண்டாக பிரித்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது செயலை பாராட்டி சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்குவோருக்கு உதவி செய்ய முன்வர பலர் தயங்குவது முக்கிய காரணம், அதன்பின் சட்ட நடவடிக்கைளில் பங்கேற்க வேண்டிவருமே என்கிற பயம் தான். இதனை கருத்தில் கொண்டு, அவ்வாறு உதவி செய்பவர்கள் பொது மற்றும் குற்றவியல் பொறுப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும் வகையில் புதிய ரா-வீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மோட்டார் வாகன சட்டம் 2019இன் பிரிவு 134ஏ-இன் கீழ் சட்டமும் உள்ளது. மேலும், விபத்து குறித்து காவல் நிலையத்தில் முதல் குற்றறிக்கை தாக்கல் (FIR) செய்ய வேண்டும் என்றும் அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால், உதவி செய்பவர்கள் தங்களது சுய விபரங்களை அளிக்க வேண்டும் என்றுகூட கட்டாயம் இல்லை.
இவ்வளவு ஏன்... விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதி செய்துவிட்டு அவர் கண்விழிக்கும் வரையில் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. விபத்திற்கு சாட்சியாக இருக்க விரும்பினால், அதுகுறித்த தனது கருத்தை தெரிவிக்க சாட்சியாளரே இடத்தையும், நேரத்தையும் தேர்வு செய்யவும் புதிய ரா-வீர் திட்டம் வழிவகுக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாட்டின் மோட்டார் வாகன துறை வளர்ச்சி காண்பதற்கு விபத்தில்லா போக்குவரத்து அவசியமாகும். அப்போதுதான் மக்களுக்கு மோட்டார் வாகனங்கள் மீதும், அவற்றை வாங்குவது குறித்தும் நம்பிக்கை வரும். ஆதலால், மத்திய அரசின் இந்த புதிய திட்டம் பாராட்டுக்குரியதே. இதன் மூலமாக இந்தியாவில் சாலை விபத்துகளினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications